வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களை அகற்ற விதிமுறைகள்


வீடுகளுக்கு  அருகில்  உள்ள  மரங்களை  அகற்ற  விதிமுறைகள்
x
தினத்தந்தி 20 April 2018 10:00 PM GMT (Updated: 20 April 2018 10:35 AM GMT)

குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தும் பசுமையான மரங்கள் வீடுகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தும்படியாகவோ அல்லது ஆபத்தான முறைகளிலோ வளர்ந்திருக்கும் நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி விதிமுறைகளை அளித்துள்ளது.

குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தும் பசுமையான மரங்கள் வீடுகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தும்படியாகவோ அல்லது ஆபத்தான முறைகளிலோ வளர்ந்திருக்கும் நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி விதிமுறைகளை அளித்துள்ளது. அவை பற்றி கீழே காண்போம். 

தனியார் வீடுகள் அல்லது நிறுவனங்கள்

* தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள மரங்கள் அல்லது அதன் கிளைகள் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பை விளைவிக்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டால், சென்னை மாநகராட்சி சம்மந்தப்பட்ட மரம் உள்ள இடத்தின் உரிமையாளர் அல்லது நிறுவனத்திற்கு அதை அகற்றக்கோரும் சட்டப்படியான எழுத்து வடிவ உத்தரவு வழங்கப்படும். 

* முன்று நாட்களுக்குள் மரம் அப்புறப்படுத்தப்படாத நிலையில் மாநகராட்சி முன்னின்று அதனை அகற்றி, அதற்கு ஆகும் செலவு தொகையை சம்மந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்திடமிருந்து வசூல் செய்யப்படும்.

தெரு அல்லது சாலையில் உள்ள ஆபத்தான மரங்கள்

* தெருக்கள் அல்லது சாலைகளில் இடையூறாக, உயிருடன் அல்லது காய்ந்த மரங்களை அகற்ற சம்மந்தப்பட்ட மண்டல அலுவரிடம் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்யவேண்டும்.  

* சம்மந்தப்பட்ட கோட்ட பொறியாளர் மற்றும் பூங்கா பணியாளர் ஆகியோர் கள ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை அப்பபகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர், வட்டார மேற்பார்வை பொறியாளர் வழியாக வட்டார துணை ஆணையர் அவர்களுக்கு 3 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார்கள். மரத்தை மாற்றி நடுவது மற்றும் புதியதாக 10 மரங்கள் நடுவதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கையாக தெரிவிக்கப்படும். 

* வட்டார துணை ஆணையர் கோப்பினை ஆய்வு செய்து அல்லது கள ஆய்வு செய்து, காய்ந்த மரமாக இருந்தால் 2 நாட்களுக்குள்ளும், உயிருள்ள மரமாக இருந்தால் 15 நாட்களுக்குள் அகற்ற இறுதி ஆணை பிறப்பிக்கப்படும். 

* மரம் உயிர்ப்புடன் இருக்கும்பட்சத்தில் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் மனுதாரருக்கு தோராய செலவு தொகையை குறிப்பிட்டு கட்டுவதற்கு எழுத்து வடிவ ஆணை வழங்கப்படும். 

* செலவுத் தொகை பெறப்பட்ட 7 நாட்களுக்குள் மரம் அகற்றப்படுவதோடு, அதே நாளில் அதற்கு ஈடாக 10 மரங்கள் வேறு இடங்களில் நடவேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டிய மரத்தை, வேறொரு இடத்தில் நடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

* வட்டார துணை ஆணையர் அவர்கள் நிராகரிக்கும் பொருட்டு மனுதாரர் துணை ஆணையர் (பணிகள்) அல்லது ஆணையர் அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம்.

Next Story