குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உதவும் தொழில்நுட்பம்


குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உதவும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:51 AM GMT (Updated: 23 Dec 2017 4:51 AM GMT)

கட்டிட அமைப்புகளில் கான்கிரீட் கலவையின் பங்கு தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.

ட்டிட அமைப்புகளில் கான்கிரீட் கலவையின் பங்கு தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. குறைவான பட்ஜெட் கொண்ட தரைத்தள வீடுகள், இதர தனி வீடுகள் மற்றும் இரண்டு அடுக்கு மாடிகள் கட்டுபவர்களுக்கு ஏற்படும் கான்கிரீட் செலவுகளை குறைக்கும் தொழில்நுட்பமாக ‘இன்டர்லாக்’ முறை கவனிக்கப்படுகிறது. கட்டுமான பொருட்கள் செலவு, செங்கற்கள் உள்ளிட்ட இதர மூலப்பொருட்கள் அளவு ஆகியவை கணிசமாக குறைந்து விடுவது குறிப்பிடத்தக்கது.

எளிதான தயாரிப்பு

இன்டர்லாக் கற்கள் தயாரிப்பில் வழக்கமான மண், பிளைஆஷ் என்ற எரிசாம்பல், கான்கிரீட் ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பட்ஜெட் மற்றும் கட்டுமான அமைப்பு ஆகிய தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. எளிமையான தொழில் நுட்பம் காரணமாக, கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தக்க இயந்திரங்களை அமைத்து இவற்றை தயாரித்து பயன்படுத்த முடியும்.

கட்டுமான சிக்கனம்

கட்டுமான பணிகளில் செங்கற்கள் பயன்பாட்டை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் வரை இன்டர்லாக் கற்கள் விலை கூடுதலாக இருக்கும். ஆனால், சிமெண்டு கலவை தயாரிப்பு, கட்டுமான பணியாளர் கூலி, பெயிண்டு ஆகிய செலவுகள் பெருமளவு குறைவது குறிப்பிடத்தக்கது.

விலை நிலவரம்

இன்றைய நிலையில் நகர்ப்புரங்களில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பது போல கட்டுமான பொருட்களுக்கான விலை நிலவரம் பல மடங்கு அதிகமாகி விட்டது. மேலும், கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களுக்கான தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.

மாற்றுப்பொருள்

அதன் காரணமாக கட்டுமான செலவுகளை குறைக்கும் வகையில் மாற்று பொருட்களை கண்டறியும் முயற்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவ்வாறு கண்டறிந்த பொருட்கள் விலை குறைவாகவும், உறுதியான கட்டுமானங்களை உருவாக்கக்கூடிய வகையில் தரமாகவும் அமைய வேண்டும். அந்த வரிசையில் ‘இன்டர்லாக்’ என்று சொல்லப்படும் ஒன்றிணைக்கும் செங்கல் வகைகள் கட்டுமான சந்தையில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகிறது.

கச்சிதமான பிணைப்பு

இவ்வகை கற்கள் ஒன்றுடன் ஒன்று கச்சிதமான பிணைப்பில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை ஒன்றுக்கொன்று சரியாக பிணைத்துக் கொள்ளும் வகையில் முறையாக இடைவெளிகள் இல்லாமல் அடுக்கி சுவர்களை எளிதாக கட்டமைக்கலாம். அவற்றை இணைப்பதற்கு கான்கிரீட் கலவை மற்றும் வெளிப்புற பூச்சு ஆகியவை அதிகமாக வேண்டியதில்லை என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எளிதான பணிகள்

கட்டுமான பொறியாளரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வகை கற்களை பயன்படுத்தி எளிய பட்ஜெட்டிலும், குறைந்த கால அவகாசத்திலும் கட்டுமானப்பணிகளை செய்து முடிக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் சுவர்களின் பலம் மற்றும் மேற்கூரையை தாங்கும் அளவு வலிமை ஆகியவை பற்றி பலருக்கும் சந்தேகமாக உள்ளது. அதன் காரணமாக வீடுகளில் வெளிப்புறம் அமைக்கப்படும் கற்றுச்சுவர், மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவர்கள், வீட்டிற்குள் அமைக்கப்படும் சிறிய அளவிலான தடுப்புச் சுவர்கள் போன்ற பணிகளுக்காக இவ்வகை கற்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. வரும் காலங்களில் இவ்வகை இன்டர்லாக் கற்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதை கட்டுமான வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Next Story