நிலத்தடி நீரை சேமிக்கும் கான்கிரீட் கட்டமைப்பு


நிலத்தடி நீரை சேமிக்கும்  கான்கிரீட் கட்டமைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 11:36 AM GMT)

உலகின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள தண்ணீர் கட்டுமான பணிகளில் பிரதான இடத்தை பெற்றுள்ளது.

செயற்கையாக சோதனை சாலைகளில் தண்ணீரை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதன் அடிப்படையில் தண்ணீருக்கான ஆதார மூலமாக கிடைக்கும் மழை நீரை குளங்கள், ஏரிகளில் சேமிப்பது முக்கியமான திட்டமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீரை சேமிக்கும் கான்கிரீட்

பொதுவாக, கட்டுமான பணிகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் பல்வேறு ரசாயனங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றின் மூலம் தண்ணீர் சிக்கனம் என்பது சாத்தியமானாலும், வேறு வழிகளில் அதை செய்வது சாத்தியமா என்ற நிலையில் நூற்றாண்டுகளாக உள்ள ஒரு முறை அதற்கு கை கொடுப்பதாக அமைந்தது. அவ்வாறு தண்ணீரை சேமிப்பதற்கான தொழில்நுட்ப வழிமுறைதான் ‘நீரை உறிஞ்சும் கான்கிரீட்’ (Pervious Concrete  Porous Concrete Permeable Concrete)  என்பதாகும். இவ்வகை கான்கிரீட் அமைப்பானது மேற்பரப்பில் விழக்கூடிய தண்ணீர் அல்லது மழை நீரை உறிஞ்சி நிலத்தின் கீழ் பகுதிக்கு அனுப்பும் தன்மை பெற்றது.

தரைப்பகுதிகளில் பயன்பாடு


மழை பெய்யும் காலங்களில் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி தொட்டிகளில் மழை நீரை உறிஞ்சி சேமிப்பதோடு, இதர பகுதிகளில் விழும் நீரை உறிஞ்சி பூமிக்கு உள்புறமாக அனுப்புவதால் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த பணியை கான்கிரீட் அமைப்பே செய்வதுதான் இந்த முறையில் உள்ள விஷேசம். அந்த தொழில்நுட்பத்தை பிரதான கட்டமைப்புகளான சுவர்களில் பயன்படுத்துவதை விட, தரைத்தள பயன்பாட்டிற்காக அமைக்கப்படுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.  

நூற்றாண்டுகளாக உபயோகம்

இந்த நீரை உறிஞ்சும் கான்கிரீட் பயன்பாடு மேலை நாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 1800–ம் ஆண்டுகளிலேயே இம்முறை கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும், 1920–ம் ஆண்டு முதல்தான் அதன் உபயோகம் பரவலான உபயோகத்துக்கு வந்தது. குறிப்பாக நமது நாட்டில் 2000 ஆண்டிலிருந்துதான் இந்த தொழில்நுட்பம் பரவலான கவனத்தை பெற்றது.

பயன்படும் இடங்கள்

மேற்கண்ட நீர் உறிஞ்சும் கான்கிரீட் அமைப்புகளை குடியிருப்புகளுக்கான வாகன நிறுத்துமிடம், அவற்றின் நடைபாதைகள், டென்னிஸ் கோர்ட் போன்ற விளையாட்டுத் தளங்கள் மற்றும் பசுமை குடியிருப்பு திட்டங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். சுற்றுப்புறச்சூழல் துறையால் இந்த தொழில் நுட்பம் அங்கீகரிக்கப்பட்டு சிபாரிசு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story