காம்பவுண்டு சுவரில் அமைக்கும் இரும்பு கதவுகள்


காம்பவுண்டு சுவரில் அமைக்கும் இரும்பு கதவுகள்
x
தினத்தந்தி 6 April 2018 11:45 PM GMT (Updated: 6 April 2018 12:14 PM GMT)

வீடுகள் உள்ளிட்ட இதர குடியிருப்புகளில் பாதுகாப்புக்கான சுற்றுச்சுவரில் அமைக்கப்படும் ‘கேட்’ வகைகள் பலவித பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு சில இடங்களில் வலுவான மரப்பலகைகளால் உருவாக்கப்பட்ட ‘கேட்’ அமைப்புகளையும் பலர் கவனித்திருக்கலாம். பொதுவான பயன்பாட்டில் உள்ள காம்பவுண்டு கேட்டுக்கான இரும்பு கதவு வகைகள் பற்றி இங்கே காணலாம்.

துருப்பிடிக்காத இரும்பு

இரும்பு வகைகளில் துருப்பிடிக்காத தன்மையும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் எடை குறைவான தன்மை கொண்டதாகவும் இருப்பதால், இவ்வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேட் அமைப்பு பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றின் இயல்பாகவே இவை பளபளப்பாக இருக்கும் காரணத்தால் வர்ண பூச்சுகள் மேலே பூச வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அதிகப்படியான பராமரிப்புகளும் இதற்கு தேவைப்படுவது இல்லை. 

மென் இரும்பு

‘மைல்டு ஸ்டீல்’ எனப்படும் இவ்வகை மென் இரும்பு கதவுகள் பளபளப்பான தோற்றத்துடன் இருக்காது. அதனால் தகுந்த வண்ண பூச்சுகள் செய்யப்படுவது அவசியமானது. இல்லாவிட்டால் ஈரப்பதம் காரணமாக துருப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. வலிமையான, பாதுகாப்பான அமைப்பாக இருப்பதால் எல்லா இடங்களிலும் ‘காம்பவுண்டு கேட்’ என்றாலே இவ்வகை இரும்பு ‘கேட்டுகள்தான்’ பயன்படுத்தப்படுகின்றன.

‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடுலர் கேட்’ 

இவ்வகை கதவுகள் இரண்டு மூலப்பொருட்களான துருப்பிடிக்காத இரும்பு மற்றும் ‘பைபர் சிமெண்டு’ பலகைகள் ஆகியன கொண்டும் வடிவமைக்கப்பட்டவை ஆகும். செலவு அதிகமாக இல்லாமல் சிக்கன பட்ஜெட்டில் ‘காம்பவுண்டு கேட்’ அமைக்க வேண்டும் என்றால் இவ்வகை கதவுகள் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

கம்பி வலை கேட்டுகள்

‘வெல்டு மெஷ் கேட்’ என்ற கம்பி வலையால் தயாரிக்கப்பட்ட இவை வெளிப்புற சுவர்களில் அமைக்கப்படும் கதவுகளுக்கு மிகவும் ஏற்றதாகும். காரணம், இது எளிதான கட்டமைப்பு கொண்டதாக உள்ளது. நான்கு புறமும் இரும்பு குழாய்கள் ‘வெல்டிங்’ மூலமாக இணைக்கப்பட்டு அதன்மீது வலுவான இரும்பு வலை பொருத்தப்படுகிறது. எடை குறைவாக இருப்பதால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். சரியான முறையில் தகுந்த வடிவத்தில் அமைப்பதோடு, அழகிய முறையில் வண்ண பெயிண்டிங்கும் செய்துவிட்டால் நல்ல தோற்றத்துடன் இருக்கும்.

Next Story