நடுத்தர மக்கள் பயன்பெறும் அரசு வீட்டு வசதி திட்டம்


நடுத்தர மக்கள் பயன்பெறும் அரசு வீட்டு வசதி திட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 7:25 AM GMT (Updated: 24 Feb 2018 7:25 AM GMT)

தேசிய ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்ட 17 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளன.

தேசிய ஊரக வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.60ஆயிரம் கோடி நிதி உதவியை மத்திய அரசு அளிக்க உள்ளது. இந்த நிதி உதவி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் இது வரையில் 39 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 மாநிலங்கள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைவான வருமானம் உள்ள சமூகத்தினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 4,041 நகரங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பல்வேறு பிரிவினர்

ரூ.3 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர், ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை உள்ள குறைந்த வருமான சமூகத்தினர், ஆண்டு வருமானம் ரூ.6 முதல் ரூ.12 லட்சம் வரை உள்ள நடுத்தர வருமான பிரிவினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.12 முதல் ரூ.18 லட்சம் வரை கொண்ட நடுத்தர வருமான பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

குறைந்த வட்டி

குறைந்த செலவில் வீட்டு வசதி செய்து கொடுக்கும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 2017-18 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன் மூலம் இத்திட்டத்தில் ஈடுபடும் கட்டுமான துறையினருக்கு குறைந்த வட்டியிலான கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

கூடுதல் நிதி

மேற்கண்ட திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்ட 17 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளன. மேலும், அவற்றில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் 2 முதல் 3 லட்சம் வீடுகளுக்கான அனுமதி அளிக்கப்படுவதோடு, சமீபத்தில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.11,169 கோடி மதிப்பிலான வீட்டு கட்டுமான பணிகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்துக்கு மேலும், ரூ.2,797 கோடி வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு அளிக்கும் கடன் திட்டங்கள்:

1. இருந்த இடத்திலேயே குடிசைப்பகுதி மறு சீரமைப்பு

இந்த பிரிவின் கீழ் குடிசைப்பகுதிகள் மறு சீரமைப்பு, அதாவது அதே இடத்தில் நிலத்தை ஆதாரமாக கொண்டு வீடுகள் அமைக்கப்படும். இதில் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் கொண்ட பல அடுக்கு கட்டிடங்களில் கான்கிரீட் வீடுகளை இலவசமாக பெற முடியும். இந்த பிரிவில் ரூ.1 லட்சம் மத்திய அரசின் உதவி தொகையும் வழங்கப்படும்.

2. பங்குதாரர் முறையில் குறைந்த செலவு வீடு

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மத்திய அரசின் உதவி தொகையாக வழங்கப்படும். ஒவ்வொரு திட்டத்திலும் 35 சதவீதம், குறைந்தபட்சம் 250 வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டால் மாநிலம், யூனியன் பிரதேசங்கள், நகரங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வீடுகளை கட்ட வேண்டும்.

3. பயனாளியின் தலைமையில் கட்டுமானம்

நலிவுற்ற பிரிவை சேர்ந்த பயனாளிகள் அவர்களே புதிய வீட்டை அமைத்துக்கொள்ளவும், ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பித்துக்கொள்ளவும் மத்திய அரசு உதவி தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது.

4. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமூகத்தினர் புது வீடு கட்டவும் அல்லது ஏற்கனவே உள்ள வீட்டில் புதிய அறைகள், சமையல் அறை, கழிவறை போன்றவற்றை அமைத்து, வீட்டோடு இணைத்துக்கொள்ளவும் மத்திய அரசு உதவி தொகை, வீட்டு கடன் வட்டித் தொகை மானியமாக அளிக்கப்படும். 

Next Story