வீடு–மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்


வீடு–மனை வாங்கும்போது கவனிக்க  வேண்டிய அம்சங்கள்
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 11:18 AM GMT)

பொதுவாக வீடு அல்லது மனை வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா மற்றும் வில்லங்க சான்றிதழ் ஆகிய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து முடிவெடுப்பது வழக்கம்.

சொத்துக்கள் வாங்கும் சமயத்தில்அவை தவிரவும்   கூடுதலாக கவனிக்க வேண்டிய பல வி‌ஷயங்கள் உள்ளன. அவை பற்றி சட்ட வல்லுனர்கள் தரக்கூடிய தகவல்களை இங்கே காணலாம்.

சட்ட ஆலோசனை

இட நெருக்கடி அதிகமுள்ள பெருநகரங்களில் வீடு அல்லது மனை போன்ற சொத்துக்களை வாங்கும் முன்னர் அந்த சொத்துக்கான உரிமை சம்பந்தப்பட்டவருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை ஒரு வழக்கறிஞர் மூலம் அறிந்து கொண்ட பிறகே தக்க முடிவுகளை எடுக்கவேண்டும். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாங்கப்படும் சொத்துக்களுக்கு சட்ட ஆலோசனை அவசியம் என்பதை நிதி ஆலோசகர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஆவண விவரங்கள்

வீடு அல்லது மனையின் உரிமையை குறிக்கும் ஆவணங்களில் சட்டப்பூர்வமான சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் ஏதேனும் உள்ளதா..? என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். வீடு அல்லது மனை விற்பனை செய்பவருக்கு அது சுய சம்பாத்தியமாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரியாக அறிந்து கொள்ளவேண்டும்.

பாகப்பிரிவினை

குறிப்பிட்ட வீடு அல்லது மனை ஒருவருக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்திருக்கும் பட்சத்தில் அது முறைப்படி பிரிவினை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். சில சமயங்களில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாகப்பிரிவினை செய்திருந்தாலும், தனித்தனியாக ஒவ்வொருவர் பெயருக்கும் பத்திரப்பதிவு செய்யாமல் விடப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.

நான்கு எல்லைகள்

பத்திரப்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். மனை அல்லது வீட்டின் நான்கு பக்க எல்லைகள் மற்றும் பரப்பளவு ஆகியவை சரியாக இருப்பதை சர்வேயர் மூலம் உறுதி செய்துகொள்வது பாதுகாப்பானது.

பட்டா மாற்றம்

பாகப்பிரிவினை மூலம் பெறப்பட்ட வீடு அல்லது மனையை விற்பவர் அவரது பெயருக்கு பட்டாவை உட்பிரிவு செய்து இருக்கிறாரா? என்பதை கவனிக்கவேண்டும். பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் பத்திரப்பதிவு மட்டும் செய்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்கான பட்டா முந்தைய உரிமையாளர் பெயரில்தான் இருக்கும் அந்த நிலையில் வீடு அல்லது மனையை தற்போதைய உரிமையாளர் பெயருக்கு மாற்றிய பிறகுதான் அதை வாங்குபவர் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலும். அதனால் பத்திரப்பதிவுக்கு முன்னர் இந்த வி‌ஷயத்தை கவனிப்பது அவசியம்.

தானப்பத்திரம்

வீடு அல்லது மனை ஒருவருக்கு தானப்பத்திரம் மூலம் உரிமையாக கிடைத்திருக்கும் பட்சத்தில் சொத்தை தானமாக கொடுத்தவர் யார்? என்பதை தெரிந்துகொள்வதுடன் அவருடைய முழு சம்மதம் மற்றும் நிபந்தனைகள் ஏதுமில்லாமல் கொடுக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக, சொத்தை தானமாக கொடுத்தவர் அதைப்பெற்றவர் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க மட்டும் முடியும் என்று குறிப்பிட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட வீடு அல்லது மனை சிக்கலை ஏற்படுத்தி விடும் வாய்ப்புகள் உள்ளன.  

இதர வகை உரிமை

ஒருவரது குடும்ப உறவுகள் தவிர வேறொருவர் மூலம் சொத்துரிமை பெற்றிருக்கும் பட்சத்தில் அதில் வில்லங்கம், நிபந்தனைகள் ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. வாங்கும் சொத்து மைனருக்கு உரிமை உடையதாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் அனுமதி பெற்ற பின்னரே விற்பனை செய்ய முடியும். எனவே, இன்றைய காலகட்டத்தில் வீடு–மனை வாங்குபவர்கள் மேற்கூறப்பட்ட வி‌ஷயங்களை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும்.


Next Story