வீடுகளை சுத்தப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பம்
‘சென்ட்ரல் வாக்குவம் கிளீனர்’ என்ற புதிய மாற்று தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது.
சுற்றுச்சூழல் மாசு என்றதும் பொதுவாக வீட்டுக்கு வெளியே உள்ள விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது நமது வீட்டுக்கு உட்புறமாகவும் இருக்கிறது. வீட்டுக்குள் நிலவும் காற்று மாசுபாடு காரணமாகவும், பலவித நோய் தொல்லைகள் ஏற்படுவதாக தகவல்கள் உள்ளன.
தூசிகளால் பாதிப்பு
‘பொல்யூஷன்’ என்றும் ‘டஸ்ட்’ என்ற வார்த்தைகளின் பின்னணியில் தூசியின் தாக்கம் இருக்கிறது. சுற்றுப்புற காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் தூசிகள் எளிதாக வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. நகர்ப்புற வீடுகள் ஒரு நாள் சுத்தம் செய்யாது விட்டுவிட்டால் மறுநாள் வீடு முழுவதும் தூசியானது, மெல்லிய அடுக்கு போன்று படிந்திருப்பதை கவனிக்க இயலும்.
நுண் கிருமிகள்
வெளிப்புற தூசியில் உள்ள ‘அலர்ஜென்’ மற்றும் ‘மைட்ஸ்’ என்ற மிக நுண்ணிய பொருட்கள் வீடுகளுக்குள் நுழைவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு ‘அலர்ஜி’ ஏற்படுகிறது. தினமும் இரு முறைகள் வீட்டை சுத்தம் செய்தாலும் ‘அலர்ஜென்கள்’ எளிதில் அகலுவதில்லை. இந்த சிக்கலை தவிர்க்க ‘வாக்குவம் கிளீனர்கள்’ பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது அவை தூசிதும்புகளை உறிஞ்சி ஒரு சேமிப்பு கலத்தில் சேர்த்து விடும். அதை எளிதாக சுத்தம் செய்து விடலாம். தூசிகள் பறக்காமல் உறிஞ்சப்படுவது இம்முறையில் உள்ள தனித்தன்மையாகும். இவை செயல்படும்போது சப்தம் வருவதுடன், எடையுடன் கூடிய கருவியை நம்மோடு நகர்த்தி செல்ல வேண்டியதாக இருக்கும்.
அனைவரும் இயக்கலாம்
அந்த கருவியை நகர்த்தியவாறு சுத்தம் செய்யும் முறைக்கு மாற்றாக ‘சென்ட்ரல் வாக்குவம் கிளீனர்’ என்ற புதிய மாற்று தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கிறது. பயன்படுத்த எளிதாக உள்ள இக்கருவியில், அறையின் நீள அகலத்துக்கு தக்க அளவு நீண்ட பிளாஸ்டிக் குழாயும் அதன் முனையில் தூசிகளை உறிஞ்சும் பகுதியும் பொருத்தப்பட்டுள்ளதோடு, உறிஞ்சப்பட்ட தூசிகள் சென்று சேரும் பெட்டி அமைப்பு வீட்டின் வேறொரு இடத்தில் இருக்கும். குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே உபயோகிக்கும் விதத்தில் எளிமையான அமைப்பில் இவை உள்ளன.
மத்திய சேமிப்பு பெட்டி
புதிதாக கட்டப்படும் வீடுகளில் இவற்றை சுலபமாக அமைக்கலாம். பழைய வீடுகளிலும்கூட ‘ரீ மாடலிங்’ முறையில் இவற்றை அமைத்துக்கொள்ள இயலும். வீட்டின் அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் ‘பிளாஸ்டிக்’ குழாய்கள் பதிக்கப்பட்டு சிமெண்டு அல்லது ‘ஜிப்சம் பூச்சு’ கொண்டு மூடப்பட்டு, அவற்றின் முனைகளில் உள்ள ஒரு அமைப்பில் சுத்தம் செய்ய பயன்படும் குழாயின் ஒரு முனை சரியாக பொருந்துவது போன்ற ‘பிட்டிங்குகள்’ அமைக்கப்படும். அவை ‘இன்லெட்’ என்று சொல்லப்படும். சுத்தம் செய்யும் குழாயின் ஒரு முனையை அந்த ‘இன்லெட்டில்’ சரியாக பொருத்தி விட்டு இயக்கினால் குழாயின் மறு முனையிலிருக்கும் பகுதி தூசிகளை உறிஞ்சி, முன்பே சுவருக்குள் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியாக வீட்டின் வேறொரு பகுதியில் அமைந்துள்ள சேமிப்பு கலனில் தூசிகளை சேர்த்து விடும்.
Related Tags :
Next Story