இரண்டு நாட்களில் 10 அடுக்கு மாடி கட்டிடம்


இரண்டு நாட்களில்  10  அடுக்கு  மாடி  கட்டிடம்
x
தினத்தந்தி 23 March 2018 8:30 PM GMT (Updated: 23 March 2018 2:38 PM GMT)

இன்றைய உலகின் நவீன தொழில் நுட்பம் எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்கவே விரும்புகிறது.

ன்றைய உலகின் நவீன தொழில் நுட்பம் எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்கவே விரும்புகிறது. குறிப்பாக, கட்டுமான பணிகளில் வீடுகளை அமைக்க பல மாதங்கள் உழைப்பு தேவை என்ற நிலையில் 2 நாட்களில் 10 அடுக்கு மாடியை கட்டமைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தியாக உள்ளது.

முதல் முறை

இந்திய அளவில் 10 மாடி கட்டிடம் ஒன்றை இரண்டே நாட்களில் கட்டி முடித்து சாதனை படைப்பது இதுவே முதன் முறையாகும் அதன் அடிப்படையில் இந்த ‘இன்ஸ்டாகான்’ கட்டமைப்பு சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது.

நவீன தொழில்நுட்பம்

சத்திஸ்கர் மாநிலம் மொஹாலியில் சில வருடங்களுக்கு முன்னர் இளம் கட்டிட பொறியியல் வல்லுனர் இரும்பு சட்டங்களை அமைத்து இந்த சாதனை கட்டிடத்தை கட்டியிருக்கிறார். செங்கல், கிராவல், மணல் ஏதுமில்லாமல் 200 வேலையாட்கள் மற்றும் பல கிரேன்கள் உபயோகிக்கப்பட்டு இரட்டை அடுக்குகள் கொண்ட
PUF PANEL
மூலம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொருள் விரயங்கள் இல்லை

கிட்டத்தட்ட 200 டன்கள் இரும்பு பொருட்கள் மற்றும் 90 சதவிகித கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்பட்டு, அவற்றை கட்டுமான பணியிடத்தில் சரியாக பொருத்தினால் போதும் என்ற நிலையில் தயார் செய்து கொண்டு வரப்பட்டது. அதன் காரணத்தால், கட்டுமான பணிகளின்போது ஏற்படும் பல்வேறு பொருள் விரயங்கள் தவிர்க்கப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதிப்பில்லை

மேலும், தரை, தண்ணீர் இணைப்புகள், ஏசி இணைப்புகள், இயற்கைக்கு பாதிப்பில்லாத நவீன மின் சாதனங்கள் ஆகியவை உபயோகிக்கப்பட்டு விரைவாக கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் மாசு, தூசு பாதிப்பு போன்றவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளது.

தரச்சான்றிதழ்

இது போன்று உடனடியான 10 மாடி உயரம் கட்டிடம் இரண்டு நாட்களில் கட்டி முடித்து விடும் பட்சத்தில் அதன் பாதுகாப்பு பற்றி அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயற்கை. ஆனால், சென்னையில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகம்
(Council of Scientific and industrial Research) (CSIR)
அமைப்பு இந்த கட்டுமானத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கி உள்ளதோடு, நிலநடுக்கம் (ZoneV) ஏற்படும் சமயத்தில் நிலைத்து நிற்க ஏதுவான கட்டுமானம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கால கட்டிடங்கள்

அதன் தொழிநுட்ப அடிப்படையில் ஆடம்பர அலுவலகங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை இவாறு 48 மணி நேரத்தில் அமைக்ககூடிய தொழில் நுட்பம் பலரது கவனத்தை கவரக்கூடியதாக அமைந்துள்ளது. சண்டிகர் நகரில் அதை கட்டி முடித்தவர் ஹர்பால் சிங் என்ற பொறியாளர் ஆவார்.

தேவைகள் பூர்த்தி

கட்டுமானத்துறைக்கு இதுபோன்ற சாதனைகள் அளிக்கும் ஊக்கம் காரணமாக பல்வேறு கட்டுமானங்களை விரைவில் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலும். குறிப்பாக, நமது சிக்கல்களில் ஒன்றான அதிகப்படியான ஜனத்தொகை காரணமாக பல தேவைகள் விரைவாக பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்பது வரவேற்கக்கூடிய தொழில்நுட்பமாக கவனிக்கப்படுகிறது.

Next Story