இணைய தளம் மூலம் வீடு-மனைகளுக்கான பத்திர பதிவு


இணைய தளம் மூலம் வீடு-மனைகளுக்கான பத்திர பதிவு
x
தினத்தந்தி 24 Feb 2018 12:12 PM IST (Updated: 24 Feb 2018 12:12 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே சுலபமாக தங்களது வீடு மற்றும் மனைகளுக்கான பத்திரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

வீடுகள் மற்றும் மனைகளின் பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய வசதியாக பதிவுத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் www.tnreginet.gov.in என்ற இணைய தளமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே சுலபமாக தங்களது வீடு மற்றும் மனைகளுக்கான பத்திரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கிராமப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று அவற்றை மேற்கொள்ளவேண்டியதாக இருந்தது. மேற்கண்ட சிக்கலை தீர்க்கும் விதத்தில் இணையவழி பத்திரப்பதிவு முறை அறிமுகமாகியுள்ளது.

இனி வரும் காலங்களில் பதிவுத்துறை தலைவர் அலுவலகம், 9 பதிவுத்துறை துணை தலைவர் அலுவலகங்கள் மற்றும் 3 முகாம் அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் இணையவழி மூலம் பத்திரப்பதிவுகளை செய்யலாம்.

மேலும், இணையவழி பத்திரப்பதிவு முறைகள் பற்றி அலுவலர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் ஆகியோர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பம் நிலை தவிர்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம் கிடைக்கக்கூடிய வசதிகள்:

* இணையவழியில் அவரவர்களே ஆவணங்களை உருவாக்கும் வசதி

* உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்னதாக இணைய வழியில் சரி பார்க்கும் முறை

* பதிவாளர் அலுவலக வருகைக்கு முன்பதிவு

* ஆவணங்களை குறுகிய காலத்தில் பதிவு செய்து, உடனே திரும்ப அளிக்கும் வசதி

* எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் உடனுக்குடன் ஆவணம் பற்றி தகவல் பெறும் வசதி

* இணைய வழியாக கட்டணம் செலுத்தும் முறை

* ஆவண பதிவுகளில் மோசடிகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல்

* பதிவு செய்பவர் கைரேகையை ஒப்பீடு செய்து சரியான நபர்தானா என கண்டறிய புதிய வசதி

* கட்டணமில்லாத தொலைபேசி மூலம் பொதுமக்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதி

* பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா மாறுதல் செய்யும் மனுக்களை இணைய வழியில் உடனடியாக வருவாய்த்துறைக்கு அனுப்பி எஸ்.எம்.எஸ் மற்றும் ஒப்புகை சீட்டு அனுப்பும் நடைமுறை

* கட்டணமில்லாத வில்லங்கச்சான்றை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக அதிகரிப்பு

* இணைய வழியில் மின் கையொப்பமிட்ட ஆவண நகல் மற்றும் வில்லங்கச் சான்று பெறும் வசதி 
1 More update

Next Story