சிக்கன பட்ஜெட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி


சிக்கன பட்ஜெட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி
x
தினத்தந்தி 27 Jan 2018 6:13 AM GMT (Updated: 27 Jan 2018 6:13 AM GMT)

தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தண்ணீர் தேவைகளை சமாளிக்க மேல்நிலை மற்றும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள் அமைப்பது நடைமுறையாகும்.

நகர மயமாக்கல் மற்றும் பெருகி வரும் ஜனத்தொகை போன்ற காரணங்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருகிறது.

கீழ்நிலை தொட்டி

பொதுவாக, தரைமட்டத்துக்கு கீழே ‘சம்ப்‘ எனப்படும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள் அமைத்து, ‘போர்வெல்’ மற்றும் கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்படும் தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கமான ஒன்று. இதற்காக, தரையில் குறிப்பிட்ட அளவு பள்ளம் எடுத்து, கான்கிரீட் மூலம் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. அந்த தொட்டிகள் நீர்க்கசிவு இல்லாத வகையிலும், அதன் பக்கவாட்டு சுவர்கள் கச்சிதமாகவும், வெளிப்புறத்தில் உள்ள அசுத்த நீர் தொட்டிக்குள் ஊடுருவ வாய்ப்பு இல்லாதவாறும் கட்டமைக்க வேண்டியது அவசியம்.

நீர் கொள்ளளவு

தொட்டிகள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்படும் பட்சத்தில் அவற்றில் எத்தனை லிட்டர் தண்ணீர் சேமிக்க இயலும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. ஒரு கன அடிக்கு 28 லிட்டர் என்பது கணக்கு. உதாரணமாக 6 அடி அகலம், 6 அடி உயரம், 6 அடி நீளம் உள்ள தொட்டியின் மொத்த அளவு 216 அடியாகும். இத்துடன் 28 லிட்டர் என்பதை பெருக்கினால் கிடைக்கும் 6048 லிட்டர் என்பது அந்த தொட்டிக்கான கொள்ளளவு ஆகும்.

சிக்கன செலவு

நகர்ப்புற அடுக்குமாடிகள் அல்லது தனி வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளிலும் நிலத்தடி கான்கிரீட் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதை சிக்கன செலவில் இப்போது செய்ய இயலும். அதாவது மேல் மாடிகளில் நாம் பரவலாக பார்க்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளை நிலத்திற்கு கீழ்ப்புறமாகவும் அமைத்து பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தொட்டி

மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து பல்வேறு நிறுவனங்கள், நிலத்தடி தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சிறப்பு வகை பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரித்து வருகின்றன. தற்போது 1,000 லிட்டர் முதல் 30,000 லிட்டர் வரை நீரை சேமிக்கக்கூடிய தொட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த முறையில் வழக்கமாக கட்டுமான பணியில் உருவாக்கப்படும் தொட்டிக்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் சேமிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

கிடைமட்ட தொட்டி

மேற்கண்ட பிளாஸ்டிக் தொட்டிகளை தரையில் தேவையான ஆழத்துக்கு பள்ளம் எடுத்து அதில் அமைக்கலாம். 6,000 லிட்டர்களுக்கு மேற்பட்ட தொட்டிகளை கிடைமட்ட அமைப்பில் வைக்கும் வகையில் தயாரிக்கப்படுவதால், அதிக ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

பாதிப்புகள் இல்லை

குறிப்பாக, மண்ணில் ஏற்படும் மாற்றங்கள் இந்த தொட்டிகளை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதுடன், 50 ஆண்டுகள் உழைக்கும் திறன் கொண்டவை. மேலும், சேமிக்கப்படும் தண்ணீரில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக உட்புறத்தில் சிறப்பு வகை ‘கோட்டிங்’ அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் காரணமாக கான்கிரீட் தொட்டிகளுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் நிலத்தடி தண்ணீர் தொட்டிகளை பயன்படுத்த கட்டுமான வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள். 

Next Story