சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் பசுமை திட்டங்கள்


சுற்றுச்சூழலை  பாதுகாக்க  உதவும்  பசுமை  திட்டங்கள்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 4:44 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற வி‌ஷயமாக மாறி இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற வி‌ஷயமாக மாறி இருக்கிறது. தொழிற்சாலைகள் கரியமில வாயுவை தங்களது உற்பத்தி பொருள்களோடு, இன்னொரு உற்பத்திப் பொருளாக (by product
) காற்றில் கலக்கச் செய்கின்றன என்று சூழலியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையின் அளவு ஒவ்வொரு நாளும் காற்றில் கலப்பது அதிகரித்துள்ளது என்றும் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

கரியமில வாயு 

மேற்கண்ட ஆய்வுகளின்படி சுற்றுச்சூழலில் கலந்துள்ள கரியமில வாயுவின் அளவு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. அதன் காரணமாக, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு உறுப்பு நாடுகள் வேகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாட்டு சபை எச்சரிக்கை செய்துள்ளது.

மரபு சாரா சக்திகள்

இன்றைய அவசர அத்தியாவசியமாக கட்டுமான மூலப்பொருட்களில் பசுமை பொருட்களை பயன்படுத்துவதோடு, கட்டிட அமைப்புகளையும் பசுமைச் சூழலை நோக்கி செயல்பட வைக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக, பல்வேறு மேலை நாடுகள் மரபு சாரா சக்திகளை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கட்டிடங்களில் அமைத்து வருகின்றன.

ஈபில் டவரில் பசுமை திட்டம்

பாரீஸ் நகரத்தில் உள்ள ஈபில் டவர் அதன் இயக்கத்திற்கு மரபு சாரா மின்சார உற்பத்தி ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல் திட்டத்தை மேற்கொள்ளும்போது மக்களிடையே அது பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் 38 மில்லியன் டாலர் அளவிற்கு பல்வேறு பசுமை திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி

முதல் கட்டமாக 400 மீட்டர் உயரத்தில் காற்றாலை டர்பைன்களை நிறுவி கோபுரத்தின் முதல் தளத்தில் உள்ள வர்த்தக பகுதிக்கு தேவையான மின் சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 10ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் கிடைப்பதன் அடிப்படையில், முதல் தளத்தில் உள்ள வர்த்தகப் பகுதிக்கான மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும்.

விஷேச அமைப்புகள்

சூரிய ஒளி தகடுகள், எல்இடி விளக்குகள், உயர் செயல் திறன் கொண்ட வெப்பக் குழாய்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஆகியவை ஈபில் டவரில் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, காற்றாலை டர்பைன்களின் விஷேச அமைப்பு காரணமாக காற்று எந்தத் திசையில் வீசினாலும் அதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.

வல்லுனர்கள் கருத்து

மேலை நாடுகளின் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை பின்பற்றும் நமது நாட்டிலும் இதுபோன்று மரபு சாரா எரிபொருள் தயாரிப்பு அமைப்புகளை பெரிய கட்டிடங்களில் நிறுவி, சுற்றுச்சூழலை காப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் முயற்சி எடுக்கவேண்டும் என்பது சுழலியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Next Story