அறைகளை அழகாக்கும் கண் கவர் மின்விளக்குகள்


அறைகளை அழகாக்கும் கண் கவர் மின்விளக்குகள்
x
தினத்தந்தி 24 Feb 2018 7:18 AM GMT (Updated: 24 Feb 2018 7:18 AM GMT)

மெட்டல், பி.வி.சி கோட்டிங், தங்க நிற கோட்டிங் செய்யப்பட்ட விதவிதமான மின்விளக்குகள் பல வகைகளில் சந்தையில் இருக்கின்றன.

சிறிய பட்ஜெட் வீடு அல்லது பெரிய பட்ஜெட் வீடு எதுவாக இருந்தாலும் அவற்றை அழகாக காட்டுவதில் நவீன மின் விளக்குகள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. மெட்டல், பி.வி.சி கோட்டிங், தங்க நிற கோட்டிங் செய்யப்பட்ட விதவிதமான மின்விளக்குகள் பல வகைகளில் சந்தையில் இருக்கின்றன.

நிபுணர் குறிப்புகள்

மின் விளக்குகள் பொருத்துவதில் இன்டீரியர் நிபுணர்கள் சொல்லும் முக்கிய தகவல் சரியான விளக்குகளை கச்சிதமாக பொருத்தாத வீடு அழகாக இருக்காது என்பதாகும். மின்விளக்குகளில் பல வகைகள் இருந்தாலும், ஒருவரது தனிப்பட்ட விருப்பம் அல்லது குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் ஆகியவற்றை பொறுத்து ‘பெடஸ்டிரல்’ விளக்கு அல்லது ‘ஸ்டாண்டில்’ பொருத்தப்படும் விளக்குகள் போன்ற மாறுபட்ட முறைகளையும் தேர்வு செய்யலாம்.

வெவ்வேறு மாடல்கள்

அழகான பவுல் அமைப்பு, சர விளக்குகள் மற்றும் எளிமையான ‘டியூப் லைட்டுகள்’ என்று பல்வேறு டிசைன்களில் அவற்றை குடும்ப பட்ஜெட்டுக்கு ஏற்ற விலைகளில் தேர்ந்தெடுத்து, அழகாக பொருத்தி கொள்ளலாம். ‘ஸ்பாட் லைட்’, ‘டூம் லைட்’ என்று அறைகளின் இடத்துக்கு தக்கவாறும் அவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

நிழல் விழும் திசை

பொதுவாக நல்ல வெளிச்சம் தரக்கூடிய டியூப் லைட்டுகள் என்றாலும் அதற்கு எதிர்ப்புறத்தில் நிழல் விழுவதை தவிர்க்க முடியாது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு அறையில் அமர்ந்து படிக்க, மேசை விளக்கு வைத்துக்கொள்ளலாம். தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்வது பல இடங்களில் அவசியம்.

அலங்கார விளக்குகள்

அறையை அழகாக மாற்றும் இவ்வகை விளக்குகளை அறையின் நீள, அகல, உயரத்தை கணக்கில் கொண்டு அமைக்கவேண்டியதாக இருக்கும். குறிப்பாக, ஏழு அல்லது எட்டு அடுக்குகள் கொண்ட பெரிய அலங்கார விளக்குக்கு பதிலாக அறை அமைப்புக்கேற்ப ஐந்து அல்லது நான்கு அடுக்குகள் கொண்டவற்றை பொருத்தலாம்.

அறை அமைப்பு

அறை நீளமான அமைப்பை கொண்டிருந்தால் ‘சீலிங்’ நடுவில் பெரிய சர விளக்கு அமைப்பு அழகாக இருக்கும். சிறிய அறைக்கு ‘சீலிங்’ நடுவில் ஒரு விளக்கு அல்லது அதற்கேற்ற ‘வால் பிராக்கெட்’ அமைப்பு, அதாவது சுவருக்குள் ஆங்காங்கே ஒற்றை விளக்குகளை பொருத்தலாம்.

உணவு அறை

பொதுவாக, உணவு உண்ணும் அறைக்கு ‘டியூப் லைட்’ அல்லது மேலிருந்து தொங்கும் ‘ஸ்பாட் லைட்’ ஆகியவற்றின் வெளிச்சம் மேசையில் விழுமாறு அமைக்கலாம். அதன் காரணமாக, உணவு தெளிவாக தெரியும்.

சமையலறை அமைப்பு

ஆங்கில ‘எல்’ வடிவம் அல்லது ‘யூ’ வடிவத்தில் சமையலறை அமையும் பட்சத்தில் இருபுறமும் டியூப் லைட்டுகள் போதுமானது. ‘லாப்ட்டில்’ சிறிய எல்.இ.டி விளக்கை அமைத்து சிறு பூச்சிகள் நடமாட்டத்தை கவனித்து தடுக்கலாம்.

படுக்கை அறை

‘பெட்ரூம்’ மேற்கூரை ‘பால்ஸ் சீலிங்’ அமைப்பாக இருந்தால் ‘டியூப்’ அல்லது ‘ஸ்பாட் லைட்டுகள்’ பொருத்தலாம். அறையின் ‘கார்னர்’ பகுதிகளில் ஸ்டாண்டு அமைப்பின் உச்சியில் விளக்கு ஒளிரும் ‘போலார்ட் லைட்டை’ அழகாக நிறுத்தி வைக்கலாம்.

‘ஸ்விட்ச் போர்டு’

மின்விளக்குகளின் ஸ்விட்ச் போர்டு மேல் ‘லேமினேட்டடு பேப்பர்’ ஒட்டி அழகாக மாற்றலாம். மாடிகளில் விளக்குக்காக கூடுதல் ஸ்விட்சுகள் அமைத்தால் மேலிருந்து கீழே இறங்கும்பொழுது, விளக்கை ஆன் செய்யலாம். கீழே சென்று அணைக்கலாம். கீழே ‘ஆன்’ செய்ததை மேலே சென்று ‘ஆப்’ செய்யலாம்.

சுவருக்குள் விளக்கு

நவீன பொருட்கள், எளிய வசதிகள், சுலப பராமரிப்புகள் என்று மின் விளக்குகளுக்கான சவுகரியங்கள் பலவாறாக உள்ளன. சுவருக்குள் அமைக்கப்படும் ‘இன்பில்ட் விளக்குகள்’ ஒயர்கள் வெளியே தெரியாமல் அழகாக காட்சி தருகின்றன.

தோட்ட விளக்குகள்

வீடுகளில் தோட்டம் இருக்கும்பட்சத்தில் ‘கிரிஸ்டல்’ விளக்குகள் பொருத்தி, அதன் மூலம் ஏற்படும் வெளிச்சம் அருகில் உள்ள இதர பொருட்கள் மீது பட்டு அழகாக பிரதிபலிப்பது அழகாக இருக்கும். 

Next Story