தமிழ் மண்ணின் பாரம்பரியம் கூறும் தரைத்தள கற்கள்


தமிழ் மண்ணின் பாரம்பரியம் கூறும்  தரைத்தள கற்கள்
x
தினத்தந்தி 13 April 2018 11:15 PM GMT (Updated: 13 April 2018 10:27 AM GMT)

இன்றைய காலகட்ட கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

தரைத்தள அமைப்பில் மார்பிள், கிரானைட், போர்சிலின் மற்றும் செராமிக் உள்ளிட்ட வெவ்வேறு வகை கற்கள் பரவலாக உபயோகத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நமது பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 100 வருடங்களுக்கு மேலாக குடிசைத்தொழிலாக தரைத்தளத்தில் பதிக்கப்படும், பூக்கற்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குடிசைத்தொழில்

ஆத்தங்குடி என்ற சிற்றூரில் பாரம்பரியமிக்க பூவேலை மிக்க தரைக்கற்கள் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. குடும்ப பரம்பரைத் தொழில் என்ற நிலையில் மூன்று தலைமுறைகளாக, இவ்வகை பூக்கற்கள் தயாரிக்கப்பட்டு, நமது பகுதிகளுக்கும், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

குளிர்ச்சியான தன்மை

தமிழ் மண்ணின் பாரம்பரியமாக பார்க்கப்படும் இந்த தரைக்கற்கள் தயாரிப்பில் 20–க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில் 100–க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகை பூக்கற்கள் மழைநீர் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றால் செய்வதால் கல்லின் குளிர்ச்சித்தன்மை பல தலைமுறைகள் கடந்தும் நிற்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு அளவுகள்


கிராமத்து தயாரிப்பாக இருந்தாலும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவம் மற்றும் வண்ணத்தில் அவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வகை கற்கள் எட்டு சதுர அங்குலம், பத்து சதுர அங்குலம், பனிரெண்டு சதுர அங்குலம் என்ற மூன்று அளவுகளில் தயாரிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

 உள்ளூர் மூலப்பொருட்கள்

பழங்காலம் முதலாக ஆத்தங்குடி பகுதிகளில் தயாரிக்கப்படும் இவ்வகை கற்கள் தயாரிப்பில் இப்பகுதியில் கிடைக்கும் ஒருவகை வாரிமண் பயன்படுத்தப்படுகிறது. கண்ணைக்கவரும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூ வடிவங்கள் தரைக்கற்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மெருகூட்டத் தேவை இல்லாத இந்த பதிகற்கள் நீண்ட நாள் உழைப்பு, மிதமான குளிர்ச்சி மற்றும் நிறம் மங்காத சாயங்களின் பயன்பாடு போன்றவற்றால் தமிழகத்தின் பல இடங்களில் ஆங்காங்கே உபயோகத்தில் உள்ளது.

தயாரிப்பு முறைகள்

இறக்குமதி செய்யப்பட்ட பர்மா தரைக்கல் போன்ற அமைப்பில் இருப்பதால் இவ்வகை பூக்கற்கள் ஏழைகளின் ‘கிரானைட்’ என்று வேடிக்கையாக குறிப்பிடப்படுகிறது. உள்ளூரிலேயே கிடைக்கும் மண், சிமெண்ட், பேபி ஜெல்லி உள்ளிட்ட சில செயற்கை ஆக்ஸைடுகள் ஆகியவற்றைக் கலந்து செய்யப்படும், இதன் தயாரிப்புப் பணி கடுமையான பல நிலைகளை உள்ளடக்கியது.

தயாரிப்பின் முதல் கட்டமாக கற்களுக்கான அலங்கார வடிவ வார்ப்பு கண்ணாடிமீது வைக்கப்படும். வார்ப்பு பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். பூ வடிவ வார்ப்பு என்றால் பூவின் இதழ்களுக்கான பிரிவுகள் தனித்தனியாக இருக்கும். ஒவ்வொரு பிரிவுக்குமிடையில் சிறிய தடுப்பு இருப்பதால்,அவற்றில் வண்ணக் கலவையை ஊற்றும்போது தனித்தனியான பூ வடிவம் உருவாகும். அந்த வார்ப்பின் மீது செயற்கை அல்லது இயற்கை வண்ணக் கலவை ஊற்றப்படும்.

தண்ணீரில் பதப்படுத்தல்

இவ்வாறாக, தரைக்கல்லின் முன்பக்க வேலைப்பாடுகள் முடிந்த பின்னர், வார்ப்பின் பின்பக்கத்தில் உலர்ந்த மணல், சிமெண்டு கொண்ட கலவையை இட்டு நிரப்பப்படும். அதன் மீது ஈர மணல், சிமெண்டு கலவை வைத்துப் பூசப்படும். சமதளக் கரண்டி உதவியுடன் பின்பக்கத்தின் மேற்பரப்பு வழவழப்பாக மாற்றப்பட்டு, ஈரக்கலவை, உலர் கலவையுடன் கச்சிதமாக இணையும்படி அழுத்தம் கொடுக்கப்படும். இந்த பணிகள் முடிந்தவுடன், கற்கள் வார்ப்பிலிருந்து எடுத்து உலர வைக்கப்படும். போதுமான அளவுக்கு உலர்ந்த பின், கற்களை பயன்படுத்துவதற்கு வசதியாக தண்ணீரில் பதப்படுத்தப்படும். அதன் பிறகு கற்கள் தரைத்தள அமைப்புக்கு தயாராகிவிடும்.

Next Story