புதிய தொழில்நுட்பத்தில் சிக்கன பட்ஜெட் வீடு


புதிய தொழில்நுட்பத்தில் சிக்கன பட்ஜெட் வீடு
x
தினத்தந்தி 9 Feb 2018 9:00 PM GMT (Updated: 9 Feb 2018 5:25 PM GMT)

நமது பகுதியில் பழைய ஓட்டு வீடுகளை புதுப்பித்து ‘தெர்மோகிரீட் பேனல்’ முறைப்படி சிக்கன செலவில் புதிய வீடுகள் அமைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

மது பகுதியில் பழைய ஓட்டு வீடுகளை புதுப்பித்து ‘தெர்மோகிரீட் பேனல்’ முறைப்படி சிக்கன செலவில் புதிய வீடுகள் அமைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. சதுரஅடி கணக்கில் எளிய பட்ஜெட்டில் இவ்வகை வீடுகளை தனியார் நிறுவனங்கள் அமைத்து தருகிறார்கள். அந்த தொழில் நுட்பம் பற்றிய தகவல்களை காணலாம்.

வீட்டின் பல்வேறு பகுதிகள்


கட்டுமான வடிவமைப்பு, சுவர்கள் கட்டமைப்பு, மேற்கூரை அமைப்பு, மின்சார இணைப்புகள், குடிநீர் இணைப்புகள், கதவுகள், தரைத்தளங்கள் மற்றும் சுவர்களுக்கான வெள்ளை அடித்தல் ஆகிய பணிகள் அனைத்துமே இன்றைய கட்டுமான செலவுகளை விடவும் சிக்கன பட்ஜெட்டில் செய்ய இயலும்.

நவீன தொழில்நுட்பங்கள்

தெர்மோகிரீட் பேனல் வீடுகளை அமைக்க வலுவூட்டிய கான்கிரீட், கம்பி வலை மற்றும் EPS ஆகிய தொழில்நுட்ப வழி முறைகளை பயன்படுத்தி கட்டிடங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

சிக்கன கட்டுமான பணிகள்

‘தெர்மோகிரீட் பேனல்’ தொழில்நுட்பம் மூலம் 5 முதல் 10 சதவீதம் வரை மொத்த கட்டுமான செலவுகள் சேமிக்கப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், கட்டுமான பணிகளுக்கான கால அளவு பெருமளவுக்கு குறைவதால் குறுகிய நாட்களில் பிளான்படியான கச்சிதமான வீடுகளை அமைக்க இயலும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது 1000 சதுர அடிகள் கொண்ட வீடு அமைக்க அதிகபட்சமாக 60 நாட்கள் ஆகலாம் என்பதோடு, அதிக செலவு ஏற்படாமல் திட்டமிட்டு கட்டுமான பணிகளை செய்ய முடியும்.

தட்பவெப்ப தடுப்பு

மேற்கண்ட தொழில்நுட்ப முறைப்படி அமைக்கப்படும் வீடுகளில் கோடை, பனி மற்றும் மழை காலங்களில் வீடுகளுக்குள் தட்பவெப்ப நிலை சீரான தன்மையை கொண்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது. அதாவது, வீட்டிற்கு வெளிப்புறம் நிலவும் தட்பவெப்ப நிலை வீட்டிற்குள் ஊடுருவ செய்வதில்லை.

வலுவான சுவர்கள்

வழக்கமான கட்டமைப்பு முறையான செங்கல் சுவர்களை விடவும் ‘தெர்மோகிரீட் பேனல்’ வீடுகள் வலுவாக இருப்பதாகவும் அதன் அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சாதாரண செங்கல் சுவர் அமைப்புகள் ஒரு சதுர சென்டிமீட்டரில் 35 முதல் 40 கிலோ வரையிலான அழுத்தத்தை தாங்கும் என்ற நிலையில் ‘தெர்மோகிரீட்’ சுவர்கள் அவற்றை விடவும் பல மடங்கு அழுத்தத்தை தாங்கி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

நீடித்த உழைப்பு

மேற்கண்ட புதுமை கட்டுமான தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் பாதிப்புகள் இல்லாமல் உழைக்கும் தன்மை கொண்டவை என்றும் அறியப்பட்டுள்ளது.

குறைவான எடை

வழக்கமான கட்டமைப்புகளை விடவும் இவ்வகை வீடுகளின் எடையானது கிட்டத்தட்ட 40 சதவிகித அளவுக்கும் குறைவாக அமைகின்றன. அதன் காரணமாக அஸ்திவாரத்திற்கான செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக அமைகிறது. குறிப்பாக, பில்லர்கள் இல்லாமல் சிங்கிள் பேனல்களை கொண்டே இரண்டு மாடிகள் வரை கட்டமைக்க இயலும். மேலும், டபுள் பேனல்கள் மூலம் கிட்டத்தட்ட 12 மாடிகள் வரையிலும் அமைக்க இயலும் என்றும் அறியப்பட்டுள்ளது.

பூகம்ப பாதிப்பு இல்லை

பூகம்பம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள இடங்களில் வீடுகள் அமைக்க இவ்வகை பேனல்கள் உகந்தவை. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படாத தன்மை கொண்டதாக உள்ள காரணத்தால், அமெரிக்கா, சீனா, ஜப்பான், கென்யா, அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவ்வகை பேனல் வீடுகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story