சென்னை பெருநகரத்தின் புவிசார் தகவல் வரைபடம்


சென்னை பெருநகரத்தின் புவிசார் தகவல் வரைபடம்
x
தினத்தந்தி 7 April 2018 5:00 AM IST (Updated: 6 April 2018 5:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னை நகரத்தின் நிலப்பகுதிகள் ஆளில்லா ‘ட்ரோன்’ குட்டி விமானம் மூலம் டிஜிட்டல் படங்களாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி ‘ஹெலிகாப்டர்’ மூலம் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் (Geographic Information System) தயாரிக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு அரசால் தொடங்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சகம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் விமான நிலைய ஆணையகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள் மூலம் சென்னை நகரத்தின் நிலப்பகுதிகள் ஆளில்லா ‘ட்ரோன்’ குட்டி விமானம் மூலம் டிஜிட்டல் படங்களாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 426 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள சென்னை மாநகரம் முழுவதும் ‘ட்ரோனில்’ பொருத்தப்பட்டுள்ள ஆளில்லா கேமரா மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது.

வரைபட ஒப்பீடு

இவ்வாறு படமாக பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் நில அமைப்பை, நிலத்தின் எல்லைகளை குறிக்கும் வரைபடத்தோடு ஒப்பிட்டு அதில் காணப்படும் வித்தியாசங்களை எளிதாக கண்டறியலாம். மேலும், விதி மீறல் கட்டுமான அமைப்புகளையும் சுலபமாக அடையாளம் காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவற்றின் பாதைகளில் உள்ள மாற்றங்களையும் கண்டறிய முடியும். 

டிஜிட்டல் பதிவுகள்

அந்த படங்களில் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகள், இதர பகுதிகளில் உள்ள நில அமைப்புகள், நீர்நிலைகள், போக்குவரத்து நெரிசல், நிலப்பரப்பு உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் படங்களாக பதிவாகும். மேலும் இதன் மூலம் வருங்காலங்களில் நிகழக்கூடிய புவியியல் மாற்றங்கள் முதல் அனைத்து விவரமும் சேகரிக்க முடியும் என கூறப்படுகிறது.

அனைத்து பகுதிகள்

ஆளில்லா விமானம் மூலம் சேகரிக்கப்படும் பதிவுகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது. புவி சார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, சென்னை மாநகர் முழுவதும் உள்ள வீடுகள், பூங்காக்கள், நீர்நிலைகள், ரெயில் நிலையம் போன்ற போக்குவரத்து நெரிசல், நிலப்பரப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பதிவு செய்யப்பட்டு, புவிசார் தகவலுக்கான துல்லிய வரைபடமாக அமைக்கப்படும்.

Next Story