குறுக்கு சுவர் அமைப்பில் கட்டுமான நுட்பம்


குறுக்கு சுவர் அமைப்பில் கட்டுமான  நுட்பம்
x
தினத்தந்தி 3 March 2018 4:45 AM IST (Updated: 2 March 2018 3:52 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் உள்ள அறைகளுக்கான பெரும்பாலான குறுக்கு சுவர்கள் அரைக்கல் அமைப்பில் செங்கல் கொண்டு கட்டப்படுவது வழக்கம்.

வீடுகளில் உள்ள அறைகளுக்கான பெரும்பாலான குறுக்கு சுவர்கள் அரைக்கல் அமைப்பில் செங்கல் கொண்டு கட்டப்படுவது வழக்கம். அது போன்ற சமயங்களில் அறைகளின் அளவீடுகள் அடிப்படையில் கட்டுமான முறைகளை பின்பற்றுவது அவசியம். அவ்வாறு அமைக்கப்படாத பல வீடுகள், ஒரு சில வருடங்களில் குறுக்கு சுவர் விரிசல்களால் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

‘லோடு பேரிங்’ சுவர்

கட்டிடத்தின் எடையை தாங்கும் பிரதான சுவர்கள் தவிர இதர சுவர்களையும் எடை தாங்கும் திறனுக்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்பது கட்டுமான பொறியாளர்களது கருத்தாகும். கட்டிடத்தின் பிரதான சுவர்கள் ‘லோடு பேரிங் வால்’ என்று குறிப்பிடப்படுகிறது.

முக்கியத்துவம்  தேவை


பிரதான சுவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அரைக்கல் சுவர்களுக்கு அவ்வளவாக அளிக்கப்படுவதில்லை என்பதோடு, பல சமயங்களில் குறுக்கு சுவர்கள் தரைப்பரப்பின் மெட்டல் கான்கிரீட்டின் மேல்பகுதியில் சாதாரணமாக, செங்கல் மற்றும் காரை கொண்டு அமைக்கப்படுகிறது.

மண் இறுக்கம்

மேற்கண்ட முறைப்படி சுவர் அமைக்கும்போது ‘மெட்டல்  கான்கிரீட் பரப்பின்’ கீழ்ப்புறம் உள்ள மண் பகுதி காலப்போக்கில் இறுகி விடும். அவ்வாறு மண் இறுகும்போது அதற்கு மேற்பரப்பில் உள்ள சுவரும் கீழே இறங்கும் நிலையில், அவற்றின் குறுக்கு வாக்கில் விரிசல்கள் ஏற்படுகின்றன என்று பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறிய பீம் அமைப்பு


குறிப்பாக, காலம் செல்லச்செல்ல சுவர்களின் இறங்கும் அளவு அதிகரிப்பதன் விளைவாக விரிசல்களின் அளவும், ஆழமும் பெரிதாக மாறுகின்றன. எனவே, அரைக்கல் கொண்டு குறுக்கு சுவர் அமைக்கும்போது, அறைகளின் பக்கவாட்டில் உள்ள ‘மெயின் பீம்களில்’ இருந்து குறுக்கு வசத்தில் சிறிய ‘பீம்’ அமைத்து, அதன் மேல் குறுக்கு சுவர் அமைப்பது அவசியம். அவ்வாறு செயல்பட்டால் குறுக்கு சுவர்களில் விரிசல் ஏற்படாது என்றும் கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story