நகர்த்தும் தொழில்நுட்பம் கொண்ட வீடு


நகர்த்தும்  தொழில்நுட்பம்  கொண்ட  வீடு
x
தினத்தந்தி 26 Aug 2017 3:30 AM IST (Updated: 25 Aug 2017 3:32 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அமைப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் அவற்றின் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு அமைக்கப்பட்ட அஸ்திவாரங்களின் மீது வலுவாக எழுப்பப்படுகின்றன.

ட்டுமான அமைப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் அவற்றின் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு அமைக்கப்பட்ட அஸ்திவாரங்களின் மீது வலுவாக எழுப்பப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் உள்ள மண்ணின் பளு தாங்கும் தன்மைக்கேற்ப அஸ்திவார அமைப்புகளும் வெவ்வேறு விதங்களாக இருக்கின்றன.

புதிய முறை

கட்டுமான துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஒருவரால் அஸ்திவார அமைப்பு இல்லாமல், நகர்த்திக்கொள்ளும் விதத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் தனது சொந்த வீட்டை அமைக்க மேற்கண்ட தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளார். அவர் 22 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமான

தொழில்நுட்பம்

பொதுவாக, மேலை நாடுகளில்தான் வேண்டிய இடத்துக்கு வீடுகளை நகர்த்தக்கூடிய வீடுகளை அமைத்து, அவற்றை தொழில்நுட்ப ரீதியாக பரிசோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சியாக இது கருதப்படுகிறது.

சோதனை முயற்சியாக அமைக்கப்பட்ட அவரது வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட அவரது வீடு கட்டுமானத்துறையால் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.   

அஸ்திவாரம்

அமைத்த விதம்

கட்டுமான துறையில் சாகுல் அமீது பெற்ற பல்லாண்டுகள் அனுபவத்தை அடிப்படையாக வைத்து வழக்கமான முறையில் அடித்தளம் அமைக்காமல் ‘ராப்ட் புட்டிங்’ (மேட் புட்டிங்) முறையில் நகரக்கூடிய வீடாக அமைத்துள்ளார்.  அதாவது ஒட்டு மொத்த வீட்டின் அடித்தள பரப்பளவை விடவும் சற்று அதிகமாக அமைக்கப்பட்ட கான்கிரீட் பரப்பில் கிடைமட்டம் மற்றும் செங்குத்து வசம் ஆகிய நிலைகளில், குறுகிய இடைவெளிகளில் பில்லர்கள் மற்றும் பீம்கள் அமைக்கப்பட்டு அதன் மீது வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்த முறையில் அஸ்திவாரம் அல்லது பில்லர்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்படுவதில்லை. உறுதியற்ற மண் கொண்ட நிலப்பரப்புகளில் இந்த முறையை கடைப்பிடிப்பது அஸ்திவார தொழில்நுட்பத்தில் ஒன்றாகவும் உள்ளது.

வீட்டின் அளவுகள்

மேற்கண்ட புதிய முயற்சியில் அமைக்கப்பட்ட வீடு 1080 சதுர அடியில் 90 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட் தளத்தின் மீது தூண்களை அமைத்து 36 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட வீட்டை அவர் வடிவமைத்துள்ளார்.

இரண்டு தளங்கள் கொண்ட வீட்டில் கீழ் தளத்தில் 3 படுக்கை அறைகளோடு, வரவேற்பறை மற்றும் சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 2 படுக்கை அறைகளோடு, வரவேற்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சிலாப் மீது கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை சிலாப் பகுதிக்கு கீழ்ப்புறத்தில் சக்கரங்களை பொருத்தி தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ள முடியும்.

மாணவர்கள் வருகை

அந்த பகுதிகளில் அமைந்துள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளிலிருந்து பல மாணவர்கள் வந்து இந்த வீட்டின் அமைப்பை பற்றி விசாரித்து செல்கின்றனர். சாகுல் அமீது இந்த வீடு அமைக்கப்பட்ட விதம் பற்றி சில கல்லூரிகளுக்கே சென்று மாணவர்களுக்கு விளக்கம் அளித்ததாகவும், பூகம்பம் மற்றும் மழை வெள்ளம் போன்ற இயற்கை காரணங்களால் இவ்வகை வீடுகள் பாதிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story