வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்


வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்
x
தினத்தந்தி 27 Jan 2018 5:58 AM GMT (Updated: 27 Jan 2018 5:58 AM GMT)

கடந்த ஐந்து வருடங்களில் வீட்டுக்கடன் வேண்டி விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகி உள்ளது.

ரியல் எஸ்டேட் நிலவரம் இப்போது சற்று மந்தமாக இருந்தாலும், குடியிருப்புகளுக்கான தேவைகள் அப்படியே இருந்து வருகின்றன. வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை சற்று எளிமையாக மாற்றியிருப்பது மற்றும் அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ சொந்தவீடு திட்டம் ஆகியவற்றின் காரணமாகவும் நடுத்தர மக்கள் வீட்டு கடன் பெறுவதை அதிகமாக்கியிருக்கிறது.

பல்வேறு திட்டங்கள்

கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வாங்கவேண்டும் என்பது வாடகைக்கு குடியிருக்கும் நடுத்தர மக்களின் ஆசையாக இருக்கிறது. அவர்களது மாத வாடகையை கணக்கிட்டு அதை சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களையும் கட்டுமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன. அதன் அடிப்படையிலும் வீட்டுக்கடன் பெறுபவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எளிமையான நடைமுறை

இன்றைய நிலையில் தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து கடன் தொகையை அளிக்கும் அளவுக்கு சுலப கடன் திட்டங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வீட்டுக்கடன் பற்றி முக்கியமானவற்றை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும். அதனால் வீட்டுக்கடனுக்கான சில அடிப்படை விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

வட்டி விகிதம்


பொதுவாக, வீட்டுக்கடனைப் பொறுத்தவரையில் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்களை நிதி ஆலோசகர்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். முதலாவது கடனுக்கான வட்டி விகிதம் இரண்டாவது கடனுக்கான தவணை முறை.

நிலையான வட்டி

வீட்டுக்கடனுக்கு, நிலையான வட்டி, மாறுபடும் வட்டி என்று இரு வகை வட்டி விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன. அவற்றில் நிலையான வட்டி என்பது குறிப்பிட்ட காலம் வரை வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். சிறிது காலம் கழித்து அந்த வட்டி விகிதம் மாற்றப்படலாம். சில வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைக்காலம் முழுவதும் மாறாத வட்டி விகிதங்களை அளிக்கின்றன.

மாறுபடும் வட்டி

மாறுபடும் வட்டி விகிதம் சந்தை நிலவரப்படி பொதுவான வட்டி உயரும்போது அதிகரிக்கப்படும். குறையும்போது குறைவாக கணக்கிடப்படும். இந்த நிலையில் வட்டி விகிதத்தில் உயர்வு ஏற்படும்போது செலுத்த வேண்டிய தவணை தொகை அதிகமாகும். நிலையான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுத்தவர்கள் பின்னர் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாற்றிக்கொள்ளவும் இயலும்.

இதர கடன்கள்

வீட்டுக்கடன் பெற முடிவெடுக்கும் பட்சத்தில் தனி நபர் கடன், வாகனக்கடன் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற இதர கடன்களை தவிர்ப்பது பாதுகாப்பானது. மேலும், வீட்டுக்கடனுக்கான தொகையை கடன் பெறுபவரே முடிவு செய்ய இயலாது என்ற அடிப்படையில் கடனை திருப்பி செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் தொகை வங்கி அல்லது கடன் அளிக்கும் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

மாத சம்பளம்

ஒருவரது மாத சம்பளத்துக்கு கிடைக்கக்கூடிய கடன் அளவை விசாரித்து அறிந்து கொண்டு அதற்கேற்ப மீதமுள்ள தொகையை முன்னதாகவே தயார் செய்து கொள்வது முக்கியம். மீதம் உள்ள தொகைக்கு கடன் வாங்காமல், ஓரளவு சேமிப்பை வைத்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது நல்லது.

தவணை தொகை

கடனுக்கான தவணைத்தொகை குறைந்த பட்சம் 5 ஆண்டு முதல் 30 ஆண்டு வரை அமையலாம். பொதுவாக, கடனுக்கான தவணைக்காலம், தொகை மற்றும் வயதை பொறுத்து தீர்மானிக்கப்படும். வருமானத்தில் பாதியளவுக்கு தவணை தொகை இருக்கும்படி நிர்ணயித்துக்கொள்வது பாதுகாப்பு. குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பளதாரராக இருக்கும் பட்சத்தில் இருவரும் ஒன்றாக விண்ணப்பித்து கடன் பெற்றால் விரைவில் கடனை கட்டி முடிக்கலாம்.

அரசின் திட்டம்

வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும்போது ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்திற்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், வீட்டுக்கடனுக்கு செலுத்தும் மாதத்தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச்சலுகையும் தரப்படுவதை கணக்கில் கொள்ளவேண்டும்.

தவணை அதிகரிப்பு

சில தருணங்களில் ஊதியம் உயரும்போது மேற்படி தொகையை கடனுக்கான மாதாந்திர தவணையில் அதிகரித்து செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் தவணைத் தொகையை அதிகரித்து திருப்பி செலுத்தி வந்தால் விரைவில் வீட்டுக் கடன் செலுத்தப்பட்டு விடும். 

Next Story