அலுவலக பணிகளுக்கேற்ற வீட்டின் உள் கட்டமைப்புகள்


அலுவலக  பணிகளுக்கேற்ற  வீட்டின்  உள்  கட்டமைப்புகள்
x
தினத்தந்தி 26 Aug 2017 4:00 AM IST (Updated: 25 Aug 2017 3:35 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய நாகரிக வாழ்வில் அலுவலக பணிகளும் நவீன மயமாகி விட்டன. இதன் பொருட்டு அலுவலக வேலை நேரம் மற்றும் திறம் ஆகியவற்றின் தன்மைகள் மாறிவிட்டன.

ற்போதைய நாகரிக வாழ்வில் அலுவலக பணிகளும் நவீன மயமாகி விட்டன. இதன் பொருட்டு அலுவலக வேலை நேரம் மற்றும் திறம் ஆகியவற்றின் தன்மைகள் மாறிவிட்டன. ‘வொர்க் அட் ஹோம் ஆப்‌ஷன்’ என்ற முறையில் பலரும் தங்கள் வீடுகளிருந்து பணி புரிந்து வருகிறார்கள். தற்போதுள்ள இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உதவியுடன் வீட்டில் அலுவலக பணிகளை செய்வதற்கு தகுந்த உள் கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்வது அவசியம். அவற்றை பற்றி நிபுணர்கள் தரும் குறிப்புகளை காணலாம்.

வாஸ்து அமைப்பு

பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்போதே அவற்றில் அலுவலக பணிகளுக்கான தனி அறைகளை திட்டமிட்டு அமைப்பது இப்போதைய ‘டிரெண்டாக’ உள்ளது. குறிப்பாக, பலரும் வாஸ்து சாஸ்திர ரீதியாக வீடுகளில் அலுவலக அறைகள் அமைக்கப்படுவதை விரும்புகின்றனர். வடமேற்கில் அமைக்கப்பட்ட அறை அல்லது படுக்கையறையை அலுவலக பணிகளுக்காக பயன்படுத்துவது சிறப்பு என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

சிறிய வீடுகள்

ஒரு படுக்கை மட்டும் கொண்ட சிறிய வீடுகளாக இருப்பினும், அறையின் ஒரு பகுதியை சிறிய தடுப்பு அல்லது திரை அமைத்து பணி புரிவதற்கு பயன்படுத்தலாம். இயற்கை வெளிச்சம் அறைகளுக்குள் வருகின்ற அளவுக்கு அந்த இடமானது மனதில் புத்துணர்வை உண்டாக்குவதாக இருக்கும். குறிப்பாக, ஜன்னல் மற்றும் ஒன்று அல்லது இரண்டு பசுமையான செடிகளை தொட்டியில் வைத்து பராமரிப்பதால் கண்களுக்கு இதமாக இருக்கும்.

வெவ்வேறு இடங்கள்

வீடுகளின் முன்புறம் உள்ள வரவேற்பறையின் ஒரு பகுதி அல்லது மற்ற இடங்களை நவீன தடுப்பு சுவர்களை கொண்டு அறையாக அமைத்தும் பயன்படுத்தலாம். குறிப்பாக மாடிப்படிகளுக்கு கீழ்ப்புறம் அமைந்த இடத்தை சரியாக பயன்படுத்தி சிறிய அளவிலான அலுவலக அறையை அமைத்துக்கொள்ள முடியும்.

பர்னிச்சர்கள்

அமரும்போது முதுகு வலி ஏற்படுத்தாத நாற்காலிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அலுவலக அறைகளுக்கான மேஜைகள், எழுது பொருட்கள், மேஜை விளக்கு, கடிகாரம், நாட்காட்டி, பைல்கள் வைக்கும் இடம் என்று அவசியமானவற்றை சரியாக அமைத்துக்கொள்வது முக்கியம். இடத்துக்கு ஏற்ப பொருந்தக்கூடிய அளவுகள் கொண்ட ரெடிமேடு அலமாரிகள் சந்தையில் கிடைக்கின்றன. தேவைக்கேற்ற மின்சார பிளக்குகளை கைக்கெட்டும் தொலைவில் பொருத்துவது அனைத்திலும் முதல் வேலையாகும்.

‘மார்க்கர் போர்டு’

அலுவலக அறைகளில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை அமரும் இடத்துக்கு எதிராக மாட்டி, அதில் அன்றைய பணிகள் அல்லது வாராந்திர பணிகள் ஆகியவற்றை மார்க்கர் பேனாவில் குறித்து வைக்கலாம். ‘லாப் டாப் ஸ்டிக்கி நோட்’ மூலமும் மேற்கண்ட திட்டத்தை பின்பற்றலாம்.

 அறையின் வண்ணம்

பணிகளை சிறப்பாக செய்து முடித்திட அறையின் ‘லைட் செட்டிங்’ மற்றும் ‘பெயிண்டிங்’ ஆகியவை கண்களை உறுத்தாமல் மென்மையாக இருப்பது முக்கியம். அடர்ந்த நிறங்கள் மனதின் செயல் திறனை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. அதனால், லைட் கலர்களும், பரவலான வெளிச்சம் கிடைக்கும் மின் விளக்குகள் செட்டிங்கும் அறைக்குள் அமைத்துக் கொள்ளவேண்டும்.

Next Story