கட்டமைப்புகளில் கவனிக்க வேண்டிய பசுமை விதிகள்


கட்டமைப்புகளில் கவனிக்க வேண்டிய  பசுமை விதிகள்
x
தினத்தந்தி 19 Aug 2017 5:15 AM IST (Updated: 18 Aug 2017 7:33 PM IST)
t-max-icont-min-icon

தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் உள் கட்டமைப்பில் வரவேற்பறை, சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கையறை, குளியலறை, கழிவறை, சேமிப்பறை, பூஜை அறை போன்ற பல்வேறு அறைகள் இருக்கும்.

னி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் உள் கட்டமைப்பில் வரவேற்பறை, சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கையறை, குளியலறை, கழிவறை, சேமிப்பறை, பூஜை அறை போன்ற பல்வேறு அறைகள் இருக்கும். சம்பந்தப்பட்ட அறைகளின் பயன்பாடுகளுக்கு ஏற்ற முறைகளில் வெப்பம், காற்று மற்றும் வெளிச்சம் ஆகியவை கிடைக்கும்படி அறைகளின் இட அமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை பசுமை வீடுகளுக்கான விதிமுறைகளாகவும் கருதலாம்.

1. பகல் நேரங்களில் வரவேற்பறையில் சூரிய வெளிச்சம் மற்றும் வெளிக்காற்று உள்ளே வரும் வகையில் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய சுவர் பகுதிகளில் ஜன்னல்களும், கிழக்கு சார்ந்த தென்திசை சுவரில் சமையலறைக்கான ஜன்னல்களும், படுக்கை அறைகளுக்கான ஜன்னல்கள் மேற்கு மற்றும் தெற்கு சார்ந்த பகுதிகளிலும் அமைப்பது சரியாக இருக்கும்.

2. பொதுவாக, கட்டிடங்களின் திசையமைப்பு சதுரம் அல்லது செவ்வகமாக அமையலாம். செவ்வக வடிவத்தில் கட்டிடங்கள் அமையும்போது கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்டவை மற்றும் வடக்கு–தெற்கு திசைகளில் நீளம் கொண்டவை என்ற இரண்டு விதங்களில் அமையும். வடக்கு–தெற்கு திசைகள் நீளமாக உள்ள கட்டமைப்புகளில் சூரியனின் பாதைக்கு ஏற்ப நாள் முழுவதும் இயற்கையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும். கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்ட கட்டமைப்புகளில் இதர அமைப்புகளுக்கு ஏற்ற வகையில்தான் வெளிச்சமும் காற்றும் வரும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை போன்ற கடற்கரையை ஒட்டிய நகரங்களில் பிற்பகல் வேளைகளில் கிழக்கிலிருந்து வீசும் கடற்காற்று அதிகமாக, கட்டிட அமைப்புகளுக்குள் நுழையும் விதத்தில் கச்சிதமான திசையமைப்பு மற்றும் ஜன்னல்களை வடிவமைத்துக்கொள்ளலாம்.

3.வெளிப்புறத்தில் உள்ள தட்பவெப்ப மாற்றங்கள் கட்டமைப்புகளுக்குள் நுழையாதவாறு தடுக்க மரங்கள் மற்றும் தாவர வகைகளை வளர்க்கலாம். கூரையில் மாடித்தோட்டம் அமைக்கும்போது குறைந்த அளவு தண்ணீர் பயன்பாட்டில், பசுமையாக வளரக்கூடிய தாவர வகைகளையும், வேர்கள் கட்டிட அடித்தளத்திற்கு சேதம் ஏற்படுத்தாத வகைகளையும் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

4. வெப்ப பாதிப்பை தடுக்கும் கண்ணாடிகளை ஜன்னல்களுக்கு பயன்படுத்தலாம். அதிக வெப்பம் நிலவும் இடங்களில், கான்கிரீட் மற்றும் சிமெண்டு அடிப்படையிலான பிளாக்குகள் கொண்டு சுவர்கள் அமைக்கப்படாமல், மண் அடிப்படையிலான செங்கற்கள் பயன்படுத்தலாம். சிமெண்டு கலவை பூச்சுக்கு பதிலாக, சுண்ணாம்பு கலவை பூச்சு செய்யப்படுவதும் பாதுகாப்பானது.

5. இரவு நேரங்களில் படுக்கையறைகளுக்கு இயற்கையான காற்றோட்டம் கிடைக்கும் வகையில் ஜன்னல் அமைப்புகள் இருந்தால், மின்விசிறிகளின் தேவை குறைந்து மின்சேமிப்புக்கு வாய்ப்பாக அமையும். புகை, வெப்பக்காற்று, அசுத்தக் காற்று ஆகியவை சுத்தமான காற்றை விட குறைந்த எடை கொண்டதால், அறைகளின் மேல் மட்டத்தில் தங்கிவிடாமல் தடுக்க, கூரைகள் மற்றும் சுவரின் மேல்மட்டத்தில் தக்க புகை போக்கிகள் மற்றும் காற்று போக்கிகள் அமைப்பது நல்லது.

6. சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை தடுக்கும் வகையில், வெளிப்புற சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள திறப்புகள் அனைத்திற்கும் போதிய அளவுகளில் ‘சன் ஷேடுகள்’ அமைக்கப்பட வேண்டும்.

7. இயற்கையாய் கிடைக்கும் சூரியசக்தி மற்றும் காற்று விசை மூலம் வீடுகளின் தேவைக்கேற்ப மின்சாரத்தை தயாரிக்கும் வகையில், கூரைகளின் மீது சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் காற்றாடிகள் பொருத்தப்பட்டு, மின்சார பயன்பாட்டை குறைக்கலாம்.

8. மழைநீர் சேகரிப்பு முறையை பின்பற்றி நிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீர் உள்நுழைய முடியாத மேற்பரப்பு மூடப்பட்ட நிலப்பகுதிகளிலிருந்தும், கூரைகளிலிருந்தும் மழைநீர் தக்க குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, ஆழ்துளைகள் மூலம் நிலத்தினுள் செலுத்துவது அவசியமானது.

9. கட்டுமான பணிகள் நடக்கும் சமயங்களில், பணியிடத்துக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் வாகன பயன்பாடு குறைந்து எரிபொருள் பயன்பாடு குறைவதோடு, காற்று மாசுபடுவதும் குறிப்பிட்ட அளவு தடுக்கப்படுகிறது.

Next Story