உங்கள் முகவரி

பட்ஜெட்டுக்கு உகந்த நவீன கதவுகள் + "||" + Optimized for budget Modern doors

பட்ஜெட்டுக்கு உகந்த நவீன கதவுகள்

பட்ஜெட்டுக்கு  உகந்த  நவீன  கதவுகள்
வீட்டின் நுழைவாசல் கதவுகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டாலும், அழகு மற்றும் கண்கவர் வேலைப்பாடுகள் இருப்பது போலவும் வடிவமைக்கப்படுகின்றன.
வீட்டின் நுழைவாசல் கதவுகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டாலும், அழகு மற்றும் கண்கவர் வேலைப்பாடுகள் இருப்பது போலவும் வடிவமைக்கப்படுகின்றன. முக்கியமாக தலைவாசல் தரமான, நல்ல மரத்தில், அழகான வேலைப்பாடுகளுடன் பொருத்தப்படுவது வழக்கம். வீட்டிலுள்ள அனைத்து அறைகளுக்கும் ஒரே மாதிரியான கதவுகள் பொருத்தப்படுவதில்லை.

பல்வேறு வகைகள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் கதவுகள் பல்வேறு மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மரக்கதவு, கண்ணாடி கதவு, பிளைவுட் கதவு, சிமெண்டு கதவு, இரும்பு கதவு, பைபர் மற்றும் பி.வி.சி கதவு என பலவகை கதவுகள் உள்ளன. கால மாற்றத்திற்கு தக்கவாறு கதவுகள் அமைப்பிலும் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக மரம் மற்றும் இரும்பு ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், பட்ஜெட் மற்றும் பொருத்துவதில் உள்ள எளிமை ஆகிய காரணங்களுக்காக மாற்று மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட கதவுகள் இப்போது பரவலான பயன்பாட்டில் இருக்கின்றன.  

பட்ஜெட் குறைவு

வீடுகளுக்கு மரத்தினால் ஆன கதவுகளும், அலுவலகங்களுக்கு ஸ்டீல் கதவுகளும் பயன்படுத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த இரண்டு வகை கதவுகளின் பட்ஜெட் காரணமாக பைபர் மற்றும் ரீ–இன்போர்ஸ்டு பிளாஸ்டிக் போன்ற மாற்று பொருட்களால் செய்யப்பட்ட கதவுகள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரிஜினல் மரக்கதவுகளை போன்று தோற்றமளிக்கும் இந்த கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் ‘பினிஷிங்’ கொடுத்து அழகாக மாற்ற முடியும். குறிப்பாக, ‘பைபர்’ வகை கதவுகள் கதவுகள் முற்றிலும் ‘வாட்டர் புரூப்’ தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. வேவ்வேறு வகை கதவுகள் பற்றிய தகவல்களை காணலாம்.

கனமான மரக்கதவுகள்

அதிக உபயோகத்தில் உள்ள கதவு வகைகளில் மரங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. மரங்களின் விலை கூடுதலாக இருப்பதால், வீட்டின் தலைவாசலுக்கு மட்டுமாவது மரக்கதவுகள் பொருத்தப்படுகின்றன. வெளிப்புற இரைச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பாரம்பரியம் ஆகிய காரணங்களுக்காக வலுவான மரக்கதவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அலுமினிய கதவுகள்

எடை குறைவு, உறுதி மற்றும் நீடித்த பயன்பாடு ஆகிய காரணங்களுக்காக உள்ளறைகளின் கதவுகளுக்கு அலுமினிய கதவுகள் பொருத்தப்படுகின்றன. ஈரப்பதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ள வெளிப்புற கதவுகளுக்கு இவை சரியான தேர்வாக கூறப்படுகிறது.

‘ஸ்டீல்’ கதவுகள்

வழக்கமான கதவுகளுக்கும் அழகாக பெயிண்டிங் செய்யப்பட்ட ஸ்டீல் கதவுகள் உபயோகிப்பது இப்போது வழக்கத்தில் உள்ளது. பாதுகாப்புக்கு உதவியாக இருந்தாலும் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இருக்காது. கிரில் கேட்டுகளுக்கு ஸ்டீல் போன்று பயன்படும் வேறு மாற்றுப்பொருள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைபர் கிளாஸ்’ கதவுகள்

இவ்வகை கதவுகள் புதிய வகையாகவும், நவீன வடிவத்திலும் காட்சி தருகின்றன. மேலும் உறுதியாகவும், வெளிப்புற இரைச்சல்கள் மற்றும் வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் வராமல் தடுப்பதோடு, தண்ணீரால் பாதிக்கப்படாத தன்மையும் கொண்டது. பைபர் கிளாஸ் கதவுகள் குறிப்பிடத்தக்க அளவில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருப்பதால், உபயோகிக்க எளிதாக இருக்கும்.

கண்ணாடி கதவுகள்

கண்கவரும் தோற்றத்துடன் இருப்பதோடு, வெளிப்புற தட்பவெப்ப நிலைகள் வீட்டுக்குள் வராமல் தடுப்பவை இவ்வகை கதவுகள். தக்க அளவு வலிமையுடன் இருப்பதோடு, பெரும்பாலும் அலுவலக பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வகை கதவுகள் கட்டமைப்பின் முன்புறத்தில் அமைப்பது அழகாக இருக்கும்.   

பி.வி.சி கதவுகள்

பாலி வினைல் குளோரைடு என்று குறிப்பிடப்படும் இவ்வகை கதவுகள் இப்போது பரவலாக பயன்பாட்டில் இருக்கின்றன. பல வண்ணங்கள், டிசைன்கள், குறைந்த எடை, நீடித்த உழைப்பு மற்றும் துருப்பிடிக்காத தன்மை ஆகிய அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கின்றன. பட்ஜெட்டுக்கு உகந்த கதவுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.