பெருநகர் வளர்ச்சிக்கு உதவும் குறைந்த விலை கட்டமைப்புகள்
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்க கூட்டமைப்பின் சென்னை பிரிவானது, வாங்கக்கூடிய விலையில் வீட்டு வசதி திட்டங்களை அளிப்பது பற்றிய ‘மிஷன்–2020’ என்ற தொலைநோக்கு திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்க கூட்டமைப்பின் (CREDAI Confederation Of Real Estate Developers Association Of India ) சென்னை பிரிவானது, வாங்கக்கூடிய விலையில் (Affordable Housing) வீட்டு வசதி திட்டங்களை அளிப்பது பற்றிய ‘மிஷன்–2020’ என்ற தொலைநோக்கு திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. சிக்கன விலை கொண்ட வீடுகளுக்கு இன்றைய நிலையில் தேவை இருப்பதால், போதிய நிலங்களை ஒதுக்கீடு செய்து அந்த திட்டங்களை மேம்படுத்தினால், பெருநகர வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று சென்னை கிரெடாய் அமைப்பு கருதுகிறது.
தகுதி மேம்பாட்டு பயிற்சி
மேலும், வாங்கக்கூடிய விலை கொண்ட வீட்டு வசதி திட்டங்களால் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மேம்படும். தற்போதைய கட்டிட விதிமுறைகளை, மாநகர வரம்பு எல்லைக்குள் ‘வாங்கக்கூடிய விலைகொண்ட’ வீட்டுவசதி திட்டங்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்க அரசை கேட்டுக்கொள்வதோடு, கட்டுமான பொறியாளர்கள் பட்டம் பெற்ற பிறகு வேலை பெறுவதற்குரிய தகுதியை வளர்த்து கொள்ளவும் கிரெடாய் பயிற்சியளிக்கிறது. குறிப்பாக, கட்டிட தொழிலாளர்களுக்கு உற்பத்தி திறன் மேம்பாடு பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள்
வாங்கக்கூடிய விலை கொண்ட வீடுகளுக்கு நல்ல தேவை இருப்பதன் அடிப்படையில், அதற்கு போதிய நிலங்களை ஒதுக்கீடு செய்வது வளர்ச்சிக்கு உதவியாக அமையும். அளவை பொறுத்து சிக்கன விலை கொண்ட வீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு கூடுதல் கட்டிடப் பரப்பு அனுமதிக்கப்பட்டாலும், எனினும், அதனை தக்கமுறையில் நிறைவேற்ற முடியாத வகையில் உள்ள வளர்ச்சிக் கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைக்க அரசுடன் பேசி வருவதாகவும் சென்னை கிரெடாய் அமைப்பினர் குறிப்பிட்டனர்.
அரசுடன் இணைந்த செயல்பாடு
ரியல் எஸ்டேட் தொழிலை சீர்படுத்துவது, அதன் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பது உட்பட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் ஆகியோருக்கு இடையே நல்ல தொடர்பை நிலைநாட்ட ‘மிஷன் 2020’ திட்டம் மூலம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை ரியல் எஸ்டேட் துறையை பாதித்துள்ள பிரச்சனைகளை எதிர்நோக்க கொள்கைகளை அறிமுகப்படுத்தி, அதற்கேற்ப அரசுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.
புதிய திட்டங்கள்
பொதுவாக, ஒரு கட்டுமானத் திட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக 10 சதவிகித வீடுகள் ஒதுக்கப்படும் நிலையில், அதில் உயர் வருவாய் பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் வீடுகள் கலந்திருப்பதால், விலை குறைந்த சிறிய வீடுகள் விற்பனை ஆவது சிரமம். இருப்பினும், வாங்கக்கூடிய விலை கொண்ட வீடுகளுக்கு உள்ள அவசியத்தை கருதி புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சென்னையைப் பொறுத்தவரை, குறைந்த விலை வீடுகள் பிரிவில் 300 முதல் 450 சதுரஅடி அளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்களை புரமோட்டர்கள் கூடுதலாக செயல்படுத்தும்போது அனைவருக்கும் சொந்த வீடு என்பது சாத்தியம் என்றும் கிரெடாய் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story