மின் விசிறிகள் அமைப்பில் பொறியாளர் குறிப்புகள்


மின் விசிறிகள் அமைப்பில் பொறியாளர் குறிப்புகள்
x
தினத்தந்தி 19 May 2018 8:14 AM GMT (Updated: 19 May 2018 8:14 AM GMT)

இப்போது கொளுத்தும் வெயிலில் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் விசிறிகள் இயங்குகின்றன.

ப்போது கொளுத்தும் வெயிலில் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் விசிறிகள் இயங்குகின்றன. குறிப்பிட்ட அறைக்குள் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல் அமைப்புகளுக்கேற்ப அறைக்குள் நிலவும் காற்றை பரவலாக மாற்றுவது மின்விசிறிகளின் செயல்பாடாகும். அதன் மூலம் அறையில் வெப்ப நிலை சாற்று குறைந்ததுபோல மாறுகிறது.

மின் சேமிப்பு சாத்தியம்

வெயில் காலங்களில் மின்விசிறிகள் பெரும்பாலான நேரங்களில் ஓடிக்கொண்டிருப்பது எல்லா இடங்களிலும் வழக்கமான ஒன்று. மின்சார சேமிப்பு என்பது அவசியமான சூழலில் மின் விசிறிகள் இயங்கினாலும், தக்க முறைகளில் அவற்றை பொருத்திக்கொள்வதன் மூலம் வழக்கத்தைவிடவும் மின்சார சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை பெற இயலும் என்று பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளேடு அளவுகள்

அதற்கு முதல்படியாக, அறைகளில் மின் விசிறிகளை அமைக்கும்போது கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். அவ்வாறு இல்லாவிட்டாலும் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். பொதுவாக, மின் விசிறிகளின் அளவு 29 அங்குலம் முதல் 54 அங்குலம் வரை உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அறையின் அளவுக்கேற்ற பிளேடுகள் கொண்டவற்றை தேர்வு செய்யவேண்டும்.

பெரிய அறைகள் அல்லது ஹால் போன்ற இடங்களில் மேற்கண்ட அளவை அனுசரித்து இரண்டு மின்விசிறிகள் கூட பொருத்திக்கொள்ளலாம். மேலும், எனர்ஜி ஸ்டார் கொண்ட மின்விசிறிகளை பயன்படுத்துவதன் மூலம் இதர வகைகளை விட 15 சதவிகித மின்சேமிப்பு சாத்தியம் என்றும் அறியப்பட்டுள்ளது.

சீலிங் இடைவெளி

குறிப்பாக, அறைகளின் சரியான மையப்பகுதியில் மின் விசிறிகள் அமைப்பது அவசியமானது. அதன் மூலம், காற்று அறை முழுவதும் சமமான அளவில் பரவுகிறது. மேலும், சீலிங் அமைப்பிலிருந்து 10 முதல் 12 அங்குல அளவுக்கு கீழாக மின்விசிறி இருப்பதுபோல பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.. அதன் மூலம் வெப்பக்காற்றின் தாக்கம் பெருமளவு குறைவதுடன், அதன் செயல்திறனும் 35 சதவிகித அளவு அதிகரிக்கிறது.

பக்கவாட்டு சுவர் இடைவெளி

மேலும், தரைத்தளத்திலிருந்து சுமாராக 7 முதல் 9 அடி உயரத்தில் மின்விசிறிகள் இருப்பதோடு, பக்கவாட்டு சுவர்களிலிருந்து குறைந்தபட்சம் 18 அங்குல இடைவெளியாவது அமைந்திருப்பதும் அவசியம். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாடு மற்றும் மின் விசிறியின் செயல்திறன் உள்ளிட்ட பல நிலைகளில் பயன்கள் கிடைக்கும் என்றும் பொறியியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story