சுவர் வெடிப்புகளை சரிசெய்யும் நவீன பசை
கட்டுமானங்களில் உண்டாகும் சுவர் வெடிப்புகளை வீட்டின் உரிமையாளரே எளிதாக சரி செய்யும் வகையில் ஒரு வகை நவீன பசை சந்தையில் கிடைக்கிறது. உடனே பயன்படுத்தும் வகையில் இவ்வகை ‘கிராக் பில்லிங் பேஸ்ட்’ வகைகள் உள்ளன.
சிமெண்டு பூசப்பட்ட செங்கல் சுவர்களில் ஏற்படக்கூடிய வெடிப்புகளை அடைக்க இதை பயன்படுத்தலாம். குறிப்பாக, 5 மி.மீ வரையில் அளவு கொண்ட வெடிப்புகளை இதன் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும்.
எளிதாக ஒட்டும்
சுவர்களில் பட்டி எவ்வாறு பூசப்படுகிறதோ அதே முறையில் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். இவ்வகை பசையானது அனைத்துவிதமான கட்டிட பரப்புகளிலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை பெற்றது. நெகிழும் தன்மை கொண்டதால் வெடிப்புகளுக்குள் எளிதாக உள் நுழைந்து செயல்படும்.
சுவரில் பூசும் விதம்
முதலில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை, அழுக்கு, பிசுக்கு, எண்ணெய் கறை, மெழுகு. பாலிஷ் எதுவும் இல்லாத விதத்தில் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வெடிப்புகள் உள்ள பகுதியை சுத்தம் செய்து கொள்வதோடு, அதிகப்படியான ஈரமும் இருக்கக்கூடாது. பேஸ்ட் பூசப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்ட சுவர் பகுதியை லேசாக ஈரமாக்கிக்கொண்டு சீராக பூசலாம்.
பட்டி பார்க்கும் கத்தி
பூசப்பட வேண்டிய பரப்பு அதிகமாக நுண் துளைகளைக் கொண்டதாக இருந்தால், பேஸ்டுடன் சம அளவு தண்ணீரை கலந்து கொள்ளவேண்டும். அந்த ‘கோட்டிங்கை’ எளிதில் உலர விட்டுவிடாமல், பட்டி பார்க்கும் கத்தியால் எடுத்து வெடிப்புகளுக்குள் நன்கு பரவுமாறு தேய்த்து விடவேண்டும். சுவருக்கு மேல் பரவி நிற்கும் பசையை வழித்து எடுக்க பட்டி பார்க்க உதவும் கத்தியை பயன்படுத்தலாம்.
கால இடைவெளி
பேஸ்ட் முதல் முறை பூசி முடித்து, அடுத்த முறை பூசுவதற்கு முன்பு குறைந்த பட்சம் 24 மணி நேர இடைவெளி அவசியம். முதல் பூச்சு முற்றிலுமாக உலர்ந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்த நிலை பணிகளை செய்யலாம். இவ்வகை ‘கிராக் பில்லிங் பேஸ்ட்’ பயன்படுத்தும்போது பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்வதோடு, கைகளுக்கு உறைகளும் அவசியம்.
பயன்படும் நிலைகள்
வெடிப்புகளின் அளவு பெரிதாக இருக்குமானால் இந்த முறை பயன் தராது. வெடிப்புகள் 5 மி.மீக்கும் மேல் இருக்கும் பட்சத்திலும் இந்த முறை பயன்படுவதில்லை. சுற்றுச்சூழலின் தன்மைக்கேற்ப ‘பேஸ்ட்’ உலர்வதற்கான நேரம் மாறலாம். அதாவது, ஈரப்பதம் அதிகமாக இருந்தால் உலர்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். கட்டுமானக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விரிசல்கள், நீட்டி விடப்பட்ட இணைப்புகளுக்கு இடையிலான வெடிப்புகள், பிரிந்து நிற்கும் இடைவெளிகள் போன்றவற்றைச் சரி செய்வதற்கு இந்த முறை பயன்படாது.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லை
பாலிமர் அடிப்படையிலான பெயிண்டு பூசப்பட்ட பரப்பின் மீது மேல்பூச்சாக பயன்படுத்தலாம். பொதுவாக, பெயிண்டு அடிக்கப்பட்ட 24 மணி நேரம் கழித்த பிறகு பூசும்பட்சத்தில் நல்ல பலன்களை அளிக்கும். நச்சுத் தன்மையற்ற பொருளாக இருப்பதால் கைகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு, சுற்றுச் சூழலைப் பாதிக்கும் அபாயமும் இல்லை.
Related Tags :
Next Story