செங்கலுக்கு மாற்றாக அமைந்த புதுவகை கற்கள்


செங்கலுக்கு மாற்றாக அமைந்த  புதுவகை கற்கள்
x
தினத்தந்தி 27 April 2018 10:00 PM GMT (Updated: 27 April 2018 10:32 AM GMT)

கால மாற்றத்திற்கேற்ப கட்டுமானத்துறையில் புதிய யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

செங்கலுக்கு மாற்றாக பல்வேறு தயாரிப்புகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அத்தகைய புதிய அறிமுகங்களில் கட்டுமான வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்ததாக ‘போரோதெர்ம்’ வகை கற்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.  

களிமண் கற்கள்

எவ்விதமான ரசாயன பொருட்கள் அல்லது சிமெண்டு வகையிலான உபபொருட்கள் கலக்கப்படாமல் களிமண் கொண்டு இவ்வகை கற்கள் தயார் செய்யப்படுகின்றன. அதே சமயம், சரியான அளவுகள், குறைவான எடை மற்றும் ஒழுங்கு பெற்ற தன்மை கொண்டவை ‘போரோதெர்ம்’ கற்கள் என்றும் கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தட்பவெப்ப சமநிலை

இவ்வகை கற்களின் உட்புறத்தில் பெரிய அளவு கொண்ட துளைகள் அமைந்திருப்பதால், அதற்குள் உள்ள காற்று அறையின் வெப்ப நிலையை குளிர்ச்சியாக மாற்ற உதவுகின்றன. அதே சமயம் வெளிப்புறத்தில் நிலவக்கூடிய வெப்ப நிலையை கட்டிடத்தின் உட்புறமாக ஊடுருவச் செய்யாமலும் தடுக்கிறது.

சுவர்கள் கட்டமைப்பு

அதன் நான்கு புறமும் அமைந்துள்ள வரி வடிவங்கள் காரணமாக, வெப்பக் காற்று உள்வாங்கப்பட்டு அறையின் வெப்ப நிலை குறைவதாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கட்டமைப்பின் தாய்ச் சுவர்கள் எனப்படும் பளு தாங்கும் சுவர்கள் மற்றும் அறைகளை பிரிக்கும் குறுக்கு சுவர்கள் ஆகிய எவ்வகை சுவர்களையும் அமைக்க உகந்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டமைப்பில் கவனம்

நமது பகுதிகளில் சேம்பர் செங்கற்கள் அதிகமான பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் ‘போரோதெர்ம்’ வகை கற்களின் பயன்பாடு அதிகமாக பரவவில்லை. காரணம், இவ்வகை கற்களை பயன்படுத்தி சுவர்களை அமைக்கும்போது, வழக்கமான செங்கல் சுவர்களை அமைப்பதை விடவும் சற்று கூடுதல் கவனம் தேவைப்படுவதாக பொதுவான கருத்து இருக்கிறது.

பிற இடங்களில் உபயோகம்

மேலும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் உள்ள பொதுவான தயக்க நிலை காரணமாக இவ்வகை கற்கள் நமது பகுதிகளில் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை. நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் ‘சேம்பர்’ செங்கற்களை விடவும் ‘போரோதெர்ம்’ வகை கற்களை பயன்படுத்தி நிறைய அளவில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

எடை குறைவு

வழக்கமான செங்கல் எடையில் 60 சதவிகிதம் கொண்டதாக இருக்கிறது. இதனால், கையாள்வது எளிதாக இருப்பதுடன் கட்டுமான பணிகளை விரைவாக செய்யமுடியும். மேலும், பூஞ்சை காளான்கள் தாக்குதல் இவ்வகை கற்களை பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை.

ஆனால், இவ்வகை கற்களை அஸ்திவார பணிகளில் பயன்படுத்த முடியாது. அதேபோல் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இவற்றை பயன்படுத்துவது கடினம். காரணம், தண்ணீரின் எதிர்மறை அழுத்தத்தை இவை தாங்க முடிவதில்லை என்று அறியப்பட்டுள்ளது.

Next Story