தரைத்தளங்கள் அமைப்பில் நிபுணர்கள் காட்டும் வழிமுறைகள்


தரைத்தளங்கள்  அமைப்பில்  நிபுணர்கள்  காட்டும்  வழிமுறைகள்
x
தினத்தந்தி 24 March 2018 3:00 AM IST (Updated: 23 March 2018 5:50 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் உள்ளிட்ட அனைத்து விதமான குடியிருப்பு பகுதிகளுக்கும் தரைத்தள அமைப்பு என்பது வெகுவாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

வீடுகள் உள்ளிட்ட அனைத்து விதமான குடியிருப்பு பகுதிகளுக்கும் தரைத்தள அமைப்பு என்பது வெகுவாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும். அழகான தரைத்தளம் என்பது வீட்டின் அழகை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியது என்று கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்றைய நாகரிக சூழலில் பல்வேறு வகைகளில் தரைத்தளத்திற்கான ‘டைல்ஸ்’ வகைகள் கிடைக்கும் நிலையில், அவற்றை தேர்வு செய்யும்போது பல அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டியதாக உள்ளது. அவற்றிம் முக்கியமான 5 வி‌ஷயங்கள் பற்றி கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுவதை இங்கே காணலாம்.

நிறங்கள்

தற்போது அடர்ந்த நிறங்களில் தரைத்தளங்களுக்கான டைல்ஸ் வகைகளை பதிப்பது நாகரிகமாக மாறிவருகிறது. இருப்பினும், சிறிய பரப்பளவு கொண்ட வீடுகளின் தரைத்தளங்களை வெண்மை சார்ந்த நிறங்களில் அமைக்கும்போது அவை அகலமான பரப்பளவு கொண்டவையாக தோற்றம் தரும் என்று அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற இடப்பற்றாக்குறை காரணமாக போதிய ஜன்னல்கள் பொருத்தப்பட முடியாத வீடுகளில் வெளிர் நிற ‘டைல்ஸ்’ பதிக்கும்போது வெளிச்சம் கூடுதலாக பிரதிபலிக்க ஏதுவாக அமையும்.  

பொருத்தமான இடம்

வீட்டின் எந்த பகுதிகளுக்கு எவ்வகை ‘டைல்ஸ்’ பதிக்கலாம் என்பதில் கச்சிதமாக செயல்படுவது அவசியம். அதாவது, குறைவான பராமரிப்புகள் மற்றும் எளிதாக ஈரப்பதம் உலரும் தன்மை கொண்ட செராமிக் அல்லது கிளாஸ் டைல்ஸ் வகைகள் சமையல் மற்றும் குளியல் அறைகளுக்கு பொருத்தமாக இருக்கும் ஹால் பகுதிகளில் மார்பிள் போன்ற தேர்வுகள் சரியானதாக இருக்கும். எவ்வகை ‘டைல்ஸ்’ வகையாக இருப்பினும், நீண்ட காலத்துக்கு உழைக்க வேன்டிய நிலையில் அவற்றின் தேர்வில் சரியாக செயல்படவேண்டியது அவசியம்.

பட்ஜெட்

தரைத்தள அமைப்பில் செய்யப்படும் செலவானது ஒரு வகையில் நீண்டகாலத்துக்கான முதலீடாக கவனிக்கப்படுகிறது. அந்த நிலையில் அவற்றின் தரத்தில் சமரச மனதோடு செயல்பட வேண்டாம் என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு டைல்ஸ் அல்லது மார்பிள் வகைகளில் சற்று கூடுதலாக வாங்கப்படுவது நல்லது. அதன் மூலம் பாதிப்படைந்த கற்களுக்கு மாற்றாக அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் மீதமான டைல்ஸ் பெட்டிகளை திரும்பவும் பெற்றுக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

எளிய பராமரிப்புகள்

வீடுகளின் தரைகள் எப்போதும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அவற்றை பராமரிப்பதில் போதிய நேரத்தை செலவிட இயலாமல் இருப்பவர்கள் ‘லேமினேட்டடு டைல்ஸ்’ வகைகளை பயன்படுத்தலாம். அவற்றை சாதாரண ‘மாப்’ கொண்டு சுத்தப்படுத்தினாலே போதுமானது. இதர முறையிலான தரைப்பரப்புகளை அமைக்கும்போது சுலபமாக பராமரிக்கும்படி இருக்குமாறு கவனித்துக் கொள்ளவேண்டும்.

‘கிரவுட்டிங்’

டைல்ஸ் வகைகள் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை தக்க முறையில் ‘கிரவுட்டிங்’ செய்யப்பட வேண்டும். அதன் மூலம், நீர் ஊடுருவுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், அவற்றின் இடைவெளிகளில் தூசிகள் படிவதும், காலப்போக்கில் அவை மங்கலாக மாறுவதும் தடுக்கப்படும்.

Next Story