கட்டுமான அமைப்புகளை கட்டுப்படுத்தும் சக்திகள்


கட்டுமான அமைப்புகளை கட்டுப்படுத்தும் சக்திகள்
x
தினத்தந்தி 16 Sep 2017 6:45 AM GMT (Updated: 16 Sep 2017 6:00 AM GMT)

பொதுவாக, கட்டுமான பணிகளை தொடங்கும் சமயத்தில் பூமி பூஜை உள்ளிட்ட இதர சடங்குகளை செய்வது அனைத்து இடங்களிலும் உள்ள வழக்கமாகும்.

பொதுவாக, கட்டுமான பணிகளை தொடங்கும் சமயத்தில் பூமி பூஜை உள்ளிட்ட இதர சடங்குகளை செய்வது அனைத்து இடங்களிலும் உள்ள வழக்கமாகும். தொடர்ச்சியாக வளர்ந்து வரும் கட்டுமான தொழில்நுட்பங்கள், கட்டுமான பணிகளில் நவீன இயந்திரங்களின் உதவி மற்றும் அறிவியல் ரீதியான மற்ற தகவல்கள் போன்ற முறைகளால் கட்டமைப்புகளின் பணிகள் விரைவாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வருகின்ற முன்னேற்றமான சூழல் இன்று அமைந்துள்ளது.

பூமி பூஜை

இருந்தாலும், பழைய சம்பிரதாயமான வாஸ்து அல்லது பூமி பூஜைகள், கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து இடங்களிலும் செய்யப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படும் அத்தகைய பூஜைகளுக்கு மையமாக உள்ள சக்திகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

மூன்று சக்திகள்

வாஸ்து சாஸ்திர ரீதியாக அஷ்ட திக்குகள், அதன் அதிபதிகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் ஆகிய சக்திகள் பூமியில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடம், மனை அல்லது குடியிருப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தி அதன் தன்மைகளை நிர்ணயிப்பதாக ஐதீகம்.

அஷ்ட திக்குகள்

கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதான திசைகள் நான்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய கோண திசைகள் நான்கு ஆகிய எட்டு திசைகள் வாஸ்துவில் முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.

கிரக சக்தி

மனை அல்லது வீடுகளின் இயல்பான தன்மைகளை நிர்ணயிப்பதில் சூரியன் முதலான நவக்கிரகங்களும் பங்கு வகிப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பொதுவாக, மனைக்கான தலைவாசல் உள்ளிட்ட இதர அமைப்புகளை ஒருவரது ராசியை வைத்து முடிவு செய்யப்படுவது வழக்கம்.

பஞ்சபூத சக்திகள்

மேற்கண்ட இரண்டு சக்திகளை தவிரவும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகளின் பாதிப்பும் மனை அல்லது வீடுகளை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. வடகிழக்கில் நீர், தென்கிழக்கில் நெருப்பு, தென்மேற்கில் நிலம், வடமேற்கில் வாயு மற்றும் மையத்தில் ஆகாயம் என்ற அமைப்பில் அவை இயங்கி வருவதாக ஐதீகம்.

நவக்கிரக சக்திகள்

மழை, வெயில் மற்றும் காற்று ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து, ஒன்பது கிரகங்களின் கதிர்வீச்சை எதிர்கொண்டு, பாதுகாப்பதால் வீட்டையும் ஒரு கிரகமாக பாவித்து கிரகப்பிரவேசம் செய்வது வழக்கம். ஒன்பது கிரகங்களும் ஒரு வீட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி செய்வதாக ஐதீகம். ஒருவரது ஜனன ஜாதகத்தில் சம்பந்தப்பட்ட கிரகத்தில் நிலையை வைத்து அவரது வீட்டின் குறிப்பிட்ட பகுதியின் நிலையை அறிந்து கொள்ள இயலும் என்பதை முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கட்டமைப்பின் பகுதிகள்

பூமி அல்லது மனை என்று சொல்லப்படும் காலியிடத்தையும், செங்கலையும் ஆளும் கிரகமாக செவ்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது பிறப்பு நேரப்படி செவ்வாய் பலமில்லாமல் இருந்தால் மனை அமைவதில் சிரமங்கள் எற்படலாம். ஒரு கட்டமைப்பின் அஸ்திவாரத்துக்கு பயன்படும் கருங்கல் ராகு என்ற கிரகத்தை பிரதிபலிக்கக்கூடியதாகும். பில்லர்களில் பயன்படும் இரும்பு கம்பிகள் மற்றும் தூண்களின் நிலையை நிர்ணயிப்பது சனி என்ற கிரகமாகும்.

கட்டுமான பணிகளுக்கான முக்கிய மூலப்பொருளான மணலை குறிப்பிடுவது சந்திரன் என்ற கிரகமாகும். சிமெண்டு, ஜிப்சம் உள்ளிட்டவற்றை குறிப்பிடுவது சுக்கிரன் ஆகும். ஒரு வீட்டின் தலைவாசல் மற்றும் அதன் அமைப்பை நிர்ணயிப்பது குரு என்ற கிரகமாகும். மேலும், ஒரு வீடு தெய்வீகமான அமைப்பில் இருப்பதற்கு கேது என்ற கிரக சக்தி அவசியமாகும். வீட்டின் உட்பகுதிகளில் நல்ல வெளிச்சமாக இருப்பதற்கு சூரியன் என்ற கிரகத்தின் பலம் அவசியமாகும். 

Next Story