இரும்பு பொருட்களை பாதுகாக்கும் ரசாயனம்


இரும்பு பொருட்களை பாதுகாக்கும்  ரசாயனம்
x
தினத்தந்தி 16 Feb 2018 11:30 PM GMT (Updated: 16 Feb 2018 9:37 AM GMT)

கான்கிரீட் தூண்கள் அல்லது மேற்கூரை அமைப்புகளுக்கான சிமெண்டு, மணல் கலவை ‘சென்டரிங்’ கட்டமைப்புகளுக்குள் வார்க்கப்படுவது வழக்கமான முறை.

கான்கிரீட் தூண்கள் அல்லது மேற்கூரை அமைப்புகளுக்கான சிமெண்டு, மணல் கலவை ‘சென்டரிங்’ கட்டமைப்புகளுக்குள் வார்க்கப்படுவது வழக்கமான முறை. அத்தகைய தருணங்களில் இரும்புக்கம்பிகளில் துருப்பிடித்திருந்தால் சிமெண்டு கலவை உறுதியான பிடிப்போடு இருந்தாலும், துரு உதிரும்போது ஆங்காங்கே சிமெண்டு காரையும் பெயர்ந்து விடுகின்றன.

துரு அகற்றுதல்

அதனால், கட்டமைப்புகளின் கான்கிரீட் தனியாகவும், கம்பிகள் தனியாகவும் பிரிந்து நிற்கின்றன. இந்த பாதிப்பை தவிர்க்க கான்கிரீட் அமைப்பதற்கு முன்பு இரும்பு கம்பிகளில் உள்ள அதிகப்படியான துருவினை அகற்றிவிடுவது அவசியம்.

‘ரசாயன கோட்டிங்’

அவ்வாறு துருவை அகற்ற பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் இரும்பு கம்பிகளையும் அரித்து விடாத தன்மை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தன்மை கொண்ட நானோ டெக்னாலஜி முறையில் தயாரிக்கப்பட்ட ‘ரசாயன கோட்டிங்’ வகைகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

மாற்று முறை

இரும்பு கம்பிகளை பாதுகாக்கும் இவ்வகை ‘நானோ ரசாயன கோட்டிங்’ ஒரு வகை ‘வாட்டர் பேஸ்டு கெமிக்கல் பெயிண்டு’ என்று சொல்லலாம். பல்வேறு வகை இரும்பு கம்பிகள், ஸ்டீல் பொருட்கள் ஆகியவற்றின் மேலாக பூசப்படும் ‘பிரைமரி கோட்டிங்’ முறைக்கு பதிலாக இந்த முறையை பயன்படுத்தி அவற்றை பாதுகாக்கலாம்.

அரிப்பை தடுக்கும்

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் அமைக்கப்படும் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் இதர ஸ்டீல் பொருட்கள் உப்புக்காற்றின் காரணமாக அரிக்காமல் தடுக்க ஒரு முறை ‘நானோ கோட்டிங்’ பூசப்படுவது நல்ல விளைவுகளை அளிக்கக்கூடியது. மேலும், ‘நானோ கோட்டிங்’ பயன்பாடு சிமெண்டு கலவையுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

இரும்பு பொருட்கள்

இரும்பு பொருட்களான டி.எம்.டி கம்பிகள், இரும்பு ஆங்கிள்கள், கிரில் வகைகள், ரெயிலிங் பணிகள், கேட்டுகள், ஜன்னல் பிரேம்கள், ‌ஷட்டர்கள் ஆகியவற்றின் மீது ‘பிரைமர்’ பூச்சுக்கு பதிலாக ஒரு ‘நானோ கோட்டிங்’ கொடுப்பது போதுமானது. அதனால், அவை வாழ்நாள் முழுதும் துரு பிடிப்பதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

எளிதில் உதிராது

ஒரு கோட்டிங் கொடுத்த பின்பு, தேவையான வண்ணம் பூசப்பட்டால் பல ஆண்டுகளுக்கு அந்த பெயிண்டு உதிராமல் பிடிப்புடன் இருக்கும். ஏற்கனவே துருப்பிடித்து பாதிப்படைந்த இரும்பு பொருட்களின் மீதும் மேற்பூச்சாக அமைத்தும் அவற்றை பாதுகாக்கலாம். அதனால், மீண்டும் துரு பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வழக்கமாக உபயோகத்தில் உள்ள ஆக்சைடு வகை பிரைமருக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.

Next Story