பழைய கட்டிடங்களை இடிக்கும்போது கவனிக்க வேண்டியவை


பழைய கட்டிடங்களை இடிக்கும்போது  கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 3 Feb 2018 2:30 AM IST (Updated: 2 Feb 2018 4:24 PM IST)
t-max-icont-min-icon

பழுதான அல்லது பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிடுபவை :

* கட்டிடத்தில் உள்ள அனைத்து விதமான தண்ணீர், கியாஸ், மின்சார இணைப்புகள் ஆகியவை முன்னதாகவே துண்டிக்கப்படுவது அவசியம்.

* கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவை தக்க முறையில் அகற்றப்பட வேண்டும் அல்லது கச்சிதமாக மூடப்பட்டிருக்க வேன்டும்.  

* இடிக்கப்படும் கட்டிடத்தில் உள்ள லிப்ட் சென்று வரும் பாதைகளுக்கான அனைத்து நுழைவு வழிகளுக்கும் தக்க தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

* கட்டிடத்தை சுற்றிலும் போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருக்கும்படி கவனித்துக்கொள்வது முக்கியம்.

* கட்டிட இடிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், இடையில் கட்டிக்கொள்ளும் பெல்ட்டுகள், கையுறைகள் போன்றவற்றை அணிந்து கொண்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

*கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் இதர தளப்பரப்புகள் உடைந்திருப்பது அல்லது விரிசல்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பகுதிக்கு வரக்கூடிய வழிகளில் மற்றவர்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும். அல்லது ஆபத்து பற்றி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.   

* பிரதான கட்டிட அமைப்பை இடிக்க ஆரம்பிக்கும் முன்பு பால்கனிகள் மற்றும் சன்–ஷேடுகள் ஆகிய இதர வெளிப்புற கட்டமைப்புகளை முதலில் இடித்து அகற்றுவது முக்கியமானது.  

* கட்டிடங்களில் இரும்பு படிக்கட்டுகள் அல்லது ஏணிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தும் நிலையில் இருந்தாலொழிய அவற்றை அகற்றி விடுவது பாதுகாப்பானது.  

* இடிக்கப்படும் கட்டிடங்களில் உள்ள படிக்கட்டுகளை பயன்படுத்தி மேலே ஏற முயற்சிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கட்டிட அதிர்வுகள் காரணமாக அவற்றின் வலிமை குறைந்திருக்கும் நிலையில் எளிதாக அவை உடையக்கூடும்.

* இடிக்கப்படும் கட்டிடத்திலிருந்து அகற்றப்படும் மரத்தாலான கதவுகள், ஜன்னல்கள் மற்றும் இதர மரப்பொருள்கள் ஆகியவற்றிலிருந்து ஆணிகள் மற்றும் ‘ஸ்க்ரூ’ ஆகியவற்றை கச்சிதமாக அகற்றி விட்டு தனியாக வைக்கப்பட வேண்டும்.

* சுவர்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் முதலில் அகற்றி விட்டால், உடைந்த கண்ணாடிகளால் வரக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படும். ஜன்னல் பிரேம்களை சுவரிலேயே விட்டுவிடுவது பாதுகாப்பானது.  

* கட்டிடம் இடிக்கும் பணிகளின்போது அருகில் உள்ள சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுற்றிலும் வலைகள் அல்லது மெட்டல் ஷீட்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்படுவது மிகவும் அவசியம். அதன் மூலம் இடிக்கும்போது தூசிதுரும்புகள் பக்கத்து வீடுகளுக்குள் செல்வதும் தடுக்கப்படும்.

* இடிக்கும் பணிகளின்போது பணியாளர்கள் கட்டிடத்தின் தூண்கள், தளம் அல்லது சுவர்களின் மேற்பகுதியில் ஏற முயற்சிப்பது அல்லது அவற்றின் மீது நிற்பது ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம்.

* அன்றைய இடிப்பு பணிகள் முடிந்தவுடன் கட்டிடத்தில் உள்ள சுவர்கள் அல்லது மரத்தாலான பொருட்கள் ஏதும் அரைகுறையாக உடைக்கப்பட்ட நிலையில் விட்டுவிடாமல், முற்றிலும் அகற்றிவிட்டே செல்லவேண்டும்.

* கட்டுமானங்களில் உள்ள இரும்பு சட்டங்கள் அல்லது கனமான குழாய்கள், கான்கிரீட் தூண்கள் ஆகியவற்றை இடிக்கும்போது தக்க ‘ஜாக்கி’ அமைப்புகளை பயன்படுத்தி பணிகளை செய்ய வேண்டும்.

Next Story