பாரம்பரியத்தை குறிப்பிடும் கட்டுமான பொருட்கள்


பாரம்பரியத்தை குறிப்பிடும் கட்டுமான பொருட்கள்
x
தினத்தந்தி 6 April 2018 10:45 PM GMT (Updated: 6 April 2018 11:52 AM GMT)

சில பழைய வழிமுறைகள் மற்றும் பொருட்கள் இன்னும் பல இடங்களில் கட்டுமான பணிகளில் பராம்பரிய முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

ட்டுமான பணிகளில் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் பல்வேறு உப பொருட்களை அளித்திருக்கிறது. இருப்பினும், சில பழைய வழிமுறைகள் மற்றும் பொருட்கள் இன்னும் பல இடங்களில் பராம்பரிய முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கட்டிட பணிகளில் பல்வேறு கற்கள் பயன்படுகின்றன. ஆனால், கல் என்பது பொதுவாக கருங்கல்லையே குறிப்பிடுகிறது. பொதுவாக, கற்களின் தன்மை மற்றும் உபயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் பல விதங்களாக அவை குறிப்பிடப்படுகின்றன. அவை பற்றிய சில விபரங்களை இங்கே காணலாம்.

முண்டுக்கல்

சிறிய வகை மலைப் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு முண்டுக்கல் என்று பெயர். வழக்கமாக இவை சதுரம் மற்றும் செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். அஸ்திவார பணிகள் மற்றும் தாங்கு சுவர்கள் ஆகியவற்றை அமைக்க இவை பயன்படுகின்றன. 

பாண்டுக்கல் 

முண்டுக்கல் வகைகளில் இது ஒரு வகையாகும். வழக்கமாக, ஒன்றரை அடி நீளம் கொண்டதாகவும், 10 அல்லது 11 அங்குல உயரம் கொண்டதாகவும் இருக்கும். கட்டிடங்களின் கார்னர் அதாவது மூலைப்பகுதிகளில் விரிசல்கள் ஏற்படாமல் தடுக்க இவ்வகை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆலங்கல்

காரை வீடு என்று சொல்லப்படும் கான்கிரீட் வீட்டின் (பழைய காலங்களில் வீடுகள் மண்ணால் அமைக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வந்தது) முன்பகுதியில் தாழ்வாரம் அமைப்பதற்காக, சுவரின் வெளிப்புறத்தில், படுகிடை நிலையில் நீளமாக பொருத்தப்படும் கல்லாகும். அதில் மரங்கள் அல்லது மூங்கில்கள் போன்றவற்றை பொருத்த வசதியான பள்ளம் (ஷிலிளிஜி) போன்ற அமைப்பு செதுக்கப்பட்டிருக்கும். கவை அல்லது கொக்கி போன்றும் காணப்படுவதால் கொக்கிக்கல் என்றும் இவை குறிப்பிடப்படும். 

செங்கல்

மண்ணால் வடிவமைத்து, நெருப்பால் சுடப்பட்டு மூன்று அங்குலம் வரை அகலம் கொண்டதாக செங்கல் தயாரிக்கப்படுகிறது. அதை உடைக்காமல் அப்படியே பயன்படுத்தினால் முழுக்கல் என்றும், இரண்டாக உடைத்துப் பயன்படுத்தினால் அரைக்கல் என்றும், சிறுசிறு துகள்களாக உடைத்து பயன்படுத்தினால் கண்டிக்கல் என்றும் குறிப்பிடப்படும். 

சித்துக்கல்

செங்கல்லின் அளவை விடவும் சிறிய அளவில் தயாரிக்கப்படும் கல் சித்துக்கல் என்று சொல்லப்படும். நுட்பமான கட்டுமான வேலைகளுக்கு இக்கல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இரண்டு அங்குல கற்களை மாடிப்படியின் கைப்பிடி பகுதிகளை அமைக்க பயன்படுத்துவது வழக்கம். ஒரு அங்குல அளவுள்ள கற்கள் வீட்டின் முன்புற கூரைப்பகுதி பணிகளுக்கும், வீட்டின் உட்புறத்தில் பொருள் வைக்கும் அலமாரி அமைக்கவும் பயன்படுத்தப்படுவது வழக்கம். 

பிஸ்கட் கல் 

இவை ‘கிர‌ஷர்’ தூசி கொண்டு ‘ஹாலோ பிளாக்’ போன்று தயாரிக்கப்படுவதோடு, அதனுள் மணல் மற்றும் ஜல்லி அதிகமாக இல்லாத காரணத்தால் கூடுதல் எடை இல்லாமல் லேசாக இருக்கும். 

சிமெண்டு கல் 

செங்கலுக்கு பதிலாக சிமெண்டு மற்றும் மணல் கலந்து பல சைஸ்களில் பிளாக்குகள் என்ற கற்கள் உருவாக்கப்பட்டால் அவை சிமெண்டு கல் என்று சொல்லப்படும். 

பல்வேறு இடங்களில் உள்ள கட்டுமான பணியாளர்கள் ஒரு பொருளை குறிக்க பயன்படுத்தும் சொற்கள் ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை காரணப்பெயர்களாக உள்ளதையும் காணலாம்.

Next Story