கனவு இல்லத்தில் சுட்டி குழந்தைகள் அறை


கனவு இல்லத்தில் சுட்டி குழந்தைகள் அறை
x
தினத்தந்தி 7 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 5:33 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட அறை என்பது அவர்களது உற்சாகத்தை அதிகரிக்கும் வி‌ஷயம் என்று குழந்தைகள் நல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ல்வேறு பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி கனவு வீடுகளை கட்டமைக்கும்போது அல்லது வாங்கும்போது அவற்றில் சுட்டி குழந்தைகள் சுதந்திரமாக துள்ளித்திரியும் ஒரு இடமாக, அவர்களுக்கென்று ஒரு தனி அறையை ஒதுக்குவது பெருநகரங்களில் வழக்கமாகி வருகிறது. புதிய வீடுகளில் குடியேறும் சமயங்களில் குழந்தைகள் பரபரப்பு அடைவதாக அறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அவர்களுக்கென்று தனிப்பட்ட அறை என்பது அவர்களது உற்சாகத்தை அதிகரிக்கும் வி‌ஷயம் என்று குழந்தைகள் நல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுட்டி குழந்தைகளுக்கென்று தனி அறை ஒதுக்கும்போது எந்தெந்த வி‌ஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடும் பொதுவான தகவல்களை இங்கே காணலாம். 

தனி கப்போர்டுகள்

குழந்தைகள் அறைகளில் பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றை பத்திரமாக வைக்க போதுமான அலமாரிகள் இருக்கவேண்டும். அதன் காரணமாக, பொருட்களை அறையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்லாமல், அவற்றிற்குரிய இடத்தில் வைக்கும் பழக்கம் ஏற்படும். குறிப்பாக, அவர்களது ஆடைகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்களுக்கென்று தனித்தனி ‘கப்போர்டுகள்’ இருப்பது நல்லது.

பராமரிப்புகள்

பர்னிச்சர்களை அவர்களது உயரத்துக்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் அறைகளில் அமைக்கவேண்டும். சிறிய அளவிலான நாற்காலி, எழுதப்படிக்க பயன்படும் மேஜை, புத்தக அலமாரி, சிறிய அளவுள்ள சோபா என்று குட்டிப்பசங்களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரலாம். அவர்கள் அறையை அவர்களே பராமரிக்க கற்று தருவதோடு, பாடப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை சரியான இடங்களில் வைக்கவும் கற்றுத் தரவேண்டும். 

தரையை பொறுத்த வரையில் எளிதில் சுத்தம் செய்யக்கூடியதும், அதிகம் வழுக்காததுமான வகைகளே அவர்களுக்கு பொருத்தமானது. தரை விரிப்புகள் வி‌ஷயத்திலும் தக்க கவனத்தோடு தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

அடிப்படை வசதிகள்

குழந்தைகளின் படுக்கை கச்சிதமாகவும், சவுகரியமானதாகவும் இருப்பதாக அமைத்து, அதன் கீழ்ப்பகுதியில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றை வைக்க வசதிகள் செய்து தரலாம். மேலும், அவர்களுடைய பொருட்களை அவர்களே பராமரிக்கும்படி இருக்கவேண்டும். அதிகப்படியான வேலைப்பாடுகள் உள்ள பொருட்களைவிடவும், அடிப்படை வசதிகள் கொண்ட பொருட்களே எப்போதும் நல்லது. 

அவர்கள் அறையில் தனிப்பட்ட பாத்ரூம் இருப்பதோடு, குழந்தைகளின் அறை பெற்றோரின் அறையை ஒட்டியவாறு அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் உறக்கத்தில் கனவு கண்டு பயந்து விடும் சமயங்களில் அல்லது அவசரத் தேவைகளின்போது உடனே கவனிக்க வசதியாக இருக்கும். பெற்றோர் அறையிலிருந்து, பிள்ளைகளின் அறைக்கு செல்வதற்கான வழியும் இருக்கவேண்டும். 

காற்றோட்டம் முக்கியம்

எல்லாவற்றையும் விட அவர்களது அறையில் காற்று மற்றும் வெளிச்சம் ஆகியவை எளிதாக நுழையும் வசதிகள் வேண்டும். அவர்களது வயதுக்கேற்ப விருப்பங்களும், கற்பனைகளும் மாறுபடுவதை கணக்கில் கொண்டு அறையின் அமைப்புகளில் மாற்றங்களை செய்யலாம்.

குறிப்பாக, குழந்தைகளின் அறைகளில் உள்ள பர்னிச்சர்களின் முனைகள் கூர்மையாக இல்லாமல், வளவளப்பாக பாலீஷ் செய்து விட்டால், கூரான முனைகள் அவர்களை காயப்படுத்தும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும். 

அறையின் அருகிலேயே குளியலறை அமைத்தால் பள்ளிக்குக் கிளம்புவதற்கு எளிதாக இருக்கும். அறையில் பால்கனி இருந்தால் அவற்றின் மீது தக்க தடுப்புகளை அமைக்கவேண்டும்.

Next Story