அறைகளுக்கு இடையில் அமைக்கப்படும் நவீன சுவர்கள்


அறைகளுக்கு  இடையில்  அமைக்கப்படும்  நவீன  சுவர்கள்
x
தினத்தந்தி 25 Aug 2017 9:30 PM GMT (Updated: 25 Aug 2017 9:31 AM GMT)

மேலை நாடுகளில் பழக்கத்தில் இருந்துவந்த எம்.பி.எஸ் என்ற மாடுலர் பேனல் சிஸ்டம் என்ற முறையானது நமது நாட்டில் சென்னை போன்ற பெரு நகரங்களில் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலை நாடுகளில் பழக்கத்தில் இருந்துவந்த எம்.பி.எஸ் என்ற மாடுலர் பேனல் சிஸ்டம் என்ற முறையானது நமது நாட்டில் சென்னை போன்ற பெரு நகரங்களில் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. செங்கல், சிமெண்டு போன்ற வழக்கமான முறைகளுக்கு மாற்றாகவும், எளிதில் கட்டமைக்கக்கூடியதாகவும் இருப்பதோடு, அழகிய தோற்றம் தருவதாகவும் இருப்பதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இப்போது உபயோகப்படுத்தப்படுகிறது. அவை பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

‘பிராஸ் வால் பேனல்ஸ்’

பித்தளை என்பது செப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய உலோகங்களின் கலவையாகும். சற்றே விலை அதிகமாக இருந்தாலும் பூஜையறை தடுப்புகள் மற்றும் அலுவலக அறைகளுக்கான தடுப்புகள் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இதை சொல்லலாம். பல்வேறு டிசைன்களில் கிடைப்பதோடு இரும்பு அல்லாத உலோகமாக இருப்பதால் துரு பிடிக்கும் தன்மை இல்லாதது இதன் சிறப்பாகும்.

‘கார்விங் சான்ட்ஸ்டோன் வால் பேனல்ஸ்’

மணற்கல் என்று சொல்லப்படும் ‘மார்பிள்’ வகையை சார்ந்த இவை பெரிய பட்ஜெட் வீடுகளுக்கானது. பெரும்பாலும் பழுப்பு வண்ணத்தில் இவை இருப்பதோடு அழகிய பலவித வடிவங்களை செதுக்குவதற்கு ஏற்றவாறும் இருக்கிறது. கண்கவர் ஓவியங்களை இவற்றில் செதுக்கி வரவேற்பறைகளில் வைத்தால் அட்டகாசமான தோற்றம் கிடைக்கும். விலைதான் கொஞ்சம் ‘காஸ்ட்லியாக’ இருக்கும்.

‘ஏரோகான் வால் பேனல்’

விலை குறைந்ததாக இருப்பதால் குறுக்கு சுவர்கள் அமைக்க இவ்வகை ‘பேனல்கள்’ வசதியாக இருக்கும். நெருப்பு மற்றும் நீரால் பாதிப்புகள் அடையாமலும், ‘சவுண்டு புரூப்’ ஆகவும், கரையான்களால் அரிக்கப்பட முடியாத தன்மை பெற்றதாக இருப்பதாலும் இவை பயன்படுத்த எளிதானதாக இருக்கிறது.

‘வேவ் பேனலிங்’

படுக்கையறைகள், வரவேற்பறைகள் மற்றும் ‘ஹால்’ ஆகியவற்றின் அழகை அதிகப்படுத்திக்காட்டும் வகையில் இவ்வகை ‘பேனல்கள்’ இருக்கின்றன. வழக்கமான மூலப்பொருட்களால் அலைஅலையான வடிவத்தில் அழகாக ‘பினிஷிங்’ செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. எடை குறைவானதாகவும், பராமரிப்புகள் அதிகமாக இல்லாமலும் இருப்பதால் ‘இன்டீரியர் டெகரேட்டர்களின்’ கவனத்தை கவருவதாக இருக்கிறது.

‘டிரான்ஸ்லூசன்ட் அக்ரிலிக் அலபாஸ்டர் பேனல்’

இவ்வகை ‘பேனல்கள்’ வீடுகளில் பயன்படுவதை விடவும் வணிக வளாகங்களில் அதிகமாக பயன்படுகின்றன. பெயருக்கு தகுந்தாற்போல வெளிச்சம் ஊடுருவி செல்வதுபோல இருப்பதால் இவற்றைக்கொண்டு கண்ணை கூசாத ‘இன்டீரியர்’ அமைப்பை உருவாக்கலாம். பல வண்ணங்களில் கிடைப்பதால் ‘சீலிங்’ உட்பட ‘சைடு வால் பேனல்கள்’ ஆகியவற்றை அமைத்து மிதமான வெளிச்ச சூழலை உண்டாக்கலாம்.

‘டிசைனர் வால் பேனல்’

வீடுகளை அலங்கரிப்பதில் இவ்வகை ‘பேனல்கள்’ முக்கியமான இடத்தில் இருக்கின்றன. வேண்டிய வடிவங்களில் கிடைப்பதால் சமையலறை, படுக்கையறை, ஹால் போன்ற வீடுகளின் பல பகுதிகளையும் அழகுபடுத்த இயலும். வழக்கமான கட்டுமான பொருட்கள்கொண்டு இவை தயாரிக்கப்படுவதோடு விலையும் சற்று குறைவாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

‘பயர் புரூப் வால் பேனல்’

பெயருக்கு ஏற்றபடி நெருப்பிலிருந்து பாதுகாக்கும்படி இவை தயார் செய்யப்படுகின்றன. ‘கால்சியம் சிலிகேட்’ என்ற மூலப்பொருள் மூலம் தயார் செய்யப்படுவதால் ‘மார்பிள்’ பதித்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். வெப்பத்தின் தாக்குதல் இருக்கும் இடங்களில் அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் ‘மெட்டீரியலாக’ இவை விளங்குகின்றன.

Next Story