கட்டிட வலிமையில் கருங்கல் ஜல்லியின் பங்கு


கட்டிட வலிமையில் கருங்கல் ஜல்லியின் பங்கு
x
தினத்தந்தி 7 Oct 2017 5:02 PM IST (Updated: 7 Oct 2017 5:02 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட் கட்டுமானங்கள் நீடித்து உழைக்க சிமெண்டு, மணல், கருங்கல் ஜல்லி, நீர் ஆகியவற்றை தரமான நிலைகளில் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அடிப்படையாகும்.

கான்கிரீட் கட்டுமானங்கள் நீடித்து உழைக்க சிமெண்டு, மணல், கருங்கல் ஜல்லி, நீர் ஆகியவற்றை தரமான நிலைகளில் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அடிப்படையாகும். ஜல்லி வகைகளில் பொதுவாக 4.75 மில்லி மீட்டருக்கும் மேலான அளவு கொண்டவற்றை ஜல்லி என்றும், அதற்கு குறைவான அளவுள்ள கொண்டவை நுண் ஜல்லி என்றும் இந்திய தர நிர்ணய கழகம் (மிஷி:383-1970) குறிப்பிட்டுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்களில் பெரும்பகுதி இடத்தை பிடித்துக்கொள்ளும் கருங்கல் ஜல்லியின் வலிமை, வடிவம் மற்றும் அளவு ஆகியவை கான்கிரீட் அமைப்புகளின் இயல்பான தன்மையில் வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால், கருங்கல் ஜல்லியை கச்சிதமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தவேண்டும்.

தண்ணீர் தேவை

ஜல்லி வடிவம் மற்றும் அளவு ஆகியவை கான்கிரீட் தளங்களை எளிதாக அமைக்க உகந்த தன்மையை ஏற்படுத்துகின்றன. ஜல்லியின் அளவு சிறிதாக இருக்கும்பட்சத்தில் மொத்தமாக அதன் மேற்பரப்பளவு அதிகமாகும். அதன் காரணமாக, கான்கிரீட் கலவைக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். ஜல்லியின் அளவு பெரிதாக இருந்தால் மேற்பரப்பளவு குறைந்து, தண்ணீர் பயன்பாடு குறையும்.

ஜல்லி அளவு

தட்டையாகவும், நீளமாகவும் உள்ள ஜல்லியை விட, உருண்டையாகவும், கூம்பு வடிவிலும் இருக்கும் ஜல்லிகள் குறைந்த அளவு தண்ணீர் பயன்பாட்டில், கான்கிரீட்டுக்கு உகந்த தன்மையை அளிக்கின்றன. பொதுவாக, கான்கிரீட்டில் தண்ணீரின் அளவு குறையும்போது அதன் வலிமை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. அதனால், உருண்டையாகவும், சரியான கோணங்கள் கொண்டதாகவும் உள்ள ஜல்லியின் பயன்பாடு பாதுகாப்பானது.

சுத்தம் வேண்டும்

கான்கிரீட் அமைப்புக்கேற்ப சரியான விகிதாச்சாரத்தில் ஜல்லி சேர்க்கப்படுவதோடு, அவற்றின் அளவிலும் கவனம் வேண்டும். மேலும், செடி, புல் போன்றவை ஜல்லியில் கலந்து இருந்தால் அவற்றையும், களிமண், மண், சேறு, தூசிகள் ஆகியவை ஒட்டியிருந்தாலும் ஜல்லியை தண்ணீர் கொண்டு கழுவுவது அவசியம். கான்கிரீட் போடும் சமயங்களில் ஜல்லியை கழுவும் பட்சத்தில், அதன் ஈரப்பதம் காரணமாக கட்டிட உறுதி குறைய வாய்ப்புள்ளது. அதனால், கான்கிரீட் போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதை செய்து விடுவது நல்லது.

மணல் என்ற நுண் ஜல்லி

நுண் ஜல்லி என்று தொழில் நுட்ப ரீதியாக மணல் சொல்லப்படுகிறது. தரமான கான்கிரீட் மற்றும் சுவரின் மேற்பூச்சு கலவை ஆகியவற்றுக்கு சிமெண்டு மற்றும் இதர மூலப்பொருட்களின் தரம் ஆகியவற்றோடு மணலின் பங்கும் முக்கியமான ஒன்றாகும். கான்கிரீட் மற்றும் பூச்சுக்கலவையில் உள்ள நுண் ஜல்லியான மணலின் அளவு 4.75 மில்லி மீட்டர் அளவிற்கு கீழ் இருக்கவேண்டும் என்று இந்திய தர நிர்ணயக்கழகம் விளக்கியுள்ளது. 

Next Story