கட்டிடக்கலை நுட்பத்தை காட்டும் புதுமை கட்டமைப்பு


கட்டிடக்கலை நுட்பத்தை காட்டும் புதுமை கட்டமைப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 6:37 AM GMT (Updated: 24 Feb 2018 6:37 AM GMT)

இன்றைய காலகட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது பகுதியிலும் வித்தியாசமாக ஒரு கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்டுமானத்துறையின் மாறுபட்ட கலை வடிவங்களை வெளிப்படும் விதத்தில் உலகமெங்கும் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த வரிசையில், இன்றைய காலகட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது பகுதியிலும் வித்தியாசமாக ஒரு கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான சதுரம் அல்லது செவ்வகம் போன்ற வடிவத்தில் இல்லாமல் அழகான ஒரு தாமரை மலர் போன்ற அமைப்புடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள சாந்திகிரி ஆசிரமம் என்ற இடத்தில் அந்த அமைப்பு உள்ளது.

தாமரை வடிவ கட்டுமானம்

இப்போதுள்ள கட்டிடம் அமைவதற்கு முன்னர் அந்த இடத்தில் பழைய கால கட்டுமான முறையில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பர்ணசாலை இருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டு 91 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்ட மலரும் தாமரை இதழ் போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உள்புற அகலத்தின் சுற்றளவு 64 அடிகள் கொண்ட அந்த தாமரை அமைப்பின் மேற்புறம் உள்ள 12 இதழ்கள் 41 அடி நீளம் கொண்டதாகவும், கீழே உள்ள 9 இதழ்கள் 31 அடி நீளம் கொண்டதாகவும் உள்ளன. ஒவ்வொரு இதழையும் கட்டி முடிக்க 6 மாத காலம் ஆனதாக அதன் கட்டமைப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

வெண் பளிங்கு கற்கள்

கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ராஜஸ்தான் வெண் பளிங்கு கற்கள் மற்றும் சாம்ராஜ்நகர் கருப்பு பளிங்கு கற்கள் கொண்டு மொத்த கட்டுமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியில் உள்ள மலரின் மொக்கு போன்ற பகுதி தேக்கு மரத்தால் செய்யப்பட்டு அதன் உட்புறத்தில் செம்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

கட்டுமான தொழில்நுட்பம்

அதன் பிரமாண்டமான உயரம் மற்றும் கட்டுமான தொழில் நுட்பம் ஆகியவற்றின் காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரூ.50 கோடி மதிப்பிலான அந்த கட்டமைப்பு கடந்த 2010-ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மூலம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story