சிமெண்டு மூட்டைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்
சிறிய அளவிலான கட்டிடமாக இருந்தாலும், பெரிய அடுக்குமாடி கட்டமைப்பாக இருந்தாலும் கட்டுமான பணிகளுக்கான மூலப்பொருட்களை பாதுகாப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுமான மூலப்பொருட்களில் பிரதானமான இடத்தில் உள்ள சிமெண்டு பற்றி கூடுதல் கவனம் அவசியமானது. இதர பொருட்களை ஒப்பிடும்போது, வெவ்வேறு நவீன தொழில் நுட்பங்கள் மூலம், சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்படும் கட்டுமான மூலப்பொருள் சிமெண்டு என்று குறிப்பிட்டுள்ள கட்டுமான வல்லுனர்கள், சிமெண்டு மூட்டைகள் பாதுகாப்புக்காக அளிக்கும் வழிமுறைகள் பற்றி காணலாம்.
* காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக சிமெண்டு எளிதில் கெட்டியாக மாறிவிடும் தன்மை கொண்டதால், பாதுக்காப்பாக தனிப்பட்ட இடத்தில் மூட்டைகளை அடுக்கி வைக்கவேண்டும்.
* சிமெண்டு என்ற மூலப்பொருளின் முக்கியமான தன்மை கட்டிட பணிகளில் மணல் மற்றும் நீரோடு சேர்ந்து வேதிவினை புரிந்து கெட்டியாக மாறுவதாகும். ஒருவேளை மூட்டையாக இருக்கும்போதே தண்ணீர் அல்லது ஈரப்பதம் காரணமாக, கெட்டியாக மாறிவிடும் பட்சத்தில் அதை பயன்படுத்த இயலாது. அதனால், சிமெண்டை தண்ணீர் அல்லது ஈரப்பதம் பாதிக்காத வகையில் பாதுகாக்க வேண்டும்.
* சுற்றுப்புறத்தில் நிலவும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும் தன்மை சிமெண்ட்டுக்கு உண்டு என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
* தரைக்கு மேலே மரப்பலகைகள் கொண்டு மேடை அமைத்து, அதன்மீது சற்று கெட்டியான ‘பிளாஸ்டிக் ஷீட்டை’ விரித்து, அதன்மீது சிமெண்டு மூட்டைகளை அடுக்கி வைக்கவேண்டும்.
* சுவரில் உள்ள ஈரப்பதம்கூட பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்பு இருப்பதால், சிமெண்டு மூட்டைகள் சேமிப்பு அறையின் சுற்றுச்சுவரிலிருந்து ஒரு அடியாவது இடைவெளி விட்டு அடுக்கவேண்டும்.
* சிமெண்டு மூட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது, பத்து முதல் பதினைந்து மூட்டைகள் கொண்ட அடுக்குகளாக இருக்கவேண்டும். காரணம், மேலே உள்ள மூட்டைகளின் அழுத்தத்தால், கீழே உள்ளவை கெட்டியாக மாறி விடலாம். மேலும், அவற்றின் ஒரு வரிசையை நீளவாக்கிலும், அடுத்த வரிசையை அகலவாக்கிலும் அடுக்குவது பாதுகாப்பானது.
* சிமெண்டு மூட்டைகள் சேமிக்கும் அறை அல்லது குடோன் மேற்கூரை மழைக்காலங்களில் ஒழுகாமல் இருக்க வேண்டும்.
* அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்டு மூட்டைகள், காற்று புகாதவாறு ‘பிளாஸ்டிக் ஷீட்’ கொண்டு மூடப்பட்டிருக்கவேண்டும்.
* கட்டிட பணிகளுக்காக சிமெண்டு மூட்டைகளை எடுக்கும்போது, முதலில் அடுக்கப்பட்ட மூட்டைகளை எடுத்து பயன்படுத்துவதே சரியான முறையாகும்.
Related Tags :
Next Story