பெருநகர வளர்ச்சிக்கு உறுதுணையாகும் நகர விரிவாக்கம்


பெருநகர வளர்ச்சிக்கு உறுதுணையாகும் நகர விரிவாக்கம்
x
தினத்தந்தி 31 March 2018 1:17 PM IST (Updated: 31 March 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

சென்னைப் பெருநகர பகுதி மற்றும் சென்னை மாவட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

சென்னைப் பெருநகர பகுதி மற்றும் சென்னை மாவட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விரிவாக்கம் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நகர விரிவாக்கத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் பற்றி அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை இங்கே காணலாம்.

பரப்பளவு அதிகரிப்பு

சென்னை என்பது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி பகுதிகளும் அடங்கியதாக மாறுவதோடு, சென்னையுடன் 1650-க்கும் மேற்பட்ட கிராமங்கள் புதிதாக இணைவதால், டெல்லி பெருநகரத்துக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய பெருநகர பகுதியாக சென்னை மாற்றம் பெற உள்ளது.

அடிப்படை தேவைகள்

இன்றைய தவிர்க்க இயலாத நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, சென்னையை சுற்றிலும் தரிசாக உள்ள விவசாய நிலங்கள் படிப்படியாக வீட்டு மனைகளாக மாற்றம் பெறுவது அவசியம் என்று அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெருநகர பகுதிகள் முறையாக திட்டமிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதோடு, மத்திய அரசு மானியம் மூலம் பாதாள சாக்கடை வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றையும் மேம்படுத்த இயலும்.

சி.எம்.டி.ஏ அப்ரூவல் பெறுவதற்காக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் தனித்தனி மண்டல அலுவலகங்கள் அமைத்தால், சுலபமான நிர்வாக முடிவுகளை எடுக்க இயலும். குறிப்பாக, பெருநகர பகுதியின் பரப்பளவு அதிகரிக்கும்போது, அதற்கேற்ப நிலம் மற்றும் வீட்டு மனைகளின் விலையும் அதிகரிக்கும் நிலையில், சாதாரண மக்களின் சொந்த வீட்டு கனவு நிறைவேறுவது மேலும் சிரமமாக அமையலாம். அதே சமயம் தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் வசதியால், பதிவு கட்டணங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கலாம் என்பது அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

இதர பெரு நகரங்கள்

மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில், நகருக்கு வெளிப்புறமாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாவட்டம் விரிவாக்கம் காரணமாக, மேற்கண்ட நகர அமைப்புகளைப்போல திட்டமிட்டு உள்கட்டமைப்புகளை செயல்படுத்தும் வாய்ப்புகள் இப்போது அமைந்துள்ளன. அத்தகைய திட்டமிட்ட விரிவாக்கம் செய்யப்படும் சமயத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது ஸ்மார்ட் சிட்டிக்கான உயர் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

ரியல் எஸ்டேட் வல்லுனர்கள்

சென்னையின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் அதன் உள் கட்டமைப்பை மேம்படுத்த நிறைய இடம் கிடைக்கும். ஆனால், மக்கள் தொகையின் அடர்த்தி எவ்வளவு இருக்கலாம்..? அங்குள்ள விவசாய நிலப்பகுதிகளின் அளவு என்ன..? போன்ற விஷயங்களை கச்சிதமாகவும், முறையாகவும் திட்டமிட்டுச் செயல்படுத்துவது பல எதிர்கால நலன்களை அளிக்கும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்.

உள் கட்டமைப்பு

சென்னை மாவட்ட விரிவாக்கம் ரியல் எஸ்டேட் சார்பான வளர்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல், புற நகர்ப்பகுதிகளில் சிறந்த முறையில் உள் கட்டமைப்பு வசதிகள் அமையும் சூழலில் வெவ்வேறு வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியிலான நிறுவனங்கள் புதியதாக துவங்கப்படுவதற்கும் சாதகமான சூழல் அமைந்துள்ளது. ஆனால், அவை நடைமுறைக்கு வருவதில் சற்று கால தாமதம் ஆகலாம்.

பசுமை பரப்பு பாதுகாப்பு


குறிப்பாக, சென்னை மாவட்டத்தின் பசுமைப் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை கணக்கில் கொண்டு, நீர் நிலைகள் உள்ளிட்ட அதன் பரப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுப்புற சூழலியலாளர்கள் கருத்தை அறிந்து அதையும் கவனத்தில் கொண்டு நகர விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னை மாவட்டம் தற்போது இருப்பதைவிட மேலும், பல நிலைகளில் வளர்ச்சி பெற்றதாக மாறும். நகர விரிவாக்கம் பற்றி மக்களிடையே கலந்து ஆலோசிப்பதும் நல்ல பல மாற்றங்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் என்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Next Story