வலுவான கட்டமைப்புகளுக்கு ஜல்லியின் தரம் அவசியம்


வலுவான கட்டமைப்புகளுக்கு  ஜல்லியின் தரம் அவசியம்
x
தினத்தந்தி 28 April 2018 4:00 AM IST (Updated: 27 April 2018 4:10 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு மணலுக்கு அடுத்தபடியான மூலப்பொருளாக கருங்கல் ஜல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 கான்கிரீட் தளங்கள் மற்றும் சாலைகள் அமைப்பிலும் ஜல்லியின் உபயோகம் இன்றியமையாதது. தனிப்பட்ட சிலர் உட்பட கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கட்டுனர்கள் கட்டிட மூலப்பொருட்களை வாங்கும்போது, தங்களையும் அறியாமல் தரம் குறைந்தவற்றை வாங்கி விடுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, செங்கல், மணல், சிமெண்டு, பெயிண்டு, டி.எம்.டி கம்பி ஆகியவற்றில் போதிய தரமற்ற தயாரிப்புகள் சந்தையில் இருப்பதை பலரும் அறிந்துள்ளனர்.

தரப் பரிசோதனை

கான்கிரீட்டில் பெரும் பகுதியாக உள்ள கருங்கல் ஜல்லியின் உறுதி, வடிவம் மற்றும் அளவு ஆகியவை, தயாரிக்கப்படும் கான்கிரீட்டின் தன்மையை மாற்றக்கூடியது. எனவே, கருங்கல் ஜல்லியை தேர்ந்தெடுக்கும்போது. அதன் நொறுங்கும் மதிப்பு (Crushing value), அழுத்தம் தாங்கும் மதிப்பு (Impact value), அரித்தல் மதிப்பு (Abrasion value) போன்றவை தர நிர்ணயப்படி சோதிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும் கருங்கல் ஜல்லிகள் கலக்கப்பட்ட கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படும் நிலையில், தரமற்ற ஜல்லி வகைகள் சந்தையில் இருப்பதாகவும் கட்டுனர் சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தரமற்ற ஜல்லி வகை

சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 ஆயிரம் யூனிட் அளவுக்கு வெவ்வேறு அளவுள்ள ஜல்லி கற்கள் தேவைப்படுகிறது. ஆனால், கருங்கல் குவாரிகளிலிருந்து கிடைக்கும் ஜல்லி லோடுகள் நடைமுறைச் சிக்கல் காரணமாக குறைந்து, வினியோகம் சீராக இல்லாத நிலையில், இதர விதங்களில் கிடைக்கும் பாறைகளை உடைத்து கிடைக்கும் தரமற்ற ஜல்லிகளை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

குவாரி ஜல்லி

பொதுவாக, குவாரி பாறைகளை உடைத்து பெறப்படும் ஜல்லிகளை மட்டுமே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால், பல இடங்களில் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைகள் மற்றும் தரை மட்டத்தில் கிடக்கும் பெரிய பாறைகளை உடைத்து கிடைக்கும் ஜல்லிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தரத்தின் அடிப்படையில், அத்தகைய ஜல்லிகள் கட்டிடத்தின் வலிமைக்கு எவ்விதத்திலும் பொருத்தமானவை அல்ல என்பதை கட்டுமான வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்துள்ளனர்.

சரியான அளவுகள்

உருண்டையாகவும், கோணங்கள் சரியாகவும் உள்ள ஜல்லியை பயன்படுத்துவது நல்லது. தட்டையான நீளமான ஜல்லிகளை தவிர்ப்பதோடு, கான்கிரீட்டில் சரியான விகிதாச்சாரத்திலும் ஜல்லிகள் சேர்க்கப்படவேண்டும். தட்டையாகவும், நீளமாகவும் இருக்கும் ஜல்லியை விட உருண்டையாகவும், கூம்பு வடிவிலும் இருக்கும் ஜல்லிகள் குறைந்த அளவிலான நீரிலேயே, எளிதாக அமைப்பதற்கு உகந்த தன்மையை தருகிறது.

கான்க்ரீட் உறுதிக்கு ஜல்லி

பொதுவாக, கருங்கல் ஜல்லி கருங்கல் குவாரிகன் கிர‌ஷர்கள் மூலம் உடைக்கப்பட்டவையா..? என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்தவேண்டும். காரணம், அந்த ஜல்லிகள் மட்டும்தான் கான்கிரீட் அமைப்புக்கு வெளிப்புறம் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் அதற்கான பளு தாங்கும் திறன் ஆகிய தன்மைகளை அளிக்கின்றன.

அதற்கு மாறாக, கிணறு மற்றும் இதர பகுதிகளிலிருந்து கிடைக்கும் பாறைகளை உடைத்து குடைக்கும் ஜல்லிகள் போதிய உறுதி இல்லாததோடு, அதிர்வுகள் அல்லது இதர வெளிப்புற தாக்கங்களால் கான்கிரீட்டில் விரிசல் அல்லது உடைசல்களை ஏற்படுத்துகின்றன. மேலும், சேறு, களிமண், குப்பை, தாவரங்கள் மற்றும் கறைகள் படிந்த ஜல்லி வகைகளை கட்டுமான பணிகளில் அப்படியே பயன்படுத்தாமல், சில நாட்களுக்கு முன்னரே தண்ணீரில் கழுவிய பின்னர் உபயோகப்படுத்தலாம்.

Next Story