சிமெண்டு கலவை உறுதி பெறுவதற்கான கால அவகாசம்
சுவர் பூச்சுக்கான சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் கலவை அதற்கான கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முன்னர் இறுக்கமாக மாறிவிடும் பட்சத்தில் பணிகளை செய்து முடிப்பதில் தடை உண்டாகும்.
சுவர் பூச்சுக்கான சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் கலவை அதற்கான கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முன்னர் இறுக்கமாக மாறிவிடும் பட்சத்தில் பணிகளை செய்து முடிப்பதில் தடை உண்டாகும். அதனால் சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகளுக்கு தகுந்த கால அளவுகளுக்கேற்ப இறுகும்படி தயாரிக்கப்படுகிறது.
சிமெண்டு கலவை இறுகுவதன் அடிப்படையில், தொடக்க நிலை இறுகுதல் (Initial setting) மற்றும் இறுதி நிலை இறுகுதல் (Final setting) என இரண்டு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க நிலை இறுகும் நேரம்
தண்ணீர் சேர்க்கப்பட்ட நிலையில் சிமெண்டு கலவைக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் வரை நெகிழ்வான தன்மையில் இருக்கும். குறிப்பிட்ட கால அளவுக்கு நீடிக்கும் அந்த நேரத்துக்குள் கலப்பது, எடுத்து செல்வது, கலவை போடுவது, இறுகச்செய்வது ஆகிய பல்வேறு பணிகளை செய்து முடிப்பது அவசியம். அதன் பின்னர் சிமெண்டு கலவையில் எவ்விதமான அசைவுகளும் இருக்கக்கூடாது.
இந்திய தர நிர்ணய விதிகளின்படி சிமெண்டுக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும். கட்டுமான பணிகள் செய்வதில் ஏற்படும் கால அவகாசத்தை கருதி பல சிமெண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தொடக்க நிலை இறுகும் நேரத்தை 140 நிமிடங்கள் முதல் 170 நிமிடங்கள் வரை இருக்குமாறு தயாரித்து அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி நிலை இறுகும் நேரம்
சிமெண்டு கலவை அதன் நெகிழ்வு தன்மையை கடந்து, இறுதி இறுகும் நேரம் கழிந்த பின்னர் கடினமான தன்மை உள்ளதாக மாறிவிடும். இந்திய தர நிர்ணய அளவீடுகளின்படி சிமெண்டுக்கான இறுதி நிலை இறுகும் நேரம் அதிகபட்சம் 600 நிமிடங்கள் ஆகும்.
கட்டுமான பணிகளை விரைவாக செய்து முடிக்க வசதியாக சில சிமெண்டு நிறுவனங்கள் அதன் இறுதி இறுகும் நேரத்தை 230 நிமிடங்கள் முதல் 280 நிமிடங்கள் வரை இருக்கும்படி தயாரித்து வழங்குகின்றன.
Related Tags :
Next Story