வரவேற்பறை அமைப்பில் வல்லுனர் குறிப்புகள்


வரவேற்பறை அமைப்பில் வல்லுனர்  குறிப்புகள்
x
தினத்தந்தி 16 Feb 2018 11:00 PM GMT (Updated: 16 Feb 2018 9:30 AM GMT)

இன்றைய பொருளாதார சூழலில், குடும்ப வருவாயின் அடிப்படையில் வீடுகளின் அமைப்பும், அளவுகளும் முடிவு செய்யப்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகர் பகுதிகளில் உள்ள மனைகளில் வீட்டை கட்டமைப்பது கொஞ்சம் சிக்கலான வி‌ஷயமாக குறிப்பிடப்படுகிறது.

விதிமுறைகள்


மனைப்பிரிவுகள் சிறியதாக இருந்தாலும் அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை கட்டுவதாக இருப்பினும் பல்வேறு விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. மனை அல்லது இடத்தின் அளவு மட்டுமல்லாமல் நிதி நிலையும் ஒரு வீட்டின் அளவை தீர்மானம் செய்கிறது.

இரண்டு படுக்கையறை

நடுத்தர வருவாய் பிரிவினர் பெரும்பாலும் இரண்டு படுக்கை அறைகள் உள்ள வீடுகளை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. அடுக்குமாடி வீடு வாங்குவதானாலும், சொந்த மனையில் வீடு கட்டுவதானாலும் இரண்டு படுக்கை அறை என்பது பொதுவானதாக உள்ளது.

வரைபட நிலை

வீடுகளில் அமைக்கப்படும் வரவேற்பறை என்பது குடும்பத்தினர் மற்றும் வெளியில் இருந்து வருபவர்களும் பயன்படுத்தும் இடமாக அமைந்துள்ளது. பொதுவாக, வரவேற்பறை அளவுகளை வீட்டின் வரைபட நிலையிலேயே தெளிவுபடுத்திக்கொள்வது பல சிக்கல்களை தவிர்க்கும்.

வல்லுனர் ஆலோசனை

மேலும், ஒவ்வொரு அறையும் என்ன அளவுகளில் இருக்கவேண்டும் என்பதை, குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுப்பது அவசியம். ஒருவேளை மனையின் அளவு சிறியதாக இருக்கும் பட்சத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு, பெரிய அறைகளை அமைப்பது இயலாது. தக்க கட்டுமான வல்லுனர்களது ஆலோசனைகளை பெற்று திட்டமிட்டு பணிகளை செய்தால் சிறிய மனையிலும்கூட பல்வேறு வசதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

வரவேற்பறை அளவு

நடுத்தர வருவாய் பிரிவு வீடுகளில் மனையடி சாஸ்திரப்படி வரவேற்பறையானது பெரும்பாலும் 16 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. அப்போதுதான் அறையில் சோபா செட் மற்றும் டிவி வைக்கப்படும் அலமாரி ஆகியவற்றை கச்சிதமாக அமைக்க முடியும்.

‘டைனிங் டேபிள்’

வரவேற்பு அறையின் ஒரு பகுதி ‘டைனிங் டேபிள்’ போடப்பட்டு உணவு அறையாகவும் பயன்படுத்த வேண்டியதாக இருக்கலாம். அதன் அடிப்படையில் ‘டைனிங் டேபிளுக்கான’ இடத்தை மனதில் கொண்டு வரவேற்பு அறை அளவு மற்றும் அமைப்பை தீர்மானிப்பது நல்லது.  

சவுகரிய அமைப்பு

படுக்கை அறை மற்றும் சமையல் அறை ஆகியவற்றை குறுக்காக பிரிக்கும் விதத்தில், வரவேற்பு அறை அமைக்கும் பட்சத்தில் நேராக சமையல் அறைக்கு செல்லும் விதத்தில் வழி இருக்கவேண்டும். வீடுகளில் கூடுதலாக உள்ள குளியலறை போன்றவற்றிற்கு வரவேற்பறை வழியாக செல்வது போன்ற அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிரமமாக இருப்பதை கணக்கில் கொண்டு அதன் அமைப்பை தீர்மானிப்பது நல்லது.

Next Story