வளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம்


வளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம்
x
தினத்தந்தி 13 May 2018 5:46 AM GMT (Updated: 13 May 2018 5:46 AM GMT)

கடந்த காலங்களில் இந்திய அளவில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு விற்பனை சந்தைகளில் சென்னையும் ஒன்றாக இருந்தது.

வர்த்தக ரீதியான கொள்கை மாற்றங்கள், விலைத் திருத்தங்கள் போன்றவற்றால் தற்போது அதன் விற்பனை  அதிகரித்துள்ளது. அதனால், குடியிருப்புகளின் விற்பனை சற்று கூடுதலாகி, அதன் மந்த நிலை குறைந்திருப்பதாக ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள்

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற சீர்திருத்தங்கள், கட்டுமானத்துறையின் வெளிப்படைத் தன்மை மற்றும் சீரான சந்தை நிலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தும் விதத்தில் கொண்டு வரப்பட்டன. அதன் காரணமாக குடியிருப்புகளின் விற்பனையில் படிப்படியான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வு நிறுவன தகவல்

இது தொடர்பாக, இந்திய அளவில் முன்னணியில் உள்ள ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சென்னை பெருநகரில் 2014-ம் ஆண்டில் சுமாராக 43,500 குடியிருப்பு பகுதிகள் விற்பனை ஆகாத நிலையில், சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட 28,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விற்பனையாகாத குடியிருப்புப் பகுதிகளில் தெற்கு சென்னையில் அதிகபட்சம் 16,600 குடியிருப்புப் பகுதிகள் அமைந்திருக்கின்றன.

விலை விபரங்கள்

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 1500 சதுர அடி கொண்ட மூன்று படுக்கையறை வீடுகள் மற்றும் 1200 சதுர அடி கொண்ட இரண்டு படுக்கையறை வீடுகள் பெரும்பான்மையாக உள்ளன. சென்னைப் பெருநகர வரம்புக்குள் அமைந்த குடியிருப்பு பகுதிகளுக்கு கிட்டத்தட்ட இணையான அளவில் விலை இருக்கும்பட்சத்தில் குறைவான அளவில் விற்பனை ஆவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் மேலும், உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாதது, தகுந்த இணைப்பு சாலைகள் இல்லாதது, நீர் தேங்கி நிற்பது உள்ளிட்ட பல சிக்கல்களால் குறைந்த விலை பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பணை ஆகாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தெற்கு சென்னை

அடையார், திருவான்மியூர், வேளசேரி, ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலை போன்ற தெற்கு சென்னை பகுதிகள், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கடந்த ஆண்டுகளில் எட்டியிருக்கின்றன. சென்னையின் சொகுசு வீடுகளுக்கான சந்தையாக இப்பகுதிகள் கவனிக்கப்படுவதோடு, சென்னை நகரின் மொத்த குடியிருப்புப் பகுதிகளில் கிட்டத்தட்ட 46 சதவிகித அளவுக்கு இப்பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் போரூர், முகப்பேர் உள்ளிட்ட சில வட சென்னை பகுதிகளும் இதில் இணைந்துள்ளன.

மந்த நிலை

பொதுவாக, கட்டுமான திட்டங்களை பூர்த்தி செய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது. 2013-ம் ஆண்டு முதல் 2015-வரை சென்னையில் தொடங்கப்பட்ட கட்டுமான திட்டங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக விற்பனையாகி வந்த நிலையில், கட்டுநர்கள் புதிய திட்டங்களை தொடங்குவதற்கு பதிலாக, கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை விற்பதில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருந்தது.

கட்டுனர்களின் கள ஆய்வு

இந்தச் சூழலில், கட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன், பல்வேறு கள ஆய்வுகளுக்கு பின்பே கட்டுமான திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், 18,000 முதல் 20,000 குடியிருப்புப் பகுதிகள் என ஆண்டு விற்பனை ஓரளவுக்கு சீரானதாக இருக்கிறது. கட்டுமான திட்டங்களின் விலை, அளவு ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் காரணமாக பல மைக்ரோ சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். 

Next Story