அறை சுவர்களுக்கேற்ற கண்கவர் வண்ணங்கள்


அறை சுவர்களுக்கேற்ற கண்கவர் வண்ணங்கள்
x
தினத்தந்தி 16 Sept 2017 1:15 PM IST (Updated: 16 Sept 2017 11:58 AM IST)
t-max-icont-min-icon

மனிதர்கள் மூச்சு விடுவதுபோல கட்டமைப்புகளின் சுவர்களுக்கும் சுவாசம் இருப்பதாக கட்டுமான அறிவியல் தெரிவிக்கிறது. அதனால் தக்க பாராமரிப்புகளை மேற்கொண்டு சுவர்களை பராமரித்து வருவது அவசியம்.

னிதர்கள் மூச்சு விடுவதுபோல கட்டமைப்புகளின் சுவர்களுக்கும் சுவாசம் இருப்பதாக கட்டுமான அறிவியல் தெரிவிக்கிறது. அதனால் தக்க பாராமரிப்புகளை மேற்கொண்டு சுவர்களை பராமரித்து வருவது அவசியம். அதன் அடிப்படையில் சுவர்களுக்கு மேற்புற பூச்சாக டிஸ்டெம்பர் மற்றும் பெயிண்டு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் சுவர்கள் கண்கவர் நிறங்களில் பளிச்சிடுகின்றன. மேலும், சுவர்களுக்கான வண்ணங்களை தேர்ந்தெடுக்கும்போது ஒரு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இதமான வண்ணங்கள்


அறைகளின் உட்புற சுவர்களுக்கு பூசப்படும் பெயிண்டு வகைகள், வீட்டின் அழகுக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது மனதில் எழக்கூடிய எண்ணங்களிலும் அவற்றின் தாக்கம் உள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நமது சுற்றுப்புறங்களில் உள்ள மனதிற்கு இதம் தரும் வண்ணங்கள் கொண்ட வீடுகள் அல்லது அறைகளின் சுவர்கள் மனிதர்களின் உடல் மற்றும் மனதில் ஏற்படும் சிக்கல்களை விலக்குவதில் பங்கு வகிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

அமைதியான உணர்வுகள்

பொதுவாக, வீட்டின் உள்ளறைகளுக்கு வெளிர்நிற பச்சை அல்லது இளம்நீல நிறத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டிருப்பது மனதில் அமைதியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. மேலும், வீட்டு உபயோக பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் வரவேற்பறை மற்றும் சமையலறைகளில் ஐவரி அல்லது கிரீம் நிறங்களை பயன்படுத்தலாம். அந்த நிறங்கள் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கும் ‘மேட்சிங்காக’ இருப்பது குறிப்பிடத்தக்கது.

உற்சாகம் தரும்

குடும்ப உறுப்பினர்களின் அறைகள் எவை..? என்பதை பொறுத்து, அந்த அறைகளில் தேர்ந்தெடுத்த வண்ணங்களை பயன்படுத்தலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்த, அவர்கள் அறைகளில் வெளிர் நீலம் மற்றும் பிங்க் ஆகிய வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். கம்ப்யூட்டர், டி.வி. போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ள அறையில் குளிர்ச்சியான பசுமை நிறம் கச்சிதமாக இருக்கும்.

குட்டி பசங்களின் பெயிண்டு


குட்டி பசங்களின் அறைகளுக்கென்றே தனிப்பட்ட பெயிண்டு ரகங்கள் இருக்கின்றன. அவர்களது குறும்புகள் மற்றும் கோபத்தை குறைக்கும் தன்மை கொண்டதாக சொல்லப்படும் பிங்க் நிறத்தை அவர்கள் அறைகளில் பூசலாம். சுவரில் படம் வரைந்து விளையாடும் குழந்தைகள் அறைக்கு ‘சாக் போர்டு பெயிண்டு’ வகையை பூசி அவர்களை குஷியாக்கலாம். ஒளிரும் நட்சத்திரங்கள், மின்னும் ரயில், தேவதை பொம்மை ஆகியவற்றை படுக்கை அறையில் வரைவதற்கு என்றே ‘கிட்ஸ் எமல்ஷன்’ என்ற பெயிண்டு வகையும் சந்தையில் கிடைக்கிறது.

கலர் காம்பினேஷன்

வீடுகளுக்கு ஒட்டு மொத்தமாக கலர் காம்பினேஷன்கள் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனம் தேவைப்படும். பொதுவாக, வீடுகளுக்கான கலர் காம்பினேஷன்கள் அலுவலகங்களுக்கும், அலுவலகங்களுக்கான கலர் காம்பினேஷன்கள் வீடுகளுக்கும் பொருந்துவதில்லை. வீடுகளில் அதிகமான உபயோகம் காரணமாக அழுக்கு படியும் இடங்களை எளிதாக சுத்தம் செய்ய ‘சிந்தடிக் எனாமல்‘ வகை பெயிண்டு சரியான தேர்வாகும். அந்த வகைகளில் ‘ஆயில் பேஸ்டு’ வகைகளை விடவும் ‘வாட்டர் பேஸ்டு’ வகைகள் சிறப்பானவை.

எமல்ஷன் வகைகள்

உட்புற சுவர்களுக்கான சிறந்த பெயிண்டு ரகமாக ‘எமல்ஷன்’ வகை நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. அவர்களது கருத்துப்படி, டிஸ்டெம்பர், சிமெண்டு, ஆர்டினரி பெயிண்டு ஆகியவற்றை விட எமல்ஷன் வகைகள் சிறந்த ‘பினிஷிங்’ தருவதாக குறிப்பிடப்படுகிறது. அதிக அடர்த்தி மற்றும் எதிரொளிப்பு திறன் கொண்ட சிவப்பு நிறத்தை அறைகளின் சுவர்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கும்படி நிபுணர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

Next Story