தேசிய வீட்டு வசதி வங்கியின் வீடு – மனைகள் தர மதிப்பீடு


தேசிய வீட்டு வசதி வங்கியின்  வீடு – மனைகள் தர மதிப்பீடு
x
தினத்தந்தி 28 Oct 2017 12:30 AM GMT (Updated: 27 Oct 2017 1:23 PM GMT)

பெருநகர பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள சொத்தின் சந்தை விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவது வழக்கம்.

பெருநகர பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள சொத்தின் சந்தை விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவது வழக்கம். அதற்கான தகவல்களை தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank Residex)  இந்திய அளவில் புள்ளி விபரங்களை வழங்கி வருகிறது.

குறியீடுகள்

குறியீடுகளாக உள்ள அந்த தகவல்கள் மூலம், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள வீடு அல்லது மனைகளின் தற்போதைய விலை மற்றும் 3 மாதங்களுக்கு முந்தைய விலை நிலவரம் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குவது பற்றி முடிவு செய்ய இயலும். குறிப்பாக, தேசிய வீட்டு வசதி வங்கியின் ‘ரெசிடெக்ஸ்’ குறியீடுகள் அடிப்படையில் வீடு அல்லது மனையின் விலையை பேரம் பேசி நிர்ணயிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகாரப்பூர்வ மதிப்பீடு

தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் ‘என்.எச்.பி ரெசிடெக்ஸ்’ குறியீடு என்பது இந்திய அளவில் வீடு மற்றும் மனைகளின் விலைகளுக்கான அதிகாரப்பூர்வ மதிப்பீடாகும். இந்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் தேசிய வீட்டு வசதி வங்கி இந்த முறையை செயல்படுத்தி வருகிறது. 2007–ம் ஆண்டில்

தொடங்கப்பட்ட இந்த மதிப்பீட்டு முறை தக்க தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அட்டவணையாக தொகுத்து வழங்கப்படுகிறது.

ஏரியா நிலவரம்

மேற்கண்ட குறியீடுகள் மூலம் ஒரு வீடு அல்லது மனையின் ஒரு சதுர அடி விலை, சதுர மீட்டர் விலை, வீட்டின் சராசரி விலை மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள வீட்டு வாடகை நிலவரம் என பல அம்சங்களை கவனித்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.

இந்திய நகரங்கள்

இந்திய அளவில் 24 நகரங்களின் வீட்டு விலை மற்றும் வாடகை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், மேலும் 70–க்கும் மேற்பட்ட நகரங்களின் சந்தை நிலவரங்களை வெளியிட தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை திட்டமிட்டுள்ளன.

பல்வேறு குறியீடுகள்

வீட்டு விலை குறியீடு (Housing Price Indices), நிலத்தின் விலை குறியீடு (Land Price Indices)  மற்றும் கட்டுமான பொருட்கள் விலை குறியீடு (Building Materials Price Indices), மேலும் வீட்டு வாடகை குறியீடு (Hosing Rental Index)  ஆகியவற்றை உள்ளடக்கிய என்.எச்.பி ரெசிடெக்ஸ் புள்ளி விபரங்கள் மூலம் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிந்து செயல்பட இந்த முறை பெரிதும் உதவி செய்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.     

50 நகரங்களுக்கு விரிவு

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள ரெசிடெக்ஸ் வீட்டு விலை குறியீடு 50 நகரங்களுக்கு மட்டும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 37 நகரங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் இருக்கின்றன. கடந்த 2013–ம் ஆண்டை அடிப்படையாக வைத்து, 100 என்ற புள்ளியை அடிப்படையாக வைத்தும், மேற்கண்ட 50 நகரங்களுக்கும் குறியீட்டு முறை தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 4 முறை

ஒவ்வோர் ஆண்டும் 4 காலாண்டுகளுக்கு ஒரு முறை வீடு மற்றும் மனை மதிப்புகள் வெளியிடப்படுகின்றன. தற்போது 2013–ம் ஆண்டு முதல் 2017 மார்ச் வரை உள்ள காலத்துக்கு ‘ரெசிடெக்ஸ் வீட்டு விலை குறியீடு’ வெளியிடப்பட்டுள்ளது.

இரு நகரங்கள்

தமிழக அளவில் சென்னை, கோவை ஆகிய இரு நகரங்கள் மட்டுமே ‘ரெசிடெக்ஸ்’ குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்திற்கான ரெசிடெக்ஸ் விலை மதிப்பீட்டு நிலவர குறியீடு 133 ஆக உள்ளது. 2013–ல் 103 ஆக இருந்த குறியீடு, கடந்த 4 ஆண்டுகளில் 30 புள்ளிகள் அதிகரித்துள்ளது. சென்ற செப்டம்பர் மாத நிலவரப்படி 134 புள்ளிகள் என்றும் டிசம்பர் மாதத்தில் 131 புள்ளிகள் என்றும் குறியீடுகள் அளிக்கப்பட்டிருந்தன. கட்டுமான சந்தை விலை குறியீடானது கடந்த செப்டம்பரில் 137–ஆக இருந்த நிலையில், டிசம்பர் மாதம் 124–ஆக குறைந்து, தற்போது 132 புள்ளிகளாக உள்ளது.

Next Story