தண்ணீர் தேவையை குறைக்கும் கட்டுமான தொழில்நுட்பம்


தண்ணீர்  தேவையை  குறைக்கும்  கட்டுமான  தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 3:57 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளில் தண்ணீரின் அவசியம் பற்றி அனைவரும் அறிந்த வி‌ஷயம்தான்.

ட்டுமான பணிகளில் தண்ணீரின் அவசியம் பற்றி அனைவரும் அறிந்த வி‌ஷயம்தான். கடைக்கால் பணிகள் முதல் மேல்மாடி வெப்பத் தடுப்பு ஓடுகள் பதிப்பது வரை அனைத்து வேலைகளுக்கும் தரமான தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. நமது பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டும் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

தண்ணீர் பயன்பாடு

உலக அளவில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இப்போது அதிகமாகி வருவதாகவும் பல நாடுகள் தனி நபர் உபயோகம் முதல் கட்டுமான பணிகள் வரையில் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளன. ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள நகராட்சி நிர்வாக அமைப்புகள் தங்களிடம் வந்துள்ள கட்டிட அனுமதி கேட்கும் விண்ணப்பங்களுக்கான ஒப்புதலில், அதிகபட்சமாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதை குறிப்பிடுகிறார்கள். 

கட்டுமான துறைக்கு நான்காமிடம்

மேலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பல்வேறு நாடுகளில் கட்டுமான பணிகளுக்காக கூடுதலாக தண்ணீரை பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. உலக அளவில் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்தும் துறைகளில் நான்காம் இடத்தில் இருப்பது கட்டுமானத்துறை என்று அறியப்பட்டுள்ளது. 

புதிய தொழில்நுட்பம்

மேற்கண்ட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம், தண்ணீர் உள்ளிட்ட சிமெண்டு, மணல் ஆகிய கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தாமல் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை அமைக்கும் தொழில்நுட்ப அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சிமெண்டு உபயோகத்துக்கு மாற்றாக அமைந்த மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பிரீ–பாலிமரைஸ்டு பொருட்கள் ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் கலந்து, சிமெண்டை விட வலிமையான கட்டுமான துணைப்பொருளாக தயாரிக்கப்படுகிறது.

தண்ணீர் அவசியமில்லை

அந்த பொருளை தண்ணீர் கலக்காமல் சுவர்கள் மற்றும் மேற்பூச்சு பணிகளுக்காக எளிதாக பயன்படுத்தலாம். குறிப்பாக, கியூரிங் என்ற நீராற்றல் செய்வதற்கான தண்ணீரின் தேவை பெருமளவுக்கு குறைகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த தொழில் நுட்பம் காரணமாக கட்டுமான பணிகளில் தண்ணீரின் தேவை 50 சதவிகிதத்துக்கும் மேலாக குறைவதாகவும் சொல்லப்படுகிறது. 

வெவ்வேறு தயாரிப்புகள்

அனைத்து வகையான சுவர் கட்டுமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கவும், செங்கல் மற்றும் கட்டிட பிளாக் ஆகியவற்றை இணைக்க உதவும் பிளாஸ்டர் வகை, சுவர்களின் மேற்பரப்பில் அமைக்கும் ஜிப்சம் பிளாஸ்டர், பட்டி பார்த்தல் போன்ற வேலைகளை தவிர்க்க உதவும் விஷேச சுவர் மேற்பூச்சு கலவை, தாமாகவே உலரும் தன்மை கொண்ட ஒருவித பசைப்பொருள் ஆகிய நவீன கட்டுமான துணைப்பொருட்கள் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சிமெண்டு மற்றும் மணல் ஆகியவற்றை கட்டிட பணிகளில் பயன்படுத்துவது வெகுவாக குறைவதாகவும் சொல்லப்படுகிறது.

பல்வேறு பணிகள்

மேலும், கட்டுமான அமைப்புகளின் முன்பக்க தோற்றம், வடிவம் மற்றும் அவற்றின் மேற்பூச்சுக்கு ஏற்றதாகவும், சிறு விரிசல்கள், இணைப்புகள், வெடிப்புகள் ஆகியவற்றை சரி செய்வதோடு, சுவர் மேற்பூச்சு மற்றும் இன்டிரியர் பணிகளுக்கு உகந்த அக்ரிலிக் வகை பசைப்பொருளையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றை சுவர் அமைக்கும் பணிகள், மேற்பூச்சு, சீலிங் பூச்சு, வெளிப்புறச் சுவர்களுக்கான

 பூச்சு வேலை, இன்டீரியர் ஆகிய பணிகளை செய்ய மேற்கண்ட கண்டுபிடிப்புகள் உகந்ததாக உள்ளது. 

‘கிரீன் பில்டிங்’ பொருட்கள் 

தண்ணீர், சிமெண்டு மற்றும் மணல் ஆகிய மூலப்பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைவாகவும், சுற்றுச் சூழலுக்கும், சுலபமான பயன்பாடுக்கு ஏற்றதாகவும் உள்ள மேற்கண்ட கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி வட மாநிலங்களில் பசுமை கட்டிட அமைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக, புனே போன்ற மாநிலங்களில் 100 சதவிகித ‘கிரீன் பில்டிங்’ பொருட்கள் மூலம் பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

Next Story