கட்டுமான திட்டங்களுக்கு மண் பரிசோதனை அவசியம்


கட்டுமான திட்டங்களுக்கு மண் பரிசோதனை அவசியம்
x
தினத்தந்தி 13 May 2018 5:30 AM GMT (Updated: 13 May 2018 5:30 AM GMT)

கட்டுமானங்களில் அமைந்த அடிப்படை குறைபாடுகள் காரணமாக ஆங்காங்கே ஒரு சில அடுக்கு மாடிகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

 சில அடுக்கு மாடிகள் சரிந்து விழுந்த சம்பவங்களை தொடர்ந்து, அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதிக்கு பரிந்துரைக்கும் உயர் அதிகாரிகள் குழுவில், பொதுப்பணித்துறை மற்றும் கட்டிட அமைப்பியல் வல்லுனர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், நெருக்கடி மிகுந்த பகுதிகளில், மண்ணின் பளு தாங்கும் திறன் குறைபாடு காரணமாக, கட்டிடங்கள் இடிந்து, விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

அரசு ஆலோசனை

மேற்கண்ட குறைகளை தவிர்க்கும் விதமாக, நிலத்தின் வகைகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவது போல, மண்ணின் பளு தாங்கும் திறன் பற்றிய தகவல்களையும் அளிப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுவதை தடுக்கும் வகையில் மண் பரிசோதனை முறையை கட்டாயமாக்குவது பற்றியும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

நிலங்களின் வகைகள்

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் நகர், ஊரமைப்பு துறை ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதிகளில், நிலங்கள், சர்வே எண் வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட விபரங்கள் சீராக தொகுக்கப்பட்டு, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், மண் பரிசோதனை, மண்ணின் பளு தாங்கும் திறன் பற்றிய விபரங்களை வேளாண்மை துறை, பொதுப் பணித்துறை மற்றும் மத்திய அரசு புவியியல் ஆய்வு நிறுவனம் போன்றவை தனித்தனியாக வைத்துள்ளன.

கட்டுமான அனுமதி


மேற்கண்ட தகவல்களை பகுதி வாரியாக தொகுத்து, நிலப் பயன்பாட்டு தகவல் தொகுப்பில் சேர்த்து, புதியதாக கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் அதன் அடிப்படையில் கட்டிட அமைப்புக்கான வரைபடத்தை முடிவு செய்யலாம். அதன் காரணமாக நிலத்தின் பளு தாங்கும் திறனுக்கு பொருத்தமாக அமையாத கட்டுமானங்களை தொடக்க நிலையிலேயே தடுக்க இயலும். மண் பரிசோதனை மற்றும் மண்ணின் பளு தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், கட்டுமான அமைப்புகளை தீர்மானம் செய்யும் பரிந்துரைகளை, அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பரிசீலனை செய்து வருகிறது. 

Next Story