புதிய வீட்டில் குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


புதிய வீட்டில்  குடியேறுபவர்கள்  கவனிக்க வேண்டிய அம்சங்கள்
x
தினத்தந்தி 2 March 2018 10:30 PM GMT (Updated: 2 March 2018 10:40 AM GMT)

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர்கள் அவ்வப்போது அலுவலக பணி, தொழில் அல்லது இதர காரணங்களுக்காக வீட்டை வேறு ஊர் அல்லது பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுவது வழக்கம்.

வீடு மாற்றம் செய்யும் சமயங்களில் வாடகை வீடு தேடுவதில் தொடங்கி, வீட்டிலுள்ள பொருட்களை கச்சிதமாக ‘பேக்கிங்’ செய்து புது வீட்டுக்கு எடுத்துச்செல்வது வரை அனைத்தையும் சரியாக பிளான் செய்யவேண்டும். அத்தகைய தருணங்களில் எந்தெந்த வி‌ஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் உள்ளிட்ட பலரும் ஆலோசனைகள் தந்துள்ளார்கள். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.  

சுமுகமான பழக்கம்

குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது ஊரில் குடியேறும்போது பொருட்களை தக்க ‘பேக்கர்ஸ் அன்டு மூவர்ஸ்’ மூலம் பத்திரமாக கொண்டு சேர்ப்பதில் தொடங்கி, அந்த பகுதியின் சுற்றுப்புற சூழலை கவனித்து பக்கத்து குடியிருப்புகளில் உள்ளவர்களோடு சுமுகமான பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது எதிர்கால நலன்களுக்கு உகந்தது.  

ஆவணங்கள் பத்திரம்

பொருட்களை தனிப்பட்ட முறையில் வேன் வைத்து எடுத்துச்சென்றாலும் அல்லது ‘பேக்கர்ஸ் அன்டு மூவர்ஸ்’ மூலம் எடுத்துச்சென்றாலும் நகைகள், ரொக்கப்பணம், முக்கியமான ஆவணங்கள், மற்ற பைல்கள் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் ‘பேக்கிங்’ செய்து நமது பாதுகாப்பிலேயே கொண்டு செல்வதே நல்லது.

ஒப்பந்த நிறுவனம்

பொருட்களை ‘பேக்கிங்’ செய்து தனிப்பட்ட முறையில் வேன் வைத்து எடுத்துச் செல்லும் பட்சத்தில் அவற்றை தக்க ஆட்கள் மூலம் லாரி அல்லது வேன்களில் ஏற்றுவதே நல்லது. மாறாக ‘பேக்கர்ஸ் அன்டு மூவர்ஸ்’ ஒப்பந்த நிறுவனத்தினர் எனும் பட்சத்தில் அனைத்து வேலைகளையும் அவர்களாகவே செய்து முடித்து விடுவார்கள்.

பல்வேறு இணைப்புகள்

வீடு மாற்றம் செய்யும் தருணங்களில் ரேசன் கார்டு, கியாஸ் இணைப்பு, பிராட்பேண்ட் இணைப்பு, கேபிள் இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளின் முகவரியை மாற்றம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

முக்கியமான அலுவலகங்கள்


குடியேறும் வீட்டிற்கு அருகில் உள்ள ரேசன் கடை, கியாஸ் ஏஜென்சி போன்றவற்றை விசாரித்து வைத்துக் கொள்வதோடு, முக்கிய அலுவலகங்கள், மின்சார அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் குடிநீர் வழங்கல் அலுவலகம், ஆகிய முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.

குழந்தைகள் நட்பு வட்டம்


வருடக்கணக்காக பழகிய சூழலை விட்டுவிட்டு வேறொரு இடத்துக்கு வீடு மாறுவது சில சமயங்களில் உணர்வு ரீதியான சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்து வீட்டினர், பழகிய நண்பர்கள் என அனைவரையும் விட்டுவிட்டு வேறு இடம் மாறும்போது குழந்தைகள் மன ரீதியான வெறுமையால் பாதிக்கப்படுவதாக மனோவியல்

நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், புதிய இடத்தில் குழந்தைகளுக்கான புதிய நட்பு வட்டத்தை அமைத்துக் கொடுப்பது அவர்களது மன நலனுக்கு உகந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய முகவரி


புதியதாக குடியேறும் வீட்டின் முகவரி அல்லது போன் நெம்பரை முந்தைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டுச் செல்லும் பட்சத்தில், கடிதங்கள் அல்லது கூரியர் தபால்கள் வந்தால் அவர்கள் தகவல் தர வசதியாக இருக்கும்.

Next Story