உங்கள் முகவரி

ஆவணங்களை பாதுகாக்கும் மின்னணு பெட்டகம் + "||" + Protecting documents Electronic archive

ஆவணங்களை பாதுகாக்கும் மின்னணு பெட்டகம்

ஆவணங்களை பாதுகாக்கும் மின்னணு பெட்டகம்
பெருமழை மற்றும் நெருப்பு ஆகிய இயற்கை பாதிப்புகளிலிருந்து, வீடு மற்றும் மனை ஆகியவற்றின் பத்திரங்களை பாதுகாக்கும் புதிய தொழில் நுட்பமான டிஜிட்டல் லாக்கர்
பெருமழை மற்றும் நெருப்பு ஆகிய இயற்கை பாதிப்புகளிலிருந்து, வீடு மற்றும் மனை ஆகியவற்றின் பத்திரங்களை பாதுகாக்கும் புதிய தொழில் நுட்பமான டிஜிட்டல் லாக்கர் (Digi Locker) என்ற முறை தற்போது அறிமுகமாகி உள்ளது.

காகிதம் வேண்டியதில்லை

டிஜி லாக்கர் எனப்படும் மின்னணு பெட்டகம் மூலம் ஆவணங்களை பத்திரமாக பாதுகாப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் சாத்தியமே. இணைய வழியில் (online Document Storage Facility) செயல்படும் சேமிப்பகமாக இந்த முறை உள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்களை பாதுகாப்பான முறையில் தேவைப்படும் நபருக்கு அல்லது குறிப்பிட்ட அலுவலகத்துக்கு அவற்றின் நகல்களை எளிதில் அனுப்பலாம். காகிதம் இல்லாத செயல்பாடு (Paperless Governance) என்ற அடிப்படையில் அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை தகவல்கள்

டிஜி லாக்கரை பயன்படுத்த விரும்புபவர்கள் அவர்களது ஆதார் எண், மொபைல் போன் எண் ஆகிய அடிப்படை தகவல்களை அளிக்கவேண்டும். ஆதார் எண் இல்லாத நிலையில் இருப்பிடத்தை உறுதி செய்யும் இதர ஆவணங்கள் தரப்படும் பட்சத்தில் டிஜி லாக்கர் வசதி அளிக்கப்படும்.

இணைய பெட்டகம்


www.digilocker.gov.in என்ற இணைய தளத்தில் முறையாக மேற்கண்ட தகவல்களை பதிவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP என்ற பாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பாஸ்வேர்டு பதிவுக்கு பின்னர், கேட்கப்படும் இதர விவரங்களையும் தெரிவித்த பிறகு கணக்கு துவக்கப்படும். பின்னர் சம்பந்தப்பட்டவரது பயன்பாட்டு பெயர் (User Name) பாஸ் வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி பெட்டகத்தை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதில் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, மின்னணு ஆவணங்களாக இணைய பெட்டகத்தில் வைக்கப்படும்.

தனிப்பட்ட கோப்புகள்

மேற்கண்ட வசதி மூலம் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் இதர சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, இணைய பெட்டகத்தில் கோப்புகளாக சேமித்து வைத்து கொள்ளமுடியும். ஆவணங்கள் அனைத்தும் தனித்தனி கோப்புகளாக சம்பந்தப்பட்ட ஆதார் எண்ணுக்கேற்ப வகைப்படுத்தப்படும்.

சுய விவரப்பக்கம்

மின்னணு பெட்டக பதிவுக்கு பிறகு, அதற்கான இணைய தளத்தில் சம்பந்தப்பட்ட கணக்குக்கான சுய விவரப்பக்கத்துக்கு சென்று புகைப்படம், பெயர், முகவரி மற்றும் ஆதார் அட்டை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் பார்வையிட முடியும்.

இலவச பதிவு

இந்த பெட்டகத்தில் 10 மெகாபைட் அளவில் கோப்புகளை இலவசமாக பதிவேற்றி வைத்துக்கொள்ள இயலும். அதன் பயன்பாட்டினை பொறுத்து அதன் அளவு அதிகரிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, பிற நபர்கள் இன்னொருவரது கோப்புகளை பார்ப்பதிலிருந்து தடுக்க தானியங்கி நேர பாதுகாப்பு (Auto Time Log Out) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பகிர்வது எளிது

அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து விதமான ஆவணங்களையும் இந்த முறையில் எளிதாக அனுப்பலாம். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அல்லது இதர இடங்களுக்கு அனுப்பலாம். எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் ஆவணங்களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற அடிப்படையில் அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனி நபர் அல்லது அவர் சம்பந்தபட்ட குடும்பத்தின் அனைத்து ஆவணங்களையும் தனித்தனியாக இந்த இணையதள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துக்கொள்ளலாம்.