தண்ணீர் குழாய்கள் தேர்வில் முக்கிய குறிப்புகள்


தண்ணீர்  குழாய்கள்  தேர்வில்  முக்கிய  குறிப்புகள்
x
தினத்தந்தி 16 Jun 2018 3:15 AM IST (Updated: 15 Jun 2018 5:04 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து வகையான குடியிருப்புகளிலும் குடிநீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கான குழாய் அமைப்புகள் தவறாமல் இடம்பெறுகின்றன.

னைத்து வகையான குடியிருப்புகளிலும் குடிநீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கான குழாய் அமைப்புகள் தவறாமல் இடம்பெறுகின்றன. அவற்றில், வெளிப்புற பயன்பாட்டுக்கான சி.ஐ பைப்புகள், உட்புறத்தில் இடம் பெறும் எவர்சில்வர் பைப்புகள், சுவர்களுக்கு உட்புறத்தில் பதிக்கப்படும் யு.பி.வி.சி மற்றும் சி.பி.வி.சி பைப்புகள் என்று பல வகைகள் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன. 

குழாய்கள் தேர்வு

கட்டமைப்புகளின் அளவிற்கேற்ப மேற்கண்ட குழாய் வகைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். கட்டுமான ஒப்பந்ததாரர் அல்லது வீட்டு உரிமையாளர் ஆகிய யாராக இருந்தாலும் விலை மற்றும் தரம் ஆகிய இரு நிலைகளிலும் குழாய் வகைகளை ‘பிளம்பிங்’ நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தேர்வு செய்வது நல்லது. அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பழுதுகள் தவிர்க்கப்படுகின்றன. குழாய்களுக்கான தேர்வில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் பற்றி பிளம்பிங் வல்லுனர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம். 

வார்ப்பு இரும்பு குழாய்

பொதுவாக, வார்ப்பு இரும்பு குழாய்கள் (Cast Iron) கழிவு நீர் செல்வதற்காக வீடுகளுக்கு வெளிப்புற நடைபாதை பகுதிகளில் பயன்படுகின்றன. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இவ்வகை பைப்புகளின் பயன் அவசியமானதாக உள்ளது. இரும்பு குழாயாக இருப்பதால் மற்ற குழாய்களை விடவும் இவற்றை பல வகை சோதனைகள் செய்து வாங்கவேண்டும். 

*ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட குழாய்களை வாங்குவதே எப்போதும் பாதுகாப்பு என்பதோடு உறுதியானதாக (Heavy Duty) இருப்பதும் முக்கியம்.

*சிறுதுளைகள், வெடிப்புகள் இல்லாமல் நல்ல தோற்றத்துடன் இருக்கவேன்டும்.

*கண்ணுக்கு தெரியாத துளைகள் அல்லது வெடிப்புகள் இருப்பதை கண்டறிய குழாயில் நீரை நிரப்பி, அவற்றில் நீர்க்கசிவுகள் ஏற்படுகின்றதா என்று சோதனை செய்து கொள்வது அவசியம்.

*வார்ப்பு இரும்பு குழாய்கள் லேசான மர சுத்தியலால் தட்டும்போது நல்ல கணீரென்ற சப்தம் எழவேன்டும்.

*தரையில் பதிக்கும்போது உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தார் கோட்டிங் பூசப்பட்ட பின்னரே குழாய்களை உபயோகிக்கவேண்டும்.

*இந்த பைப் வகைகளை விட குறைவான பட்ஜெட் கொண்ட ‘ஹெவி டியூட்டி பி.வி.சி பைப்’ வகைகளை இதற்கு மாற்றாக பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.   

ஒப்பீடுகள் அவசியம்

பொதுவாக அனைத்து வகையான பைப் வகைகளும் ஒன்றுக்கும் மேலான கடைகளில் அதன் தரம் மற்றும் விலை ஆகிய வி‌ஷயங்கள் குறித்து நன்றாக அறிந்து கொண்ட பின்னரே வாங்கப்பட வேண்டும். குறிப்பாக, வாங்க வேண்டிய அனைத்து வகையான பைப் வகைகளுக்குமான விலைகளை குறித்து வாங்கிக்கொண்டு, ஒப்பீடுகள் செய்து அதற்கேற்ப வாங்கிக்கொள்வதே நல்லது என்று அனுபவமிக்க கட்டுமான ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், வாங்குவதற்கு முன்னதாக அவற்றிற்கான சாம்பிள்களை கவனிப்பதோடு, கியாரண்டி பற்றிய தகவல்களையும் கடையிலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.  

‘புளோர் டிராப்‘

குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருக்கும் நீர் வடிந்து செல்வதற்காக ‘புளோர் டிராப்’ அமைக்கப்பட்டு அதன் வழியே நீர் கீழே உள்ள குழாய்கள் மூலம் கழிவு நீர் பாதைக்கு செல்லும். அதனால், புளோர் டிராப் அமைப்பை கச்சிதமான தரைமட்ட அளவில் அமைக்கவேண்டும். 

குறிப்பாக, எந்த பகுதியில் வரவேண்டும் என்பதை முன்னதாகவே முடிவு செய்வது நல்லது. மேல்தளங்களில் உள்ள புளோர் டிராப் அமைப்பை அதன் தளமட்டத்திலிருந்து கிட்டத்தட்ட முக்கால் அங்குலம் தாழ்வாக இருப்பதுபோல பொருத்தினால், தண்ணீர் எளிதாக வழிந்து சென்றுவிடும்.

‘கல்லி டிராப்’

நடைபாதைகளை கடந்து செல்லும் குழாய்களை இரும்பு அல்லது சிமெண்டு பைப்புகளுக்கு உட்புறத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்வதோடு, சற்று ஆழமாக அமைக்கும்போது கெட்ட வாசனைகள் குழாய்களிலிருந்து வெளிப்பட்டு வீடுகளுக்குள் புகாமல் தடுக்கப்படும். குறிப்பாக, ‘கல்லி டிராப்’ போன்ற அமைப்புகளும் கெட்ட வாசனை வீடுகளுக்குல் நுழைவதை தடுக்கின்றன.

நீர்க்கசிவு சோதனை

வீடுகளுக்கு வெளிப்புற தரைமட்டத்தில் கழிவு நீர் குழாய்கள் பொருத்தும்போது அவற்றின் இணைப்புகளில் ஏதாவது கசிவுகள் உள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். அதாவது, குழாய்களில் நீர் நிரப்பி, இரு பக்கமும் அடைத்து 24 மணி நேரம் சோதித்தும் கசிவுகளை கண்டறியலாம். 

Next Story