அரசு உதவியுடன் மாடித்தோட்டம் அமைக்கலாம்


அரசு உதவியுடன் மாடித்தோட்டம் அமைக்கலாம்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:46 AM GMT (Updated: 23 Dec 2017 4:46 AM GMT)

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பாக மேல்மாடிகளில் தோட்டம் அமைத்து பயிர் வளர்க்கும் திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பாக மேல்மாடிகளில் தோட்டம் அமைத்து பயிர் வளர்க்கும் திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாடித்தோட்ட காய்கறிகள் விளைவிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வழிகாட்டி


தனி வீடு மற்றும் அடுக்குமாடிகளின் மேல் பகுதிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு தமிழக தோட்டக்கலை துறையினர் தக்க வழிகாட்டி வருவதோடு, உதவியும் செய்து வருகின்றனர். மேல்மாடிகளில் தொட்டிகள் அல்லது பாத்திகள் அமைத்து செடி, கொடிகள் உள்ளிட்ட பயிர்களை வளர்ப்பதற்கு வேண்டிய இடுபொருள்களையும் அவர்கள் வழங்கி வருவதோடு, அதற்கு தகுந்த மானியமும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு

மேற்கண்ட மாடித்தோட்டம் அமைக்க உதவும் திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே இத்திட்டம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

மானியம் உண்டு

இப்போது, சென்னை தவிர ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாடித்தோட்ட காய்கறி விளைவிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை நகரத்தை பொறுத்தவரையில் மாதவரம், அண்ணா நகர், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை உரம்

அதற்காக அளிக்கப்படும் ‘கிட்’ எனப்படும் பாக்கெட்டில் தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட கட்டைகள், காய்கறி விதைகள், நீரில் கரையும் உரம், செயல்முறை கையேடு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதன் விலை மதிப்பில் குறிப்பிட்ட அளவு மானியம் கணக்கிடப்பட்டு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவ்வகை தோட்டங்களுக்கு தேவையான செடி, கொடிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு இயற்கை உரங்களும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. தமிழக அளவில் பல்வேறு இடங்களில் மாடித்தோட்ட முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, மக்களின் அன்றாட தேவைகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி அடைந்து வருவதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story