வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் பூஜை அறை


வாஸ்து  சாஸ்திரம்  குறிப்பிடும் பூஜை அறை
x
தினத்தந்தி 23 Sept 2017 3:00 AM IST (Updated: 22 Sept 2017 4:25 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக, பூஜை அறை சதுர வடிவத்தில் அமைவது சிறப்பு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக, பூஜை அறை சதுர வடிவத்தில் அமைவது சிறப்பு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, நீளம், அகலம், உயரம் பரிமாணங்கள் சம அளவுகளில் இருப்பது உத்தமமான அமைப்பாக கருதப்படுகிறது. காரணம் சதுரமான அமைப்பில் நான்கு திக்குகளும் சம அளவு கொண்டதாக இருப்பதால் அதற்குள் ஏற்படும் இயல்பான சூழல், மூளை வெளிப்படுத்தும் அலை இயக்கங்களுக்கு இசைவானதாக அமைகின்றன. அதனால், ஆன்மிக ரீதியான வழிபாடுகள் நல்ல விதமாக அமைவது அறியப்பட்டுள்ளது.

அறை அமைப்பு

வெள்ளை மார்பிள் தரைத்தளம், சந்தனம், தேக்கு அல்லது செம்மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட அலமாரி உள்ளிட்ட இதர அமைப்புகள் மற்றும் வாசனை மிகுந்த சூழல் ஆகியவை தெய்வீக மனநிலைக்கு எளிதாக ஒருவரை எடுத்துச்செல்கின்றன. அழகிய சிற்பம், ஓவியம் போன்றவற்றில் விருப்பம் கொண்டவர்கள் பூஜை அறை சுவர்களில் தெய்வீக அழகு பொருந்திய சித்திரங்களை மாட்டி வைக்கலாம். குறிப்பாக, அந்த ஓவியங்களுக்கான ‘பிரேம்’ எனப்படும் சட்டங்கள் மரத்தால் மட்டும் அமைக்கப்பட வேண்டும்.

பூஜை செய்யும் மேடை

மரத்தால் செட்டப்பட்ட அழகிய பூஜை மேடை பார்ப்பதற்கு நல்ல தோற்றமும், கோயிலில் வழிபாடு செய்வதுபோன்ற உணர்வும் ஏற்படுத்தும். பிளவுகள் அல்லது வெடிப்புகள் இல்லாத நல்ல மரத்தால் மேடை அமைக்கப்பட வேண்டும். அதில், மரச்சட்டங்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுள் படங்களை வடக்கு அல்லது கிழக்கு நோக்கியவாறு வைக்கலாம். பூஜை அறையில் தெற்கு நோக்கியவாறு சுவாமி படங்களை வைப்பதும், தெற்கு நோக்கியவாறு அமர்ந்து பூஜை செய்வதும் தவறான முறைகளாக வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிகள் கொண்ட மேடை

அழகிய படிகள் கொண்டதாகவும் பூஜையறை மேடையை வடிவமைக்கலாம். படிகள் வண்ண மயமான ‘டைல்ஸ்’ அல்லது தேக்கு அல்லது செம்மரத்தால் அமைக்கப்படலாம். படிகள் ஒற்றைப்படையாக இருப்பதோடு, அதன் பக்கவாட்டில் மரம் அல்லது பி.வி.சி கொண்டு ‘பீடிங்’ செய்யப்பட்ட தடுப்புகளை அமைத்தால் ஏற்றும் தீபத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். அமர்ந்து பூஜையில் ஈடுபட இணைப்புகள் இல்லாத ஒரே மரப்பலகையால் செய்யப்பட்ட ஆசனத்தை வைத்துக்கொள்ளலாம்.     

சக்தி அலைகள்

பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டும். குறிப்பாக, ஈசானிய பகுதி அதற்கு ஏற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில், பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக உள்ளது. அதனால், அண்டவெளியிலிருந்து வரும் சக்தி அலைகள் சாய்மானமாக உள்ள ஈசானியம் என்ற வடகிழக்கு வழியாக நுழைகின்றன. சக்திகளின் தொடக்க முனையாக உள்ள ஈசானியத்தை இறைவனின் இடமாக வாஸ்து குறிப்பிட்டுள்ளது.

ஈசானியம் அவசியம்

வடகிழக்கு என்பது இறையருள் பெறுவதற்கான முதல் தரமான இடமாக கருதப்படுவதால், அந்த பகுதி முழுமையாக அடைபடாமல் பூஜையறை அமைக்கப்பட வேண்டும். பூஜை அறையின் மேற்கூரை, மற்ற அறைகளின் கூரைகளை விட சற்று தாழ்வாக இருக்கலாம். வடகிழக்கு திக்கில் அமைந்த வடக்கு பகுதி செல்வ வளத்துக்கான ஆதாரமாகவும், அதன் கிழக்கு பகுதி அறிவு சார்ந்த வளத்துக்கு ஆதாரமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சூரிய ஒளி தேவை

பூஜை அறைக்குள் காலை சூரியனின் ஒளி படிவது போன்ற அமைப்புகள் இருந்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். பொதுவாக, பூஜையறையின் மேற்கு அல்லது தெற்கு சுவரை சார்ந்தவாறு கடவுள் படங்கள் அல்லது சிலைகளை அமைத்து கொள்ளவேண்டும். அவரவர் குல தெய்வத்தை பிரதானமாக அங்கே அமைப்பது சிறப்பு என்பது வல்லுனர்கள் கருத்தாகும். குறிப்பாக சிலைகள் அல்லது பல்வேறு படங்களை பூஜை அறையில் வைப்பதற்கு முன்னர் தக்க பெரியவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவது முக்கியம் என்றும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Next Story