கட்டிடங்களை ஆட்சி செய்யும் எட்டு திசை சக்திகள்


கட்டிடங்களை ஆட்சி செய்யும் எட்டு திசை சக்திகள்
x
தினத்தந்தி 2 March 2018 10:15 PM GMT (Updated: 2 March 2018 10:37 AM GMT)

‘எலி வலையானாலும் தனி வலை..’ என்ற பழமொழிக்கேற்ப ஆயிரக்கணக்கில் வாடகை தந்து வாடகை வீட்டில் குடியிருக்கும் பலருக்கும் சொந்த வீடு கனவு இருந்து வருகிறது.

சக்திக்கு ஏற்ற சிறிய அளவில் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் கெளரவம் அல்லது சவுகர்யம் என்பது சமுக அளவில் பொதுக் கருத்தாக உள்ளது.

சொந்த வீடு

பொதுவாக, ஒரு வீட்டின் அல்லது மனையின் அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது சொந்த வீடு அல்லது மனையாக இருந்தாலும் அவற்றால் அதன் உரிமையாளருக்கு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கட்டிடங்களுக்கு உயிரோட்டம்

கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது சிரமங்களை சந்திக்கவா..? என்று பலருக்கும் கேள்விகள் வரலாம். ‘கதவுக்கும் கண் உண்டு.. சுவருக்கும் காது உண்டு..’ என்ற சொல் வழக்கு அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை குறிப்பிடுகிறது.

அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து கொண்டு பல எதிர்கால சிக்கல்களை சமாளிக்கலாம் என்பதும் வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இயற்கை சக்திகள்

வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கலவையாக இருப்பினும், இயற்கை சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் பாதிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்பட தொடங்கிவிடுகிறது என்பது வாஸ்துவின் உட்கருத்தாக இருப்பதை வல்லுனர்கள் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

வெளிச்சம் வேண்டும்

நம்முடைய பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு பகுதி வழியாக வீட்டுக்குள் நுழையும்போது பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும்  வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

சுற்றிலும் காலியிடம்

ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக இடம் இருக்கவேண்டும். அதன் மூலம், இயற்கை சக்திகளுக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க ஏதுவாக அமையும்.

நான்கு திசைகள்

பொதுவாக, எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய நான்கு பிரதான திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். அனைத்து திசை மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

கோண திசைகள்

அதேபோல இருதிசைகளின் சந்திப்பாக அமையும் நான்கு மூலைகளுக்கும் அவற்றிற்குரிய திசை அதிபர்கள் உண்டு. அதாவது, வடகிழக்குக்கு ஈசானியன், தென்கிழக்குக்கு அக்னிதேவன், தென்மேற்குக்கு நிருதி தேவன் மற்றும் வடமேற்குக்கு வாயு தேவன் என்று அஷ்ட திக்குகளையும் இயற்கை சக்திகளின் நிலையை குறிக்கக்கூடிய அதிபதிகளையும் நிர்ணயம் செய்து அதன்படி கட்டமைப்புகளை வடிவமைத்து முன்னோர்கள்

சிறப்பாக வாழ்ந்தார்கள் என்றும் வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story